Advertisment

'செஞ்சுடுவேன்’ மாரி... செஞ்சது என்ன? யாரை? மாரி 2 விமர்சனம்  

புறா பந்தயத்தையும் செம்மரக் கடத்தலையும் மையமாக வைத்து ஒரு கமர்ஷியல் எண்டர்டெயினராக கடந்த 2015ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் மாரி. தனுஷ் அந்தப் படத்தில் மாரியாக செய்யும் சேட்டைகளும், ரோபோ ஷங்கர், வினோத் கூட்டணி காமெடிகளும் படத்திற்கு பெரிய ஹைலைட்டாக அமைந்தன. மாரி படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது மாரி 2.

Advertisment

mari 2

முதல் பாகத்தில் வேலு அண்ணனாக நடித்த சண்முகராஜனின் மகனாக கிருஷ்ணா... தனுஷும் கிருஷ்ணாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து சண்முகராஜன் விட்டுச் சென்ற வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர். அப்போது ஒரு நாள் தனுஷ் வில்லன் டோவினா தாமஸின் அண்ணனை கொலை செய்துவிடுகிறார். இதனால் கோபமடைந்த டோவினா தாமஸ் ஜெயிலிலிருந்து தப்பித்து தனுஷை கொலை செய்ய வெளியே வருகிறார். இதற்கிடையே அராத்து ஆனந்தி என்ற சாய்பல்லவிக்கும் தனுஷுக்கும் காதல்... டோவினா தாமஸுக்கும் தனுஷுக்கும் ஒரு பக்கம் பிரச்சனை, அதேநேரம் தனுஷ் - கிருஷ்ணா நட்பிலும் விரிசல் ஏற்படுகிறது. பிரச்சனைகளையும், தன் எதிரிகளையும் மாரி என்ன செஞ்சார், எப்படி செஞ்சார் என்பதுதான் மாரி 2.

sai pallavi

Advertisment

நடிகர் தனுஷ் அதே வழக்கமான நடிப்பால் மாரியை மீண்டும் நம் கண்முன்னே நிறுத்துகிறார். முதல் பாகத்தைப் போலவே இதிலும் சில சேட்டைகள் செய்து ரசிக்க வைத்துள்ளார். நாயகி சாய்பல்லவி வரும் இடங்கள் எல்லாம் அமர்க்களம். அசால்டாக சென்னை பாஷை பேசி அதகளப்படுத்தி உள்ளார். குறிப்பாக தன் நடனத்தால் நம்மை ப்ரேமம் கொள்ள வைக்கிறார். படத்தோடு பார்வையாளர் உணர்வுப்பூர்வமாக இணையும் ஒரே புள்ளியாக சாய் பல்லவி இருக்கிறார். ரோபோ ஷங்கர் மற்றும் அடிதாங்கி வினோத் கூட்டணி காமெடிகள் சென்ற பாகத்தைக் காட்டிலும் இதில் சற்று குறைவு. ஆங்காங்கே சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் நகைச்சுவை குறைவாக இருப்பது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது. வில்லன் டோவினா தாமஸின் பேச்சில் மலையாள வாசனை அதிகம். இருந்தும் சில இடங்களில் நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். மலையாளத்தில் நன்றாக வளர்ந்துவரும் ஹீரோவான டோவினா தாமஸின் தமிழ் அறிமுகம் சற்றே காமெடியானது போலத்தான் தோன்றுகிறது. வரலட்சுமி சரத்குமார், சற்றே சர்காரை நினைவுபடுத்துகிறார். கிருஷ்ணா, அஜய் கோஷ், வித்யா பிரதீப், ஆகியோர் அவரவர் பாத்திரத்தை நன்றாகச் செய்துள்ளனர்.

tovino thomas

'மாரி' படம் விமர்சனப் பார்வையில் ஒரு சிறந்த படமில்லையென்றாலும் மாரி, சனிக்கிழமை, அடிதாங்கி இவர்கள் 3 பேரும் சேர்ந்து செய்த சேட்டையான காமெடிகள், பாடல்கள், தனுஷின் அட்டகாசமான பெர்ஃபார்மன்ஸ் போன்றவற்றால் பொழுதுபோக்குப் படமாக வெற்றி பெற்றது. மாரி என்ற ஒற்றை பிராண்டை மனதில் வைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி மோகன். படம் ஆரம்பத்தில் மிகுந்த பில்டப்புடன் ஸ்லோவாக ஆரம்பித்துப் பின் ஆங்காங்கே சில அட்டகாச காமெடிகளை வைத்து முதல் பாதி நகர, பின் இரண்டாம் பாதி நிறைய சென்டிமெண்டுடன் உணர்ச்சிபூர்வமான காட்சிகளோடு செல்கிறது. இந்த சென்டிமென்ட் காட்சிகள் படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தாலும் இந்தப் படத்தில் இது தனித்தே நிற்கிறது. முதல் பாதி அறிமுகம், காமெடி, சாய் பல்லவி என சற்று வேகமாக சென்று விட இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வு அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. 'மாரி'யில் வில்லன் பாத்திரம் பலவீனமாக இருக்கும், 'மாரி 2'விலும் அதே குறை.

மாரியின் பெரும் பலம்அனிருத்தின் இசை. யுவன் சங்கர் ராஜா, தன் ஸ்டைலில் அதற்கு ஈடு கொடுத்துள்ளார். இரண்டு பாடல்களும் வில்லன் டோவினா தாமஸூக்குக் கொடுத்த பின்னணி இசையும் மிரட்டல். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தை வேகமாகக் காட்ட முயற்சி செய்துள்ளது.

மாரி அடிக்கடி சொல்லும் வார்த்தை 'செஞ்சுருவேன்', என்ன செய்கிறார் யாரை செய்கிறார் என்பது படம் பார்த்தால் புரியும். பலமான கதை, பாத்திரம் ஆகிய அடித்தளங்களுக்கு மேல் கட்டப்படும் ஹீரோயிசம்தான் சிலிர்ப்பூட்டும், கொண்டாடப்படும். பாலாஜி மோகன் இதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

DHANUSH maari2 moviereview saipallavi
இதையும் படியுங்கள்
Subscribe