Skip to main content

மருத்துவத் தேவை நிறைவேறியதா? - ‘நாடு’ விமர்சனம்!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

naadu movie review

 

நம் நாடு இத்தனை ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிகள் பெற்ற நிலையிலும் இன்னமும் பல்வேறு மலைக் கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழல் இன்றளவும் நிலவத்தான் செய்கிறது. மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு மலைக் கிராமத்தில் உள்ள மக்கள் சின்ன சின்ன உடல் நலக் கோளாறுகளுக்கு கூட சரியான மருத்துவம் கிடைக்காமல் எந்த அளவுக்கு சிரமப்படுகிறார்கள் என்பதை நாடு படம் மூலம் நம் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார் ‘எங்கேயும் எப்போதும்’ படப் புகழ் இயக்குநர் சரவணன். சில படங்களால் சருக்கல்களைச் சந்தித்த இயக்குநர் சரவணன் நாடு படம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றாரா, இல்லையா?

 

பழங்குடி மக்கள் அதிகம் வாழும் கொல்லிமலையில் அமைந்துள்ள தேவநாடு என்ற கிராமத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பணிபுரிய எந்த டாக்டரும் முன் வரவில்லை. அப்படியே அவர்கள் வந்தாலும் உடனடியாக டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு சென்று விடுகின்றனர். அடிப்படை வசதிகள் கொஞ்சம் கூட இல்லாத அந்த மலை கிராமத்தில் எந்த மருத்துவரும் சேவை செய்ய முன்வராத காரணத்தினால், பிரச்சனை கலெக்டர் அருள் தாஸ் வரை சென்று விடுகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டும் முயற்சியில் தானே இதற்கு முழு பொறுப்பு ஏற்று தன் மகளான டாக்டர் மகிமா நம்பியாரை அந்த கிராமத்திற்கு மருத்துவம் பார்க்க அனுப்புகிறார் கலெக்டர் அருள் தாஸ்.

 

அந்த கிராமத்துக்கு வரும் டாக்டர் மகிமா நம்பியாரை நல்லபடியாக கவனித்துக் கொண்டு அவருக்கு போதுமான வசதிகளை ஊர் மக்கள் செய்து கொடுத்து மகிமாவை அந்த ஊரை விட்டு செல்லவிடாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது என ஊர் மக்களிடம் கலெக்டர் தெரிவிக்க, நாயகன் தர்ஷன் உள்ளிட்ட ஊர் மக்கள் மருத்துவர் மகிமாவை அந்த கிராமத்திலேயே எப்படியாவது தங்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கிராம மக்கள் எடுக்கும் முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றார்களா, இல்லையா? மகிமா இந்த ஊரிலேயே இருந்து மருத்துவம் பார்த்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

 

எங்கேயும் எப்போதும் வெற்றிக்குப் பிறகு நீண்ட நாட்களாக அதுபோல் ஒரு வெற்றி படத்தை கொடுக்கும் முயற்சியில் பல்வேறு சருக்கல்களை சந்தித்த இயக்குநர் சரவணன், தற்பொழுது நாடு படம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கிறார். மலைக் கிராமம் மலைவாழ் மக்களின் வாழ்வியல், அவர்களுக்குள் இருக்கும் ஏக்கம், இன்பம், சோகம், விசுவாசம் என அந்த கிராம மக்களின் வலி வேதனைகளை அப்படியே கண்முன் நிறுத்தி அதை அழுத்தமாகவும் ஆழமாகவும் நெகிழ்ச்சியாக ரசிக்கும்படி கொடுத்து கைதட்டல் பெற்றிருக்கிறார். இது ஒரு சிறிய கதையாக இருந்தாலும் இதற்கான திரைக்கதையை எந்த ஒரு காம்ப்ரமைசும் இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சிறப்பாக காட்சிப்படுத்தி அதையும் ரசிக்கும்படி கொடுத்து மீண்டும் ஒருமுறை பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.

