Advertisment

மருத்துவத் தேவை நிறைவேறியதா? - ‘நாடு’ விமர்சனம்!

naadu movie review

Advertisment

நம் நாடு இத்தனை ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிகள் பெற்ற நிலையிலும் இன்னமும் பல்வேறு மலைக் கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழல் இன்றளவும் நிலவத்தான் செய்கிறது. மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு மலைக் கிராமத்தில் உள்ளமக்கள் சின்ன சின்ன உடல் நலக் கோளாறுகளுக்கு கூட சரியான மருத்துவம் கிடைக்காமல் எந்த அளவுக்கு சிரமப்படுகிறார்கள் என்பதை நாடு படம் மூலம் நம் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார் ‘எங்கேயும் எப்போதும்’ படப்புகழ் இயக்குநர் சரவணன். சில படங்களால் சருக்கல்களைச் சந்தித்த இயக்குநர் சரவணன் நாடு படம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றாரா, இல்லையா?

பழங்குடி மக்கள் அதிகம் வாழும் கொல்லிமலையில் அமைந்துள்ள தேவநாடு என்ற கிராமத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பணிபுரிய எந்த டாக்டரும் முன் வரவில்லை. அப்படியே அவர்கள் வந்தாலும் உடனடியாக டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு சென்று விடுகின்றனர். அடிப்படை வசதிகள் கொஞ்சம் கூட இல்லாத அந்த மலை கிராமத்தில் எந்த மருத்துவரும் சேவை செய்ய முன்வராத காரணத்தினால், பிரச்சனை கலெக்டர் அருள் தாஸ் வரை சென்று விடுகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டும் முயற்சியில் தானே இதற்கு முழு பொறுப்பு ஏற்று தன் மகளானடாக்டர் மகிமா நம்பியாரை அந்த கிராமத்திற்கு மருத்துவம் பார்க்க அனுப்புகிறார் கலெக்டர் அருள் தாஸ்.

அந்த கிராமத்துக்கு வரும் டாக்டர் மகிமா நம்பியாரை நல்லபடியாக கவனித்துக் கொண்டு அவருக்கு போதுமான வசதிகளை ஊர் மக்கள் செய்து கொடுத்து மகிமாவை அந்த ஊரை விட்டு செல்லவிடாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது என ஊர் மக்களிடம் கலெக்டர் தெரிவிக்க, நாயகன் தர்ஷன் உள்ளிட்ட ஊர் மக்கள் மருத்துவர் மகிமாவை அந்த கிராமத்திலேயே எப்படியாவது தங்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கிராம மக்கள் எடுக்கும் முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றார்களா, இல்லையா? மகிமா இந்த ஊரிலேயே இருந்து மருத்துவம் பார்த்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

Advertisment

எங்கேயும் எப்போதும் வெற்றிக்குப் பிறகு நீண்ட நாட்களாக அதுபோல் ஒரு வெற்றி படத்தை கொடுக்கும் முயற்சியில் பல்வேறு சருக்கல்களை சந்தித்த இயக்குநர் சரவணன், தற்பொழுது நாடு படம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கிறார். மலைக் கிராமம் மலைவாழ் மக்களின் வாழ்வியல், அவர்களுக்குள் இருக்கும் ஏக்கம், இன்பம், சோகம், விசுவாசம் என அந்த கிராம மக்களின் வலி வேதனைகளை அப்படியே கண்முன் நிறுத்தி அதை அழுத்தமாகவும் ஆழமாகவும் நெகிழ்ச்சியாக ரசிக்கும்படி கொடுத்து கைதட்டல் பெற்றிருக்கிறார். இது ஒரு சிறிய கதையாக இருந்தாலும் இதற்கான திரைக்கதையை எந்த ஒரு காம்ப்ரமைசும் இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சிறப்பாக காட்சிப்படுத்தி அதையும் ரசிக்கும்படி கொடுத்து மீண்டும் ஒருமுறை பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.

