Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கல...! நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்   

தமிழ் திரைப்படங்களின் கதைகளில் நெடுநாட்களாக இடம் பெறும் முக்கிய உறவு 'நட்பு'. ஆரம்பத்தில் மிகவும் புனிதப்படுத்தப்பட்டு படமாக்கப்பட்ட நட்பு, சமீப காலங்களில் அதன் நிறை குறை, துரோகம் உள்ளிட்டவற்றோடு இயல்பாகப் பேசப்படுகிறது. அந்த வரிசையில் ஒரு ஜாலியான, சில நேரம் ஒருவரை ஒருவர் காலியும் கேலியும் செய்யும் சமகால நண்பர்களின் கதை இயக்குனர் சிவா அரவிந்த்தின் 'நட்புனா என்னானு தெரியுமா?'

 

natpuna enna nu theriyuma'ஒரே நேரத்தில் ஒரே வயிற்றில் பிறந்தால் ட்வின்ஸ், வேறு வேறு அம்மாவுக்குப் பிறந்ததால் ஃப்ரெண்ட்ஸ்' என்று பிறந்ததிலிருந்தே ஒன்றாகவே சுற்றும், ஒன்றாகவே படிக்கும் (?), ஒன்றாகவே இருக்கும் நண்பர்கள் சிவா, ராஜு, மணியாக கவின், ராஜு, அருண் ராஜா காமராஜ். பத்தாவதுடன் படிப்பை நிறுத்திவிட்டு வெட்டியாக சுற்றும் இவர்களுக்கு திடீர் ஞானம் வந்து ஒரு பிசினஸ் தொடங்குகிறார்கள். இவர்களது கலகலப்பான உழைப்பால் பிஸினஸும் பிக்-அப் ஆகிறது. அந்த நேரத்தில் நண்பர்களில் ஒருவருக்கு ரம்யா நம்பீசன் மீது காதல் வருகிறது. நட்புக்கிடையில் காதல் வந்தால் என்ன நடக்கும்? எல்லாம் நடக்கிறது. என்ன பிரச்சனைகள் வந்தன, எப்படி தீர்ந்தன என்பதை காமெடி தூக்கலாகப் போட்டு நட்பு கொஞ்சம் காதல் கொஞ்சம் சேர்த்து சொல்லியிருக்கிறது 'நட்புனா என்னானு தெரியுமா'.


நண்பனை விட்டுக்கொடுக்காமல், நண்பனுக்காக செயினை அத்துக்கொடுக்கும், நண்பனின் காதலுக்காக அடி வாங்கும், நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் மிக நல்ல நட்புகளையே படங்களில் அதிகமாகப் பார்த்துப் பழகிய நமக்கு சின்னச் சின்ன சுயநலங்கள் சேர்ந்த, அடிக்கடி சண்டை போடும், சின்னச் சின்னதாய் ஏமாற்றிக்கொள்ளும் இயல்பான நட்பை படமாகப் பார்ப்பது ஒரு புதிய உணர்வு. அதே நேரம் நண்பன் செய்யும் ஒரு ஏமாற்று வேலையை பெரிய துரோகமாகக் கருதி அப்படியே நிரந்தரமாகப் பிரிந்து போகும் அதீத உணர்ச்சிவயப்படுதலெல்லாம் இல்லாமல், 'செஞ்சது செஞ்சுட்ட போய்த் தொல' என்று கொடுத்து வாங்கும் நட்பு இது. இந்த இயல்புத்தன்மையே படத்தை நமக்கு நெருக்கமாக்குகிறது.

  kavin ramya nambeesanதோற்றத்திலும் செயல்பாடுகளிலும் ஸ்மார்ட்டான கவின், காதல் தேடலில் பெண்களைக் கண்டால் அசடு வடியும் ராஜு, விவரம் தெரியாத வினயமில்லாத மணி என நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். மூன்று பேருக்கும் சமமான முக்கியத்துவம் இருப்பது நன்று. படம் ஆரம்பித்து முதல் அரை மணி நேரம் மிக மெதுவாக எந்த முக்கியத்துவமும் சீரியஸ்னஸும் இல்லாமல் கொஞ்சம் அலை பாய்ந்து நகரும் கதை நண்பர்களிடையே பிரச்னை வரும் இடத்தில் நல்ல உயரம் சென்று உட்கார்கிறது. அதற்குப் பிறகு ஒவ்வொரு காட்சியுமே 'கும்தலக்கடி கலகலகல' (படத்தின் பின்னணி இசை பாணியில் சொன்னால்) தான்.


வேட்டையனாக தொலைக்காட்சி ரசிகர்களிடையே புகழ் பெற்ற கவினுக்கு நாயகனாக இது முதல் படம். குறையேதுமில்லாமல் முறையாக நடித்துள்ளார். ராஜு, நண்பராகவும் கிட்டத்தட்ட நாயகராகவும் ஒரு நல்ல அறிமுகம். சில இடங்களில் கொஞ்சம் அதிகமான எக்ஸ்ப்ரஷன்ஸ். அப்பாவி நண்பராக அருண்ராஜா, அவ்வப்போது திரையரங்கை அதிர வைக்கிறார். கிரிக்கெட் பால், ஸ்விம்மிங் பூல், மல்லிகைப் பூ  என நண்பர்களைத் திட்ட அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் அவரது குரலில், அந்த சூழலில் செம்ம சிரிப்பு... நாயகி ரம்யா நம்பீசன் ஹெல்த்தியான ஹீரோயின். காதலன் தந்தை இருவருக்கிடையில் சிக்கித் தவிக்கும்போது நன்றாக நடித்துமுள்ளார். இளவரசு, அழகம்பெருமாள் இருவருக்கும் கவனிக்கத்தக்க பாத்திரங்கள், அழகாகச் செய்திருக்கிறார்கள். மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் இருவரும் எக்ஸ்டரா ஃபிட்டிங் போன்ற உணர்வு, பெரிதாக உதவவில்லை.

  ilavarasuகதை தொடங்க எடுத்துக்கொள்ளும் நேரம் சற்றே சோதிக்கிறது. படத்தில் ஓரிரு காட்சிகள் 'எதுக்கு' என்று கேட்க வைக்கின்றன. உதாரணம்... அந்த ஓய்வு பெற்ற நீதிபதி மகள் திருமணத்தை நடத்த இவர்களிடம் வரும் காட்சி. காட்சிக்குள்ளேயே சில முரண்கள். இதையெல்லாம் தாண்டி படத்தின் முக்கிய கட்டம் தொடங்கும்போது கதையோடு காமெடியும் ஃபார்முக்கு வருகிறது. 'இப்படி இருக்கும்னு எதிர்பார்கல' என்று சொல்ல வைக்கிறது. தரணின் இசையில் ஜெயச்சந்திர ஹாஷ்மி, மிர்ச்சி விஜய்யின் பாடல் வரிகள் இளமை துள்ளலுடன் இருக்கின்றன. 'அந்தர் பல்டி' பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. யுவாவின் ஒளிப்பதிவு, சின்ன பட்ஜெட்டில் செட்டுகளுக்குள் எடுக்கப்பட்ட படத்தை கலர்ஃபுல்லாகக் காட்டுவதில் ஓரளவு வெற்றிபெற்றுள்ளது. நிர்மலின் படத்தொகுப்பு சீராக இருக்கிறது.

முதல் படத்தை ஜாலியான ஃப்ரெண்ட்ஷிப் படமாகக் கொடுத்து காமெடியால் கரை சேர்ந்துவிட்டார் சிவா அரவிந்த்.                             

               

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்