 

படத்தில் பல இடங்களில் மனதை கணக்க செய்து கண்கலங்க வைக்கும் காட்சிகள் இருந்தாலும் அதனுடன் கலகலப்பான சில பல காட்சிகளையும் வைத்து கலகலப்பாகவும், கலங்கடித்தும் கதையை நகர்த்தி தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். ஒரு புதுமையான சிறிய கதையை வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட கிளிஷேவான காட்சிகள் எங்கும் இல்லாமல் பார்த்துக்கொண்டு குறிப்பாக நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் நாம் எதிர்பார்க்கும்படி இல்லாமல் ஒவ்வொரு காட்சியும் பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக்கொண்டு படத்தை கரை சேர்த்திருக்கிறார். இந்த 21ம் நூற்றாண்டில் இன்னமும் இப்படியான கிராமங்கள் நம் நாட்டில் இருக்கிறது என்பதை ஆணித்தரமாக வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார். அங்கு நடக்கும் அவலங்களையும் பாரபட்சம் இன்றி காட்சிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். 

 

பிக் பாஸ் புகழ் நாயகன் தர்ஷன் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதற்கான நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பும், அமைதியான வசன உச்சரிப்பும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. தனக்கு கொடுத்த ஸ்பேசில் எந்த ஒரு இடத்திலும் தேவையில்லாத நடிப்பை வெளிப்படுத்தாமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார். நாயகி மகிமா நம்பியார் வழக்கமான நாயகியாக இல்லாமல் இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். தனக்கு என்ன வருமோ அதை சரியாக செய்து எந்தெந்த இடங்களுக்கு எந்தெந்த வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ அதை நிறைவாக செய்து தானும் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

 

முக்கியமாக படத்தில் காதல் காட்சிகள் இல்லாதது அவருக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. ஊர் தலைவராக வரும் சிங்கம் புலி சில இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் அதை சரிவர செய்து ரசிக்க வைத்துள்ளார். கலெக்டராக வரும் அருள்தாஸ் இந்த படத்தில் நல்ல அரசு அதிகாரியாக நடித்திருக்கிறார். பொதுவாக வில்லன் வேடங்களிலேயே நடிக்கும் அவர் இந்த படத்தில் ஒரு நிறைவான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மனதில் பதிகிறார். மகிமாவின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தர்ஷனின் அப்பாவாக நடித்திருக்கும் மறைந்த ஆர்.எஸ். சிவாஜி தன் அனுபவ நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாகவும் செய்துவிட்டு சென்றிருக்கிறார். தர்ஷனின் நண்பராக நடித்திருக்கும் நடிகரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஆங்காங்கே சிரிக்க வைத்துள்ளார். 

 

பாடல்களை காட்டிலும் சத்யாவின் பின்னணி இசை இந்த படத்திற்கு உயிரூட்டி இருக்கிறது. அழுத்தமான கலங்க வைக்கும் காட்சிகளில் அழகான இசையை கொடுத்து கலங்கடித்துள்ளார். சக்திவேலின் ஒளிப்பதிவில் மழையும் அதை சுற்றி உள்ள கிராமங்களும் அழகாகவும் எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாட்டில் உள்ள அனைவருக்கும் அடிப்படை வசதிகள் என்ற மிக அவசியமான ஒரு முக்கியமான பிரச்சனையை கையில் எடுத்த இயக்குநர் சரவணன் அதை ஒரு கதைக் கருவாக வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு எளிமையாகவும் அதேசமயம் எதார்த்தமாகவும் திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும் படியும், கலங்கடிக்கும் படியும், மனதில் ஆழமாகப் பதியும் படியும் கொடுத்து படத்தை கரை சேர்த்தது மட்டுமல்லாமல் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று கைதட்டலும் பெற்றிருக்கிறார்.

 

நாடு - அவசியம்!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பார்த்திபனின் புதிய முயற்சி கை கொடுத்ததா? இல்லையா? - டீன்ஸ் விமர்சனம்

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Teenz movie Review

வழக்கமாக எப்பொழுதும் வித்தியாசமான திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இந்த முறையும் அதேபோல் ஒரு புதிய முயற்சியை டீன்ஸ் படம் மூலம் கொடுத்து இருக்கிறார். 13 சிறுவர்களை வைத்துக்கொண்டு அப்படி என்ன புது முயற்சியை கையில் எடுத்திருக்கிறார் பார்த்திபன் என்பதை பார்ப்போம்.