படத்தில் பல இடங்களில் மனதை கணக்க செய்து கண்கலங்க வைக்கும் காட்சிகள் இருந்தாலும் அதனுடன் கலகலப்பான சில பல காட்சிகளையும் வைத்து கலகலப்பாகவும், கலங்கடித்தும் கதையை நகர்த்தி தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். ஒரு புதுமையான சிறிய கதையை வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட கிளிஷேவான காட்சிகள் எங்கும் இல்லாமல் பார்த்துக்கொண்டு குறிப்பாக நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் நாம் எதிர்பார்க்கும்படி இல்லாமல் ஒவ்வொரு காட்சியும் பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக்கொண்டு படத்தை கரை சேர்த்திருக்கிறார். இந்த 21ம் நூற்றாண்டில் இன்னமும் இப்படியான கிராமங்கள் நம் நாட்டில் இருக்கிறது என்பதை ஆணித்தரமாக வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார். அங்கு நடக்கும் அவலங்களையும் பாரபட்சம் இன்றி காட்சிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

பிக் பாஸ் புகழ் நாயகன் தர்ஷன் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதற்கான நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பும், அமைதியான வசன உச்சரிப்பும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. தனக்கு கொடுத்த ஸ்பேசில் எந்த ஒரு இடத்திலும் தேவையில்லாத நடிப்பை வெளிப்படுத்தாமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார். நாயகி மகிமா நம்பியார் வழக்கமான நாயகியாக இல்லாமல் இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். தனக்கு என்ன வருமோ அதை சரியாக செய்து எந்தெந்த இடங்களுக்கு எந்தெந்த வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ அதை நிறைவாக செய்து தானும் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

முக்கியமாக படத்தில் காதல் காட்சிகள் இல்லாதது அவருக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. ஊர் தலைவராக வரும் சிங்கம் புலி சில இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் அதை சரிவர செய்து ரசிக்க வைத்துள்ளார். கலெக்டராக வரும் அருள்தாஸ் இந்த படத்தில் நல்ல அரசு அதிகாரியாக நடித்திருக்கிறார். பொதுவாக வில்லன் வேடங்களிலேயே நடிக்கும் அவர் இந்த படத்தில் ஒரு நிறைவான குணச்சித்திர கதாபாத்திரத்தில்நடித்து மனதில் பதிகிறார். மகிமாவின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தர்ஷனின் அப்பாவாக நடித்திருக்கும் மறைந்த ஆர்.எஸ். சிவாஜி தன் அனுபவ நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாகவும் செய்துவிட்டு சென்றிருக்கிறார். தர்ஷனின் நண்பராக நடித்திருக்கும் நடிகரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஆங்காங்கே சிரிக்க வைத்துள்ளார்.

பாடல்களை காட்டிலும் சத்யாவின் பின்னணி இசை இந்த படத்திற்கு உயிரூட்டி இருக்கிறது. அழுத்தமான கலங்க வைக்கும் காட்சிகளில் அழகான இசையை கொடுத்து கலங்கடித்துள்ளார். சக்திவேலின் ஒளிப்பதிவில் மழையும் அதை சுற்றி உள்ள கிராமங்களும் அழகாகவும் எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாட்டில் உள்ள அனைவருக்கும் அடிப்படை வசதிகள் என்ற மிக அவசியமான ஒரு முக்கியமான பிரச்சனையை கையில் எடுத்த இயக்குநர் சரவணன் அதை ஒரு கதைக் கருவாக வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு எளிமையாகவும் அதேசமயம் எதார்த்தமாகவும் திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும் படியும், கலங்கடிக்கும் படியும், மனதில் ஆழமாகப் பதியும் படியும் கொடுத்து படத்தை கரை சேர்த்தது மட்டுமல்லாமல் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று கைதட்டலும் பெற்றிருக்கிறார்.

நாடு - அவசியம்!

Naadu movie moviereview
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe