/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/224_8.jpg)
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ் முதல் முறையாக தனது வாழ்க்கையில் நடந்த ஒரு துயர சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் வாழை. தனது பயோ பிக்கின் ஒரு அங்கமாக உருவாக்கி வெளியிட்டு இருக்கும் இந்த வாழை திரைப்படம் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு மனதுக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது? என்பதை பார்ப்போம்...
சிறுவயதிலேயே தந்தையை இழந்த சிறுவன் பொன் வேல் தன் தாய் மற்றும் தன் அக்காவுடன் மிகவும் ஏழ்மையான நிலையில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். பள்ளிக்கு சென்று விட்டு வரும் அவர் விடுமுறை நாட்களில் தன் குடும்ப கஷ்டத்திற்காக தன் தாய் மற்றும் அக்காவுடன் வாழைக்காய் சுமக்க செல்கிறார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து கஞ்சி குடித்து வருகின்றனர். பள்ளியில் முதல் மாணவனாக இருக்கும் பொன் வேலுக்கோ இந்த வேலை சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தும் குடும்ப கஷ்டத்திற்காக வேண்டா விருப்பமாக இந்த வேலையை செய்யும் அவர் ஒரு நாள் காய் சுமக்க செல்லும் அன்று பள்ளியில் நடக்கும் ஆண்டு விழா ஒத்திகைக்காக தாய்க்கு தெரியாமல் அக்காவை மட்டும் வேலைக்கு அனுப்பி விட்டு பள்ளிக்கு சென்று விடுகிறார். பள்ளியை விட்டு வீட்டிற்கு திரும்பும் பொன்வேலுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன பேரதிர்ச்சி? காய் சுமக்க சென்ற தன் அக்காவிற்கு என்ன ஆனது? என்பதே வாழைப் படத்தின் கலங்கடிக்கும் மீதி கதை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/228_21.jpg)
தன் இளம் வயதில் சந்தித்த மிகப் பெரும் கஷ்டங்களையும் சோகங்களையும் நடந்த உண்மை சம்பவங்களையும் அப்படியே இந்த வாழை மூலம் கண்முன் கொண்டு வந்து பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். தான் சினிமாவிற்கு வந்ததே இந்த படம் எடுப்பதற்காக தான் என்று கூறும் அளவுக்கு தன் ரத்தமும் சதையுமாக மனதுக்குள் இருந்த இந்த கதையை மக்களுக்கு கொடுத்திருக்கும் அவர் அதை ரசிக்கும் படியும் கொடுத்து பார்ப்பவர்களிடம் கைதட்டல் பெற்று இருக்கிறார். படம் ஆரம்பித்து முதல் பாதியில் மிகவும் கலகலப்பாகவும் ஜனரஞ்சகமாகவும் செல்லும் திரைப்படம் போகப் போக இரண்டாம் பாதியில் மிகவும் சீரியசான கதை களத்திற்குள் நுழைந்து இறுதியில் கனத்த இதயத்துடன் கலங்கடிக்கும் படமாக முடிந்திருக்கிறது. தன் மனதில் ஆறாத வடுவாக மாறி உள்ள ரணத்தை அப்படியே நமக்கும் உணர்த்தும் படியான ஒரு படமாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
ஒரு ரூபாய் கூலியை கூட்டி தர கேட்டதற்காகவே வாழைத்தோப்பு முதலாளி அலட்சியமாக செய்யும் முதலாளித்துவமான ஒரு விஷயத்தால் ஏற்படும் மிகப்பெரும் துயரை அப்படியே கண்முன் காட்டி பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். முதலாளிகளின் சுரண்டல்களை காட்டி அதன் மூலம் தன் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை உள்ளடக்கிய ஒரு படமாக கொடுத்திருக்கும் இவர் அதை அனைத்து மக்களும் ரசிக்கும்படியான ஒரு படமாகவும் கொடுத்திருக்கிறார். ஆதிக்க வர்க்கத்திடம் அவர்கள் செய்யும் தவறை எதிர்த்து கேள்வி கேட்கும் நபர்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள், எப்படி நடத்துகிறார்கள் அதனால் அவர்களுக்குள் ஏற்படும் விளைவுகளை மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தி சமூகத்துக்கு மிக அவசியமான ஒரு படமாக இந்த வாழை உருவாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கு விருதுகள் நிச்சயம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/225_19.jpg)
