காமெடி காதலா? - 'லவ் மேரேஜ்' விமர்சனம்!

புதுப்பிக்கப்பட்டது
love-mariage-review

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு காமெடி படம் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கி இருக்கிறார் நடிகர் விக்ரம் பிரபு. சமீபமாக டானாகாரனுக்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக வரவேற்பு பெறாத நிலையில் விட்ட இடத்தை பிடிப்பதற்காக இந்த தடவை காமெடியில் களம் இறங்கி இருக்கும் விக்ரம் பிரபுவுக்கு இந்த லவ் மேரேஜ் கை கொடுத்ததா, இல்லையா?. 

30 வயதிற்கு மேல் கடந்தும் பார்த்த இடங்களில் எல்லாம் பெண்கள் விக்ரம் பிரபுவை நிராகரித்து வருகின்றனர். இதனால் விரத்தி அடைந்த விக்ரம் பிரபு குடும்பத்தினர் மிகத் தூரமாகத் தள்ளி கோபிசெட்டிபாளையத்தில் வேறு சமூகத்தைச் சார்ந்த நாயகி சுஷ்மிதா பட்டை பெண் பார்த்து நிச்சயம் செய்ய அந்த ஊருக்கு ஒரு இத்துப்போன பஸ்ஸில் கிளம்பிச் செல்கின்றனர். போன இடத்தில் நிச்சயம் முடிந்து மீண்டும் ஊருக்குக் கிளம்பும் நேரத்தில் அந்த பஸ் பழுதாகி அங்கேயே நின்று விடுகிறது. இதனால் இரண்டு நாட்கள் அங்கேயே விக்ரம் பிரபு மொத்த குடும்பமும் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து பஸ்ஸை பழுது பார்த்துவிட்டு மீண்டும் கிளம்பும் நேரத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது. 

இதனால் விக்ரம் பிரபுவின் மொத்த குடும்பமும் நாயகி வீட்டிலேயே தஞ்சம் அடைகின்றனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாயகியின் குடும்பத்தார் வீட்டிலேயே திருமணத்தை முடித்து விட முடிவு செய்கின்றனர். அந்த நேரம் பார்த்து நாயகி சுஷ்மிதா வேறு ஒருவருடன் வீட்டை விட்டு ஓடி விடுகிறார். இதனால் இரண்டு குடும்பமும் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறது. இதை எடுத்து ஓடிப்போன நாயகி சுஷ்மிதா என்ன ஆனார்? விக்ரம் பிரபுவுக்குத் திருமணம் நடந்ததா, இல்லையா? இவர்கள் ஊருக்குத் திரும்பிச் சென்றார்களா இல்லையா என்பதே இப்படத்தின் மீதி கதை. 

30 வயதிற்கு மேற்பட்ட ஆண் மகனுக்கு இன்றைய சூழலில் திருமணம் என்பது எந்த அளவு எட்டாக்கனியாக இருக்கிறது. அதை ஒரு குடும்பம் எப்படி எல்லாம் சமாளித்து அதில் இருந்து மீண்டு திருமணம் நடத்தி வைக்கின்றனர் என்ற இன்றைய சமகால நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த லவ் மேரேஜ் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் ஜனரஞ்சகமான கலகலப்பான படமாக அமைந்திருக்கிறது. விக்ரம் பிரபு வைத்துக்கொண்டு திருமண நிகழ்வை மையப்படுத்திக் கலகலப்பான ஒரு படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சண்முகப்பிரியன். 

