Skip to main content

மூன்று நாயகிகளோடு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதா? - “நித்தம் ஒரு வானம்” விமர்சனம்

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

Forever a sky review


சமீபகாலமாக பிராமிசிங்கான படங்களை கொடுத்து வரும் அசோக் செல்வன் மூன்று நாயகிகளோடு நடித்து வெளியாகியுள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா..?

 

கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்து கொண்டு எல்லா விஷயங்களிலும் மிகவும் பர்ஃபெக்டாக இருக்க ஆசைப்படும் அசோக் செல்வனுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் நன்றாக பேசிப் பழகும் அசோக் செல்வன் திருமணத்திற்கு முந்தைய நாள் அந்தப் பெண் தன் முதல் காதலை பற்றி அசோக் செல்வனிடம் கூறுகிறார். இந்த விஷயத்தை கேட்ட அசோக் செல்வன் அந்தப் பெண்ணுக்கு காதல் குறித்து அட்வைஸ் செய்கிறார்.

 

இதையடுத்து அந்தப் பெண் தன் காதலனோடு சென்று விடுகிறார். இதனால் மனமுடைந்து மன உளைச்சலுக்கு ஆளான அசோக் செல்வன் சைக்கியாட்ரிக் டாக்டர் அபிராமியிடம் செல்கிறார். அசோக் செல்வனின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவரை மாற்ற நினைக்கும் டாக்டர் அபிராமி அவரிடம் தான் எழுதிய ஒரு புத்தகத்தை கொடுத்து அதில் வரும் கதைகளைப் படிக்கச் சொல்லி கொடுக்கிறார். 

 

அதில் வரும் இரண்டு கதைகளை படிக்கும் அசோக் செல்வன் அந்த இரண்டு கதைகளின் கடைசி பக்கங்களும் கிழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து அந்த கிழிக்கப்பட்ட பக்கங்கள் குறித்து டாக்டர் அபிராமியிடம் அசோக் செல்வன் விளக்கம் கேட்க, அதற்கு அபிராமி அந்த இரு கதைகளின் மாந்தர்களைப் பற்றி தெரிய வேண்டுமானால் அவர்கள் இருக்கும் ஊரான கொல்கத்தாவிற்கும், சண்டிகருக்கும் சென்று பார்க்க அசோக் செல்வனிடம் கூறுகிறார். அசோக் செல்வனும் கதை மாந்தர்களைத் தேடி அந்தந்த ஊர்களுக்கு இன்னொரு நாயகி ரித்து வர்மாவுடன் செல்கிறார். போன இடத்தில் கதை மாந்தர்களை அவர் சந்தித்தாரா, இல்லையா?  என்பதே இப்படத்தின் மீதி கதை. 

Forever a sky review

ஒரு அழகான டிராவல் கதைக்குள் மூன்று அழகான காதல் கதைகளை உட்புகுத்தி கவித்துவமான அதேசமயம் ஜனரஞ்சகமான திரைக்கதையோடு ரசிக்கும் படியான திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் ரா.கார்த்திக். படம் ஆரம்பித்து ஜனரஞ்சகமான காட்சிகளோடு நகர்ந்து பிறகு கல்லூரி சம்பந்தப்பட்ட காதல் கதையோடு சற்று ஸ்லோவாக பயணித்து, பிறகு வேகமான அடாவடியான கிராமத்து கதையோடு முதல் பாதி முடிவடைகிறது. இரண்டாம் பாதி முழுவதும் டிராவல் நிறைந்த திரைக்கதையோடு படம் நகர்ந்து கடைசியில் நெகிழ்வான படமாக முடிந்துள்ளது. கல்லூரி சம்பந்தப்பட்ட கதையைக் காட்டிலும் அசோக் செல்வன் ரித்து வர்மா, அசோக் செல்வன் அபர்ணா பாலமுரளி சம்பந்தப்பட்ட கதைகள் மிகவும் ரசிக்கும்படி அமைந்திருந்து படத்தை கரை சேர்த்துள்ளது. 

