Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

இவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க! மான்ஸ்டர் - விமர்சனம்

அஞ்சனம் அழகியபிள்ளை... இந்தப் பெயரில் வள்ளலார் பக்தராக எஸ்.ஜே.சூர்யா. கற்பனை செய்யவே கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது அல்லவா? ஆனால் அழகாக நடித்திருக்கிறார். சென்னையில் மின்வாரியத்தில் பொறியாளராக இருக்கும் அஞ்சனம் அழகியபிள்ளைக்கு திருமண வயதும் ஆசையும் வந்துவிடுகின்றன. ஆனால், பெண் கிடைப்பதில் சிக்கல். சரி, சொந்த வீடு வாங்கினால் பெண் கிடைக்குமென்ற நம்பிக்கையிலும் வாடகை வீட்டின் பிரச்சனைகளாலும் ஒரு அபார்ட்மெண்டில் ஃபிளாட் வாங்குகிறார். திருமணம் செய்துகொள்ள பெண்ணும் அமைகிறது. அழகான வீடு, அழகான மனைவி என் வாழ்க்கை அழகாகப் போகிறது என்ற கனவில் இருக்கும்   அழகியபிள்ளைக்கு வில்லனாக வருகிறது ஒரு எலி.

 

sj surya monsterபுதிய வீட்டில் சிறிதாக ஆரம்பிக்கும் எலித்தொல்லை, ரஸ்க்கைக் கடித்து வயரைக் கடித்து கடைசியில் ஆசை ஆசையாக வாங்கி வைத்த ஐந்து லட்சம் மதிப்புள்ள சோஃபாவைக் கடித்துக் குதறி நாசமாக்கும் வரை நீள்கிறது. இப்படி, சற்றும் எதிர்பாராத வகையில் வாழ்க்கையில் வந்த பெரும் துன்பத்தை எஸ்.ஜே.சூர்யா எப்படி கையாள்கிறார், ஒரு எறும்பைக் கொல்வது கூட பாவம் என்ற குணம் கொண்ட அவர், அந்த எலிக்கு என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் இயக்குனர் நெல்சன் வெங்கடேசனின் 'மான்ஸ்டர்'.


'ஒரு நாள் கூத்து' படத்தில் கவனம் ஈர்த்த நெல்சன் 'மான்ஸ்டரி'ல் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததன் மூலம் தான் வழக்கமானவர் அல்ல என்பதை மீண்டும் நிறுவியுள்ளார். இயன்ற அளவு கிராஃபிக்ஸ் தவிர்த்து நிஜ எலி மூலம் எலித்தொல்லையை படமாக்கியதே படத்தின் மிக முக்கிய பலமாகும். அதில் சிக்கித்தவிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் நிலைமையை நாம் உணர முடிகிறது. பல காட்சிகளில் சிரித்தாலும் ஒரு கட்டத்தில் நமக்கே எலி மேல் கோபம் வருமளவுக்கு உண்மையாகப் படமாக்கியது குழுவின் வெற்றி. எலி செய்யும் ரகளையும் அதைப் பிடிக்க, அல்லது அடிக்க சூர்யா செய்யும் முயற்சிகளும் சுவாரசியம். எலியின் ஒவ்வொரு நகர்வையும் மிக தத்ரூபமாகவும் சில நேரங்களில் அதன் பார்வையிலிருந்துமே படமாக்கியிருப்பது இயக்குனர் + ஒளிப்பதிவாளர் கூட்டணியின் திறமைக்கு செம்ம சாம்பிள். எலி கொடுக்கும் அவஸ்தைகளை காமெடியாகவும் அதே நேரம் இந்த உலகில் அது போன்ற சிறிய ஜீவன்களுக்கும் இருக்கும் உரிமையையும் பேசியிருப்பது சிறப்பு.

 

 

priya bhavani shankarவீட்டில் எலி, எலி கொடுக்கும் தொல்லை, தொல்லையிலிருந்து விடுபட முயற்சி என்ற இந்த சின்ன கதை, முழு படத்துக்குப் போதவில்லை என்பதும் உண்மை. இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்துக்கு மேல் 'திரும்பவுமா' என நினைக்க வைக்கின்றன சில காட்சிகள். படத்தை முடிக்க இயக்குனர் எடுத்துக்கொண்ட வில்லன் டிராக் கொஞ்சம் பழைய ஸ்டைல். அதிலும் எஸ்.ஜே.சூர்யாவிடம் அழகாகப் பேசியே முடித்திருக்கக்கூடிய வேலைக்கு திடீரென சண்டை போட்டது சற்றே செயற்கை.


அஞ்சனம் அழகியபிள்ளையாக எஸ்.ஜே.சூர்யா, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வகையில் அடக்கமாக அழகாக நடித்துள்ளார். பிரியா பவானிசங்கர், எஸ்.ஜே.சூர்யாவைப் போலவே இளம் ரசிகர்கள் மனதையும் 'இப்படி ஒரு மனைவி அமைவாளா' என்று ஏங்க வைக்கிறார். கதையில் முக்கியத்துவம் உடைய நாயகி பாத்திரம் எழுதியிருப்பது சிறப்பு. கருணாகரனின் காமெடிகள் இயல்பாக சிரிக்க, ரசிக்க வைக்கின்றன. இவர்கள் போக அபார்ட்மெண்ட்வாசிகள், வில்லன் கும்பல் என ஒரு சின்ன வட்டத்துக்குள்தான் படம் சுழல்கிறது. கதைக்குத் தேவையானதும் அதுவே. ஆனால், ஒரு அளவைத் தாண்டி அதுவே அயர்ச்சியைக் கொடுக்கிறது.

 

 

monster mouseஜஸ்டின் பிரபாகரன், ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார். எலிக்கான பின்னணி இசை, 'அந்தி மாலை நேரம்' பாடல் என படத்தில் இசையால் ஆட்சி செய்கிறார். கோகுலின் கேமரா எலி புகும் எல்லா இடங்களிலும் தானும் புகுந்து விளையாடுகிறது. சாபு ஜோசப் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாக கட் பண்ணியிருக்கலாம். சில காட்சிகள் நீண்டுகொண்டே போகின்றன. அனைவரும் பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பாத்திரங்கள், யாரும் எதிர்பார்க்காத ஒரு கதை என இப்படி ஒரு காம்பினேஷனில் சிறப்பாகப் படம் செய்திருக்கிறார் நெல்சன் வெங்கடேசன், புறம்தள்ளக்கூடிய சிறு குறைகளுடன். 


   

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்