வழக்கமான ஆக்சன் படங்கள், திரில்லர் படங்கள் என வேறு ஜானரில் நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபுவை இந்த முறை குடும்பத்துடன் இணைந்து நகைச்சுவை கலந்த கலகலப்பான குடும்பப்பாங்கான நாயகனாக மாற்றி இருக்கிறார் இயக்குநர் சண்முகப்பிரியன். பெண் பார்க்கச் சென்ற இடத்தில் அங்கேயே தங்கும் சூழ்நிலை ஏற்பட அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை மிகவும் கலகலப்பாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் காதலுடன் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் படமாகக் கொடுத்து இருக்கிறார் இயக்குநர் சண்முகப்பிரியன். அதையும் ரசிக்கும்படி கொடுத்திருப்பது படத்திற்கு பிளஸ். முதல் பாதி கலகலப்பாகும் வேகமாகவும் நகரும் திரைப்படம் இரண்டாம் பாதியில் காதல் செண்டிமெண்ட் என நகர்ந்து போகப் போக மீண்டும் கலகலப்பாக மாறி நிறைவாக முடிந்திருக்கிறது. இதுவே படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. 

30 வயதிற்கு மேல் கடந்த ஒரு இந்த கால இளைஞனை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் நடிகர் விக்ரம் பிரபு. இவரது இன்னசென்டான பாவமும் அதற்கு ஏற்றவாறான நடிப்பும் மிக அழகாக அமைந்து கதாபாத்திரத்தை நன்றாக எலிவேட் செய்திருக்கிறது. இந்த மாதிரியான கதை களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் பட்சத்தில் விக்ரம் பிரபுவுக்கு இனிவரும் காலம் பொற்காலமாக அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நாயகி சுஷ்மிதா பட் அழகாக இருக்கிறார் கிடைக்கின்ற இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். இவரின் தங்கையாக நடித்து இருக்கும் மீனாட்சி தினேஷ் கலகலப்பாக நடித்துப் படத்தைத் தூக்கிப் பிடித்து இருக்கிறார். இவருக்கும் விக்ரம் பிரபுவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இதுவே படத்திற்குப் பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. 

நண்பர்களாக வரும் ரமேஷ் திலக் கலகலப்பு ஒட்டி இருக்கிறார். கஜராஜ் குணச்சித்திர நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக விக்ரம் பிரபு மாமாவாக நடித்திருக்கும் அருள் தாஸ் தனது காமெடி வில்லத்தனமான நடிப்பில் கலகலப்பாக நடித்துப் பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறார். இவரின் கதாபாத்திரம் எதார்த்தமாக அமைந்து படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறது. சிறப்புத் தோற்றத்தில் வரும் ரியோராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் கலகலப்பு ஊட்டி சென்று இருக்கின்றனர். முக்கியமாகப் படத்தில் பல்வேறு நட்சத்திர பட்டாளங்களில் நடித்திருக்கின்றனர். அவர்கள் அனைவருமே அவரவர் வேலையைச் சிறப்பாகச் செய்து படத்திற்கு வலு சேர்த்து விட்டுச் சென்று இருக்கின்றனர். 

மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவில் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய ட்ரெண்டில் இருக்கும் ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த கால ட்ரெண்ட்க்கு ஏற்ப வழக்கம் போல் அமைந்து ரசிக்க வைத்திருக்கிறது. 

ஒரு 90ஸ் கிட் வாழ்க்கையை மையமாக எடுத்துக்கொண்டு அவருக்குத் திருமண ஏற்பாடு நடந்து அந்த திருமண ஏற்பாட்டை வைத்துக்கொண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் குழப்பங்களை வைத்துக்கொண்டு ஜனரஞ்சகமான முறையில் குடும்பங்கள் கொண்டாடும் படி திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்த இயக்குநர் சண்முக பாண்டியன் முதல் பாதியை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்து இரண்டாம் பாதியில் சற்றே சில பல வேகத்தடைகளுடன் கூடிய காட்சி அமைப்புகளைக் கொடுத்து இறுதிக் கட்ட காட்சிகளில் விட்ட இடத்தை பிடித்து விறுவிறுப்பாகக் கொடுத்து நிறைவான ஒரு லவ் படத்தைக் கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார். 

லவ் மேரேஜ் - மனம் இருந்தால் மார்க்கமுண்டு!

Love marriage review
இதையும் படியுங்கள்
Subscribe