பள்ளியில் படிக்கும் சிறுவர்கள், வெளிநாடுகளைப் போல் நம் நாட்டிலும் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் எனத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அதனை நாமே கையில் எடுக்க வேண்டும் என எண்ணும் அந்தச் சிறுவர்கள் அவர்களுக்குள் உள்ள ஒரு பெண்ணின் சொந்த கிராமத்திற்கு ஸ்கூலை கட் அடித்து விட்டு செல்கின்றனர். அந்த ஊரில் ஒரு பேய் இருப்பதாக அந்தப் பெண் சொல்ல அந்தப் பேயை பார்த்து விட வேண்டும் என முடிவெடுத்த 13 சிறுவர்கள் பாதை மாறி ஒரு காட்டுப் பகுதிக்கு சென்று விடுகின்றனர். போன இடத்தில் ஒவ்வொரு சிறுவர்களாக தானாகவே அமானுஷ்யமாக காணாமல் போகின்றனர். இதனால் மற்ற சிறுவர்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியும், பதற்றமும் ஆகி அலறுகின்றனர். தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அனைவரும் தப்பி ஓடுகின்றனர். வழியில் மீண்டும் ஒருவர் பின் ஒருவராக அமானுஷ்ய முறையில் காணாமல் செல்ல இவர்களுக்கு உதவ பார்த்திபன் வருகிறார். இதையடுத்து அமானுஷ்யமாக காணாமல் போன சிறுவர்கள் எப்படி மாயமானார்கள்? அவர்கள் கிடைத்தார்களா, இல்லையா? இவர்களை பார்த்திபன் காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

எப்பொழுதும் புது முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பார்த்திபன் இந்தப் படத்தையும் ஒரு புதுவித கதை கருவை வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு புதுவிதமான திரைக்கதை அமைத்து அதன் மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இந்தக் கால ஜென் ஆல்ஃபாவான 13 சிறுவர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்குள் நடக்கும் ஹைடெக்காண பேச்சுகளும், அதற்கேற்ற அவர்களின் உடல் மொழிகளையும் வைத்துக்கொண்டு அதன் மூலம் தன் திரைக்கதையையும் வித்தியாசமாக அமைத்து அதன் மூலம் புதுவித அனுபவத்தை இந்த டீன்ஸ் மூலம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நடிகர் பார்த்திபன். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஒரே நேர்கோட்டில் படம் பயணிக்கிறது. முதல் பாதி முழுவதும் அமானுஷ்யம் கலந்த திகிலான காட்சிகளாக படம் நகர்ந்து போக போக இரண்டாம் பாதியில் படம் வேறு ஒரு பாதையில் பயணித்து முடிவில் விஞ்ஞான ரீதியாக இதற்கு தீர்வு காண்பித்து படம் முடிந்திருக்கிறது. முதல் பாதியில் படம் ஆரம்பிக்கும் பொழுது ஏதோ ஒரு புதுமையான விஷயத்தை இப்படம் கொடுக்கப் போகிறது என்ற உணர்வு பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிறது. அது போக போக அயற்சியை கொடுத்து காட்சிகளில் பெரிதாக எங்கும் திருப்பங்கள் இல்லாமல் ஒரே பிளாட்டாக நகர்ந்து அதே சமயம் கதையிலும் தெளிவில்லாமல் குழப்பமாக நகர்ந்து பார்ப்பவர்களை சற்றே சோதிக்கவும் வைத்திருக்கிறது. பார்த்திபனின் இந்தப் புதிய முயற்சியையும் கண்டிப்பாக பாராட்டலாம் ஆனால், இந்தப் புதிய முயற்சிக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தை சற்றே திரைக்கதையிலும் கொடுத்திருந்தால் இந்தப் படமும் அவரது பட வரிசையில் இன்னொரு மைல் கல்லாக அமைந்திருக்கும். 

Teenz movie Review

படத்தை தயாரித்து இயக்கியது மட்டுமல்லாமல் வழக்கம்போல் படத்திலும் நடித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இந்தப் படத்தில் ஆபத் பாண்தவனாக வரும் அவர், படத்தில் இருக்கும் ஃப்லாசை ஒரு வழியாக போக்கி இறுதிக்கட்டத்தில் காண்ஃபிலிட்டுக்கான சொல்யூஷனையும் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்க முயற்சி செய்திருக்கிறார். இவருடன் நடித்த 13 சிறுவர் சிறுமிகளும் மிக மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேர்ந்த நடிகர்கள் போல் நடித்து கைதட்டல் பெற்று இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே அவரவருக்கு கொடுத்த கதை பாத்திரத்தை மிக சிறப்பாக செய்து தாங்கள் ஒரு தேர்ந்த நடிகர்கள் என்பது போல் நடித்து கவனம் பெற்று இருக்கின்றனர். பல்வேறு காட்சிகளில் மிக மிக சிறப்பாக எதார்த்தமான வசன உச்சரிப்புகளை சிறப்பாக கையாண்டு இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் நன்றாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குநர் பார்த்திபன். கடமைக்கு சில காட்சிகளில் வந்து செல்கின்றார் யோகி பாபு. ஏதோ போற போக்கில் வரும் யோகி பாபு, லேசாக கிச்சு கிச்சு மூட்ட முயற்சி செய்திருக்கிறார். வழக்கமான போலீஸ் அதிகாரியாக வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார் நடிகை சுபிக்ஷா. மற்றபடி உடனடித்த மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை செய்து விட்டு சென்று இருக்கின்றனர். 

கௌமிக் ஆரி ஒளிப்பதிவில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டி இமான் இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசை ஓகே. பொதுவாக டி.இமானின் இசை என்றாலே கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை இமான் இந்தப் படத்தில் பூர்த்தி செய்ய சற்று தவறி இருக்கிறார். 

புதிய முயற்சியாக இப்படத்தை கொடுத்து இருக்கும் பார்த்திபன், இப்படிப்பட்ட கதைக்கு இந்த மாதிரியும் ஒரு ஆங்கில் இருக்கின்றது என்ற புதிய கோணத்தில் கதையைக் காட்டிய விதத்தை நாம் பாராட்டினாலும் அதற்கான திரைக்கதையில் ஏனோ அவர் சற்று தடுமாறி இருப்பதை மட்டும் ரீ கன்சிடர் செய்திருக்கலாம்.

 

டீன்ஸ் - முயற்சி ஓகே! எழுச்சி குறைவு!!

Next Story

கதறவிட்டாரா தாத்தா? - இந்தியன் 2 விமர்சனம்

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Indian 2 review

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சமீபமாக வெளியான ஐ, 2.0 திரைப்படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனால் 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை கம் பேக் கொடுப்பதற்காக கையில் எடுத்தார் ஷங்கர். வயதான சுதந்திரப் போராட்ட தியாகி கமல் லஞ்சம் வாங்கும் ஊழல்வாதிகளை மட்டுமல்லாமல் தப்பு செய்த பெற்ற மகனையே கொன்றுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடுகிறார். பிறகு எப்பொழுதெல்லாம் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறதோ அப்போதெல்லாம் இந்தியன் திரும்ப வருவார் என அறிவித்துவிட்டு சென்ற இந்தியன் தாத்தா சேனாபதி 28 வருடங்கள் கழித்து இப்பொழுது உள்ள சூழலில் நடக்கும் ஊழல்களை எதிர்த்து குரல் கொடுக்க மீண்டும் அவர் இந்தியா வந்தால் எப்படி இருக்கும்? என்ற ஒற்றை வரி கதையை வைத்துக்கொண்டு கம் பேக் கொடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் ஷங்கருக்கு இந்தியன் 2 கை கொடுத்ததா, இல்லையா?

பார்க்கிங் டாக் என்ற யூடியூப் சேனலை நடத்திக் கொண்டிருக்கும் சித்தார்த் மற்றும் குழுவினர் நாட்டில் நடக்கும் ஊழல்களை எதிர்த்து அவர்களுடைய சேனலில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் எவ்வளவோ ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தும் ஊரில் எந்த ஒரு மாற்றமும் நிகழாததால் மிகவும் கவலைக்கு ஆளாகும் இவர்கள், எப்படியாவது வெளிநாடு தப்பி சென்ற இந்தியன் தாத்தாவை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்குகின்றனர். கம் பேக் இண்டியன் என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து அதன் மூலம் இந்தியன் தாத்தா சேனாபதியை கவனிக்க வைக்க செய்கின்றனர். தைவானில் வர்மக்கலை ஆசிரியராக 100 வயதையும் கடந்து மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் இந்தியன் தாத்தா சேனாபதி ஊழல்களை ஒழிக்க மீண்டும் இந்தியா வருகிறார். வந்த இடத்தில் 40 வயதிற்கு குறைவாக இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு டாஸ்கை கொடுத்து அதை செய்ய சொல்லிவிட்டு இவரும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ஊழல்வாதிகளை தேடி தேடி தன் வர்மக்கலைகள் மூலம் கொல்ல ஆரம்பிக்கிறார். மீண்டும் சிபிஐ இவரை வலை வீசி தேடுகிறது. இதற்கிடையே இவர் இளைஞர்களுக்கு கொடுத்த டாஸ்கால் நடந்த விபரீதம் என்ன? போலீஸ் கையில் மீண்டும் இந்தியன் தாத்தா சிக்கினாரா இல்லையா? என்பதே இந்தியன் 2 படத்தின் மீதி கதை. 

