Skip to main content

சூர்யா - செல்வா... என்ன ஆச்சு? என்.ஜி.கே (NGK) - விமர்சனம் 

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

ஆறு வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ஆனால் இடையில் அவரது படங்கள் குறித்த பேச்சு, விவாதம், கொண்டாட்டம் சமூக ஊடகங்களில் நிகழ்ந்துகொண்டேதான் இருந்தன. இந்த இடைவெளியில் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மாறியிருக்கிறது. அந்த இடைவெளியை நிறப்புகிறதா என்.ஜி.கே (NGK) என்ற நந்த கோபாலன் குமரன்? சூர்யா - செல்வராகவன் என்ற கூட்டணி ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி இருக்கிறதா?

 

suriya bala singh



எம்.டெக். (M.Tech.,) என்விரான்மெண்டல் சயின்ஸ் படித்துவிட்டு சில ஆண்டுகள் அதிக சம்பளம் தரும் வேலை செய்து அதில் ஆத்ம திருப்தி இல்லாமல் வெளியேறி வந்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் இயற்கை விவசாயம் செய்துகொண்டே தன்னால் முடிந்த சமூக சேவைகளை செய்யும் எனர்ஜடிக் இளைஞன் என்.ஜி.கே என்ற நந்த கோபாலன் குமரன். ஒரு குடிமகனாக தான் எவ்வளவு முயன்றும் செய்ய முடியாத சில உதவிகளை அரசியலில் அடிமட்டத்தில் இருப்பவரும் கூட எளிதில் சாதிக்க முடிகிறது என்பதை பார்க்கும் அவர் ஒரு கட்டத்தில் அந்த அரசியல் தன்னையே குறிவைக்கும்போது அரசியலில் இறங்க முடிவு செய்கிறார். ஒரு படித்த இளைஞன், அரசியலில் இறங்கி சந்திக்கும் சோதனைகள் என்ன செய்ய முடிந்த சாதனைகள் என்ன என்பதுதான் என்.ஜி.கே.


விவசாயம் + அரசியல் என சமீப கால தமிழ் சினிமா ட்ரெண்டில் கொஞ்சம் செல்வராகவனின் ஃப்ளேவர் சேர்ந்திருக்கிறது. அரசியலில் இறங்கியவுடன் NGK சந்திக்கும் அதிர்ச்சிகள், கட்சியில் சேரும்பொழுது அங்கு நடத்தப்படும் நாடகங்கள், பொய்கள் ஆகியவை நமக்கும் நையாண்டி நெத்தியடி. கட்சியில் சேர்ந்ததிலிருந்து ஏணியில் விறுவிறுவென ஏறுகிறது NGKவின் அரசியல் வாழ்க்கையும்  திரைக்கதையும். ஆனால், ஒரு கட்டத்தில் அவர் எதற்காக அரசியலுக்கு வந்தார், எதை நோக்கி செல்கிறார் என்ற கேள்வியும் குழப்பமும் நமக்கு ஏற்படுகிறது. அது செல்வராகவனுக்கும் இருந்திருக்குமோ என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. சூர்யா - பாலாசிங் காம்பினேஷனில் வரும் சில காட்சிகளிலும் வசனங்களிலும் பாடல்களுக்கு மொத்த மக்கள் கூட்டமும் ஆடுவதிலும் செல்வராகவன் ஸ்டைல். ஆனால், திடீரென தோன்றும் கனவு ஃபாரீன் பாடல், பல மிக மேலோட்டமான காட்சிகள், பாதிப்பு ஏற்படுத்தாத பாத்திரங்கள் என அதிர்ச்சியை கொடுக்கிறார் இயக்குனர்.

  sai pallavi



சமீப காலங்களில் கட்சிகளில் கார்ப்பரேட் ஆலோசகர்களின் பங்கு என்னவாக இருக்கிறது, அவர்கள் கட்சிகளில் செலுத்தும் ஆதிக்கம் போன்றவற்றை ரகுல் ப்ரீத்தின் காட்சிகள் சொல்கின்றன. சில இடங்களில் மிகைப்படுத்தலும் இருக்கின்றது. என்னதான் படித்த புத்திசாலி இளைஞனாக இருந்தாலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தொண்டராக கட்சியில் இணைந்த NGK, சர சரவென தமிழ்நாட்டின் மொத்த கவனத்தையும் ஈர்ப்பது, பெரிய தலைவனாக வளர்வது நம்பும்படி காட்சிப்படுத்தப்படவில்லை. சமூக சேவகராக இருக்கும்போதும் அரசியலில் நுழைந்த பின்னரும் அவரின் செயல்பாடுகள் எல்லாம் வெறும் வசனங்களாகவும் ஓரிரு காட்சிகளாகவும் இருப்பது திரைக்கதையை சுவாரசிஸ்யத்தை வெகுவாக குறைக்கிறது.


சூர்யாவுக்கெனவே எழுதப்பட்டதுபோன்ற பாத்திரம். இயற்கை விவசாயம் செய்யும் இளைஞர், காதல் ததுந்தும் புதுமாப்பிள்ளை, எம்.எல்.ஏவின் உண்மைத் தொண்டன் என அத்தனை பரிமாணங்களிலும் அசத்துகிறார் சூர்யா. எம்.எல்.ஏ. இளவரசுவிடம் பணிவிடை செய்ய நேரும்போது ஏற்படும் அதிர்ச்சி, குழப்பம் என கலவையான உணர்வுகளை கரெக்டாக வெளிப்படுத்தி நடிப்பின் முதிர்ச்சியை நிறுவியிருக்கிறார். மேடைக்காட்சிகளில் சூர்யாவின் பெர்ஃபார்மன்ஸ் அவரது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் மொமண்ட். சாய் பல்லவி அழகான மனைவி, செல்லமாக கோபப்படுகிறார், சண்டை போடுகிறார். ஆனால், பெரிய முக்கியத்துவமில்லாமல் இருக்கிறது. அரசியல் ஆலோசகராக கார்ப்ரேட் கன்சல்டன்டாக கடுமையான முகம் காட்டும் ரகுல், நாயகிகளின் நியதிப்படி சூர்யா மீது ஆசை கொள்கிறார். ஒரு கேலிக்குரிய தொண்டராக பாலாசிங்கின் பாத்திரம் மனதில் நிற்கிறது. அதில் அவரது நடிப்பு அனுபவத்தால் மிளிர்கிறது. எம்.எல்.ஏவாக இளவரசு கலவையான கலகல நடிப்பைக் கொடுத்து ரசிக்கவைக்கிறார். பொன்வண்ணன், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய் ஆகியோர் முழுமையாக பயன்படுத்தப்படாத உணர்வு.

  rakul preet singh



யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் சிறப்பு. பின்னணி இசை, வித்தியாசமான ரசனையில் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் அது வொர்க்-அவுட் ஆகியுள்ளது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கேற்ற வண்ணங்களில் விளையாடுகிறது. கனமான கதைகளை, பாத்திரங்களை ரசிக்கத் தயாராகிவிட்ட ரசிகர்களுக்கு தன் பாணியிலிருந்து மாறி கொஞ்சம் கமர்ஷியலாக எடுத்து செல்வராகவன் எடுத்திருக்கும் இந்தப் படம் சற்றே ஏமாற்றம்தான். சில நல்ல காட்சிகளும் நடிகர்களின் நடிப்பும் படத்துக்கு பலமாக இருக்கின்றன.       
            

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“செல்வராகவனை இயக்குவேன் என நினைத்ததில்லை” - தனுஷ்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
selvaraghavan look from dhanush 50 raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் இப்படத்தில் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் இப்படம் தனுஷின் கனவு படம் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு அவரது கதாபாத்திர லுக் போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்தது. இந்த நிலையில் தற்போது செல்வராகவன் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. புது லுக்கில் செல்வராகவன் இடம்பெற்றிருக்கிறார். இதுவரையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் பல படங்கள் நடித்த நிலையில் இப்படத்தில் செல்வராகவனை தனுஷ் இயக்கியுள்ளார். செல்வராகவனை இயக்குவது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்களை ஒரு நாள் இயக்குவேன் என்று நினைத்ததில்லை சார்” என குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

ராயன் - விளக்கம் கொடுத்து சஸ்பென்ஸ் உடைத்த செல்வராகவன்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
dhanush raayan update by selvaraghavan

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக, அஜித்தை வைத்து செல்வராகவன் இயக்கவிருந்த காசிமேடு பட கதையைத் தான் தனுஷ், தற்போது ராயன் என்ற தலைப்பில் சிறு மாற்றங்கள் செய்து இயக்கி வருவதாக செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த செய்திக்கு விளக்கம் அளிக்கும் வகையில் செல்வராகவன் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நண்பர்களே, ராயன் படத்திற்கு நான் ஸ்கிரிப்ட் எழுதியதாக செய்திகள் வந்துள்ளன. ராயன் பட ஸ்கிரிப்ட் அல்லது ஸ்கிரிப்ட் பணிகளிலும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். ராயன் படம் தனுஷின் கனவு ஸ்கிரிப்ட், அதனால் அவரது படமாக எடுத்துள்ளார். இந்த படத்தில் நான் நடிகனாக மட்டுமே இருந்துள்ளேன்” என்றார். 

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் செல்வராகவன் இப்படத்தில் நடிப்பதை சொல்லி உறுதிப்படுத்தியுள்ளார்.