 

கார்ப்பரேட்டில் வேலை செய்யும் இளைஞன், ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி, ரவுடித்தனம் செய்யும் காலேஜ் ஸ்டூடண்ட் என மூன்று விதமான கதாபாத்திரங்களையும் வெவ்வேறு விதமான நடிப்பு மூலம் சிறப்பாக செய்துள்ளார் நாயகன் அசோக் செல்வன். ஒரே நேரத்தில் ரக்கட் பாயாகவும், சாக்லேட் பாயாகவும் நடித்து ரசிகைகளின் மனங்களை கவர்ந்துள்ளார். அதேபோல் முந்தைய படங்கள் போல் கதை தேர்விலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருந்தும் அவரது நடிப்பில் ஆங்காங்கே மிஸ்டர் பீன் தென்படுவதை தவிர்க்க முடியவில்லை. அசோக் செல்வனுடன் மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

 

ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகிய மூன்று கதாநாயகிகளும் அவர் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். அதிலும் குறிப்பாக அபர்ணா பாலமுரளி இவர்கள் இருவரை காட்டிலும் மேலோங்கி காணப்பட்டுள்ளார். இவரது துடுக்கான நடிப்பும் மிடுக்கான தோற்றமும் காட்சிகளுக்கு பலம் சேர்த்து உள்ளது. அதேபோல் ரித்து வர்மாவும் பப்லியான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்துள்ளார். கல்லூரி கதையில் நாயகியாக வரும் சிவாத்மிகா காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்து கவர்ந்துள்ளார். இவருக்கும் அசோக் செல்வனுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. காட்சிகளோடு நன்றாக ஒன்றி நடித்து கவனம் பெற்றுள்ளார்.

 

சிறிது காட்சிகளிலேயே வந்தாலும் நடிகை அபிராமி, ஷிவதா, ஈஷா ரெப்பா, ஆகியோர் அவரவருக்கான வேலையை அழகாக செய்துவிட்டு சென்றுள்ளனர். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ஜீவா காட்சிகளுக்கு வலு சேர்த்து விட்டு சென்றுள்ளார். இவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. இவர்களோடு நடித்துள்ள படவா கோபி, சௌந்தர்யா நஞ்சுண்டன் உட்பட பலர் அவரவருக்கான வேலையை நிறைவாக செய்துள்ளனர்.

 

கோபி சுந்தர் இசையில் மெலடி பாடல்கள் மனதை வருடுகின்றன. தரண் பின்னணி இசை படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து காட்சிகளுக்கு உயிர் ஊட்டி உள்ளது. காதல் காட்சிகளில் சிறப்பான பின்னணி இசை கொடுத்து ரசிகர்களை ரசிக வைத்துள்ளார். அதேபோல் விது ஐயன்னாவின் ஒளிப்பதிவில் இந்தியாவின் பெரும்பகுதி சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ட்ராவல் காட்சிகள் மற்றும் படத்தின் முக்கிய காட்சி அமைப்புகள் தரமாக அமைந்து பார்ப்பவர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட் கொடுத்து உள்ளது. 

 

மூன்று வெவ்வேறு விதமான காதல் கதைகளை ஒரு டிராவல் படமாக மாற்றி அதை கவித்துவமான திரைக்கதை மூலம் எந்த ஒரு காம்ப்ரமைசும் இன்றி சிறப்பாக கொடுத்து ரசிக்க வைத்துள்ள இயக்குநர் கல்லூரி சம்பந்தப்பட்ட கதையை மட்டும் இன்னும் கூட சிறப்பாக கையாண்டு இருக்கலாம்.

 

நித்தம் ஒரு வானம் - பழைய ஃபார்முலாவில் புதிய அனுபவம்!

 

சார்ந்த செய்திகள்