இரண்டு படங்கள் கொடுத்த சறுக்கல்களுக்குப் பிறகு மிகவும் ஜாக்கிரதையாக அதேசமயம் தன் பாணியையும் கைவிடாமல் இரண்டையும் சரிசம தராசில் வைத்து திரைக்கதை அமைத்து அதன் மூலம் படத்தையும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். ஏற்கனவே வயது முதிர்ந்த கதாபாத்திரமான இந்தியன் தாத்தா சேனாபதி, இந்தியாவை விட்டு தப்பி செல்கிறார். அவரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர எந்த அளவுக்கு லாஜிக் இடிக்காமல் இருக்கும்படியான கதையை தேர்வு செய்ய முடியுமோ அதை சரியாக தேர்வு செய்து அதற்கு ஏற்ப தனக்கே உரித்தான பாணியில் கச்சிதமான திரைக்கதையும் அமைத்து காட்சிகளில் பிரம்மாண்டத்தை காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் நடக்கும் ஊழல்களை எதிர்த்து ஒரு யூடியூப் சேனல் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் இளைஞர்கள் எப்படி எல்லாம் கொதித்து வெகுண்டு எழுந்து அதை தடுக்க நினைக்கிறார்கள் என்ற சுவாரசியமான விஷயத்தை சிறப்பாக கையாண்ட இயக்குநர் ஷங்கர் முதல் பாதியில் அதை மிக சிறப்பாக செய்து ரசிக்க வைத்திருக்கிறார். அதேசமயம் இரண்டாம் பாதியில் இந்தியன் தாத்தா வருகைக்குப் பிறகு அவர் ஒரு பக்கம் தன்பானியில் ஊழல்வாதிகளை கொன்றுவிட்டு இருக்க இன்னொரு பக்கம் யூடியூப் சேனல் நடத்திக் கொண்டிருக்கும் சித்தார்த் அன்ட் கோ சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக நீண்ட சென்டிமென்ட் காட்சிகளாக விரிகிறது. முதல் பாதி கொடுத்த வேகமும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் சற்றே மிஸ்ஸிங். அதற்கு படத்தின் நீளமும் தடையாக இருக்கிறது.

படத்தின் நீளத்தை இன்னமும் கூட குறைத்து இருக்கலாம். அதேபோல் முதல் பாதியில் இருந்த சுவாரசியமும் விறுவிறுப்பும் பல்வேறு ஊழல் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரிவாகவும் சுவாரசியமாகவும் காட்டியதால் அவை ரசிக்கும்படி அமைந்திருந்தது. அதுவே இரண்டாம் பாதியில் வெறும் சென்டிமென்ட் காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு மிக நீளமாக திரைக்கதையை வேண்டுமென்றே இழுத்து கூடவே மிக நீண்ட ஆக்சன் கலந்த சேஸிங் காட்சியை மட்டும் வைத்து விட்டு இந்த இரண்டாம் பாகத்தை முடித்து இருப்பது சற்றே அயற்சியை கொடுத்து கூடவே ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது. இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் படத்தில் பல்வேறு சுவாரஸ்யமான காட்சிகள் நிறைந்து இருப்பதால் அதற்கு ஒரு ட்ரெய்லராக இந்த இந்தியன் 2 படத்தை கொடுத்திருக்கும் சங்கர் திரைக்கதையில் இன்னமும் கூட குறிப்பாக இரண்டாம் பாதியில் சுவாரசியத்தை கூட்டி படத்தின் நீளத்தையும் குறைத்து இருந்தால் இன்னமும் இந்த படம் நன்றாக பேசப்பட்டு இருக்கும். இருந்தும் ஷங்கருக்கு உரித்தான பாணியில் பிரம்மாண்டமும் அதற்கு ஏற்றவாறான உழைப்பும் படம் நெடுக நிறைந்து காணப்படுவதும், அதேசமயம் ஊழல் குறித்த விஷயங்களும் அதற்கான மாஸ் ஆக்சன் காட்சிகளும் கமர்சியலாக மக்களுக்கு ரசிக்கும்படி இருப்பது இவை அனைத்தையும் மறக்கடிக்க செய்து விட்டு படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. குறிப்பாக குடும்பம் குடும்பமாக சென்று இப்படத்தை கண்டிப்பாக மக்கள் ரசிக்கும்படி இப்படத்தை கொடுத்திருக்கிறார். என்னதான் படத்தில் பல மைனஸ்கள், லாஜிக் மீரல்கள் இருந்தாலும் அவைகள் கமல்ஹாசனின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் மற்றும் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கம் ஆகியவைகளால் மறக்கடிக்கப்பட்டு ஒரு வெற்றி படமாக இது அமைந்திருக்கிறது.

