Advertisment

எப்படி இருக்கிறது நயன்தாரா நடித்துள்ள படம்? - O2 விமர்சனம் !

o2 tamil movie review

Advertisment

மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் படங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகி உள்ள மற்றொரு நயன்தாரா படம். இதற்கு முன்பு ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள O2 படம் எந்த அளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிறவியிலேயே சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு ஆபரேஷன் செய்ய கையில் ஆக்சிஜன் சிலிண்டருடன் கொச்சிக்கு பஸ்ஸில் பயணிக்கிறார் இளம் விதவையான நயன்தாரா. அதே பஸ்ஸில் போதைப் பொருள் கடத்தும் ஒரு போலீஸ்காரர், ஒரு அரசியல்வாதி, ஜெயிலிலிருந்து ரிலீசான ஒரு கைதி, ஒரு இளம் காதல் ஜோடிகள், காதலியின் தந்தை ஆகியோர் பயணிக்கின்றனர். அப்பொழுது பலத்த மழை பெய்கிறது. இதனால் அந்தப் பேருந்து நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து விடுகிறது. பஸ்சுக்குள் இருக்கும் பயணிகள் மூச்சு விட முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு அந்த ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறது. இதனால் நயன்தாராவிடம் இருந்த அந்த ஆக்சிஜன் சிலிண்டரை அவர்கள் கைப்பற்ற போராடுகின்றனர். இதை அடுத்து தன் மகனைக் காப்பாற்ற நயன்தாரா என்ன செய்தார்? இவர்கள் அனைவரும் தப்பித்தார்களா இல்லையா என்பதே O2 படத்தின் மீதி கதை.

அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க கூடிய ஒரு கதையை பதட்டத்துடன் சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் விக்னேஷ். ஒரு வித்தியாசமான கதைக் கருவை யோசித்த இயக்குநர் ஏனோ திரைக்கதையில் அதே வித்தியாசத்தைக் கொடுக்கத் தவறி உள்ளார். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எளிதாக யூகிக்க கூடிய வகையில் திரைக்கதை அமைந்துள்ளதால் ஆங்காங்கே பல இடங்களில் அயர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல் ஒரு குறும்படத்திற்கு ஏற்ற சிறிய கதையாக இருப்பதால் அதை முழுநீளப் படமாக மாற்றுவதில் இயக்குநருக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே படத்தை முழுவதுமாக ரசிக்க முடியாமல் போகிறது. காட்சிகளுக்கு காட்சி அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பதட்டத்தை ஊட்டக்கூடிய இந்தக் கதையில் அந்தப் பதற்றம் சற்றுக் குறைவாக இருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. இருந்தும் நயன்தாராவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் குழந்தை யூடியூப் புகழ் ரித்விக்கும் ஆங்காங்கே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளனர்.

Advertisment

அதேபோல் போலீஸ்காரராக வரும் புதுமுக நடிகர் பர்த் நீலகண்டன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து ஆங்காங்கே திகில் கூட்டியுள்ளார். பல இடங்களில் ஸ்பீட் பிரேக்கர் போடும் இந்தக் கதையில் அவ்வப்போது ஆக்சிலேட்டரை கொடுத்து படத்துக்கு வேகம் கூட்ட முயற்சி செய்துள்ளார். அனுதாபம் ஆன நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார் ஹலோ கந்தசாமி. அதேபோல் பஸ் ஓட்டுநராக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ் எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக இறுதிக்கட்ட காட்சிகளில் நெகிழ்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். அரசியல்வாதியாக வரும் ஆர் என் ஆர் மனோகர் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளார். அதேபோல் இளம் காதல் ஜோடிகள், காதலியின் தந்தை ஆகியோரும் அவரவர் வேலையை அளவாக செய்துள்ளனர்.

படத்தின் நாயகியான நயன்தாரா அழகான இளம் விதவையாகவும், குழந்தையை காப்பாற்ற பொங்கி எழும் தாயாகவும் ஒருசேர சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி காட்சிகளுக்கு உயிர் கூட்டியுள்ளார். திரைக் கதைக்கு ஏற்றார் போல் அளவான நடிப்பை சரியாக வெளிப்படுத்தி சென்றுள்ளார். இம்மாதிரியான கதையில் நடிக்க அதிக ஸ்கோப் இருந்தும் அதை சரியாக நாயகிக்கு கொடுக்கத் தவறி உள்ளார் இயக்குநர் விக்னேஷ். யூடியூப் புகழ் குழந்தை ரித்விக் தான் நடித்தது அறிமுகப் படம் என்பது போல் இல்லாமல் சிறப்பான நடிப்பை, திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் இவருக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான நடிப்பு பார்ப்பவர் கண்களை கலங்கச் செய்து கைத்தட்டல் பெற்றுள்ளது. அந்தளவு எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி காட்சிக்கு உயிர் கூட்டியுள்ளார் குழந்தை ரித்விக்.

இப்படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுவது ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் கலை இயக்கம் ஆகும். ஒளிப்பதிவாளர் தமிழே அழகன், எடிட்டர் செல்வா ஆர் கே, கலை இயக்குனர் சதீஷ் குமார் ஆகியோர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் பேருந்தை சிறப்பான முறையில் திரையில் காட்டி காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளனர். திரைக்கதையை காட்டிலும் இவர்களின் பணி சிறப்பாக அமைந்து படத்தைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளது. விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை ஓகே.

இப்படியான ஒரு கதையில் சிறப்பான திரைக்கதை அமைக்க நல்ல வாய்ப்பு இருந்ததை இன்னும் கூட நன்றாகப் பயன்படுத்தி இருந்தால் இது ஒரு கவனிக்கக் கூடிய படமாக அமைந்திருக்கும்.

O2 - ஆக்சிஜன் குறைவு

moviereview
இதையும் படியுங்கள்
Subscribe