படத்தின் நாயகர்களாக வரும் பொன் வேல், ராகுல் சிறுவர்கள் மிக மிக எதார்த்தமான நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி விருது வாங்கும் அளவிற்கு அழகான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கின்றனர். இவர்கள் இருவரும் படம் முழுவதும் ஆங்காங்கே செய்யும் குறும்புத்தனங்களும், அட்ராசிட்டியும், பப்பி லவ்வும் மிக அழகாகவும், ரசிக்கும்படியும், அதேசமயம் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு அதன் மூலம் இவர்களின் நடிப்பு மிக சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் எல்லாம் படத்தில் சிரிப்பு அலைகளும் தென்படுகிறது. இந்த இரண்டு சிறுவர்களுக்குமே இப்ப படம் மூலம் விருதுகள் நிச்சயம். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் கம்யூனிசம் பேசுகிறார். தனக்கு கொடுத்த வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார்.
நாயகியாக வரும் திவ்யா துரைசாமி அவருக்கான வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவருக்கும் அவர் தம்பி பொன் வேலுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் மிக சிறப்பாக நடித்திருக்கின்றனர். டீச்சராக வரும் நிகிலா விமல் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறார். காட்சிக்கு காட்சி அழகான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவருகிறார். இவருக்கும் அந்த சிறுவர்களுக்குமான கெமிஸ்ட்ரி மிக மிக சிறப்பாக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. சிறுவர்களுக்கும் டீச்சருக்கும் ஆன உறவை மிக சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். அதனாலேயே இவர்கள் கதாபாத்திரமும் நன்றாக மெருகேறி சிறப்பாக அமைந்திருக்கிறது. மற்றபடி உடன் நடித்த நடிகர்கள் பெரும்பாலானவர்கள் புது முகங்களாகவே இருந்தாலும் மண் மணம் மாறாத அவர்களின் எதார்த்த நடிப்பு மிக சிறப்பாக அமைந்து படத்துக்கும் சிறப்பு சேர்த்திருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/222_42.jpg)
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அபாரம். காட்சிக்கு காட்சி மிக சிறப்பான இசையையும் பாடல்களையும் கொடுத்து படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறார். இவரின் இசையே படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் வாழைத்தோப்பு மற்றும் கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் என அனைத்துமே மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் இவர்களது உழைப்பு என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதனாலேயே இந்த படம் வேறு ஒரு தளத்தில் இருக்கிறது. உலக சினிமாக்களுடன் போட்டி போடும் வகையில் மிகவும் தரமான படத்தை தன் ஒளிப்பதிவு மூலம் கொடுத்திருக்கிறார்.
தனது வாழ்வில் நடந்த வலி மிகுந்த ஒரு சம்பவத்தை மிகவும் ரசிக்கும்படியும் ஜனரஞ்சகமாகவும் கலகலப்பாக கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தில் பல்வேறு திருப்பங்கள் இன்றி மிகவும் யதார்த்த சினிமாவாக இப்படத்தை கொடுத்து இருக்கிறார். அது பல பேருக்கு பிடிக்கும் படியாக இருந்தாலும் சில பேருக்கு சற்றே அயர்ச்சி தரும்படியாக இருக்கிறது. அது மட்டுமே இந்த படத்திற்கு சற்று மைனஸ். இருப்பினும் கதையும் கதை போகின்ற போக்கும் கதை மாந்தர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்து ஒரு உலகத்தரமான படமாக இப்படம் அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக இருக்கிறது.
வாழை - எளியோரின் வலி!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)