Indian 2 review

1996 ஆம் ஆண்டு எந்த இடத்தில் இந்தியன் தாத்தா சேனாபதி விட்டாரோ, அதே இடத்தில் இருந்து இப்பொழுது 28 வருடங்கள் கழித்து ஆரம்பித்து மாஸ் காட்டி அதகலப்படுத்தி இருக்கிறார். திரையில் கமல் தோன்றும் காட்சிகள் எல்லாம் தியேட்டர் அதிர்கிறது. குறிப்பாக வர்ம கலைகள் மூலம் அவர் செய்யும் சாகசங்கள் படத்தில் ரசிக்கும்படி அமைந்து கைதட்டல் பெறுகிறது. அதேபோல் பழையபடி அவர் பேசும் மாஸ் வசனங்களும், நாட்டில் நடக்கும் அவலங்களை தன் பஞ்ச் வசனங்கள் மூலம் நையாண்டி செய்வதும் படத்திற்கு மாஸ் கூட்டி இருக்கிறது. இருந்தும் இந்தியன் முதல் பாகத்தில் இருந்த கமல்ஹாசனின் மேக்கப் விஷயங்கள் இந்த படத்தில் சற்றே செயற்கை தனமாக தெரிகிறது. அந்தப் படத்தைக் காட்டிலும் இந்த படத்தில் கமல்ஹாசன் இன்னமும் இளமையாகவே தெரிகிறார்.

அதற்கு இந்த படத்தில் பல்வேறு ஜஸ்டிபிகேஷன் கொடுக்கப்பட்டிருந்தாலும் ஏனோ மனம் அவரை இந்த மேக்கப்பில் ஏற்க சற்று மறுக்கிறது. அதேபோல் செண்டிமெண்ட் காட்சிகளிலும் அவருடைய முகபாவனைகள் முதல் பாகத்தை போல் இருந்த அழுத்தத்தை இந்தியன் 2 வில் கொடுக்க தவறி இருக்கிறது. அதற்கு இந்த பிராஸ்தட்டிக் மேக்கப் சற்று தடையாக இருப்பது போல் தெரிகிறது. மற்றபடி கமல்ஹாசன் வழக்கம்போல் தனது அசுரத்தனமான நடிப்பின் மூலம் இந்த கதாபாத்திரத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கூட பெரிய பெரிய நடிகர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் நம் மனதில் பதிகின்றனர். அந்த அளவு அவர்களின் கதாபாத்திரமும் அதற்கான அழுத்தமும் மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். நாயகனாக வரும் சித்தார்த் மற்றும் தந்தை சமுத்திரகனியின் கெமிஸ்ட்ரி மிக மிக சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

இரண்டாம் பாதியில் வரும் இவர்களது சென்டிமென்ட் காட்சிகள் நன்றாக மனதில் பதிந்து பார்ப்பவர்களுக்கு கலக்கத்தை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறது. இவர்களைத் தாண்டி சித்தார்த் நண்பர்களாக வரும் ஜெகன், பிரியா பவானி சங்கர், ரிஷிகாந்த் ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாக செய்து மனதில் பதிகின்றனர். நாயகியாக வரும் ரகுல் பிரீத் சிங் சில காட்சிகளே வந்தாலும் அவருக்கு பெரிதாக வேலையும் இல்லை. அதனால் அவர் பெரிதாக ஈர்க்கவும் இல்லை. முக்கிய கதாபாத்திரத்தில் வரும் நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், ரேணுகா, இமான் அண்ணாச்சி, மனோபாலா, குல்சான், ஜாகிர் உசேன், தம்பி ராமையா, காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, மற்றும் சிபிஐ அதிகாரிகளாக வரும் பாபி சிம்ஹா மற்றும் விவேக் உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து அவர்கள் வரும் காட்சிகளில் எல்லாம் சிறப்பான பங்களிப்பை கொடுத்து மனதில் பதியும்படி நடித்துவிட்டு சென்றிருக்கின்றனர். 

கலை இயக்குனர் முத்துராஜ் படம் முழுவதும் தன் கலை திறமையால் விளையாடி இருக்கிறார். எந்த இடம் ஒரிஜினல், எந்த இடம் செட் என கண்டுபிடிக்காதபடி மிக சிறப்பாக செட்டுகளை அமைத்து அவை மூலம் படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அந்தந்த காட்சிகள் என சொல்ல முடியாதபடி படம் முழுவதும் தன் ஒளிப்பதிவால் பிரம்மாண்டத்தை இன்னும் ஒரு படி மேலே போய் அடுத்த தளத்திற்கு படத்தை எடுத்துச் சென்றிருக்கிறார் கேமராமேன் ரவிவர்மன். இவரது ஹாலிவுட் தரமான ஒளிப்பதிவு, இன்னும் சிறப்பாக மாற்றி இருக்கிறது. குறிப்பாக படத்தின் பிரம்மாண்ட காட்சிகளான இந்தியன் தாத்தா பயணப்படும் காட்சிகளும், படம் ஊர் ஊராக நகரும் காட்சிகளும் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படத்தின் இன்னொரு நாயகனாக அனிருத்தின் இசை திகழ்ந்து இருக்கிறது. இந்தியன் முதல் பாகத்தில் ஏஆர் ரகுமான் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட். இதனால் மிகப்பெரிய பிரஷரில் இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் அனிருத் முதல் பாகம் கொடுத்த ஹிட்டை சரி செய்யும் வகையில் இப்படத்திற்கு பின்னணி இசையை மிக மிக பிரம்மாண்டமாக கொடுத்து அதே சமயம் கமர்சியலாகவும் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். சில பாடல்கள் மட்டும் சிறப்பாக அமைந்திருந்தாலும் அதற்கு ஈடு கட்டும் வகையில் பின்னணி இசை மிக மிக சிறப்பாக அமைந்து படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. குறிப்பாக இந்தியன் தாத்தா வரும் காட்சிகளில் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிறப்பான மாஸ் கமர்சியல் பின்னணி இசையை கொடுத்து இந்த கால 2கே கிட்ஸ்சையும் குத்தாட்டம் போட செய்திருக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியன் தாத்தா இந்த அளவு பிரபலமாவதற்கு அனிருத் இசை ஒரு பெரிய முக்கிய பங்கு ஆற்றியிருப்பது மிகையாகாது. இவரது இசையே இக்கால இளசுகளுக்கு இடையே இந்தியன் தாத்தாவை கொண்டு சென்று இருக்கிறது. 

Indian 2 review

இந்தியன் 2 படம் முடிந்த பிறகு இந்தியன் 3 படத்திற்கான முன்னோட்ட க் காட்சிகள் திரையில் விரிகின்றன. அவை கொடுத்த கூஸ்பம்ப் மொமெண்ட்ஸும், அவை ஏற்படுத்திய எதிர்பார்ப்பும் இந்த இந்தியன் 2 திரைப்படம், இந்தியன் 3 படத்திற்கான வெறும் ட்ரெய்லராகவே பார்க்கப்படுகிறது. அதனாலயே இப்படத்தை சற்று வேகமாக முடிக்காமல் கொஞ்சம் இழுக்கடிக்கப்பட்டு முடித்திருப்பது கண்கூடாக தெரிந்தாலும் இந்தியன் 3 பாகத்துக்கான லீடாக இந்த இந்தியன் 2 இருப்பதால் ஆயிரம் ஓட்டைகள் இருந்தாலும் அவை நம்மை ரசிக்க வைக்க தவறவில்லை.

இந்தியன் 2 - இட்ஸ் ஜஸ்ட் அ டிரைலர்!