Skip to main content
Sangathamizhan-Desktop Sangathamizhan-mobile

பாகுபலி படிச்ச ஸ்கூல்ல இவன் ஹெட்மாஸ்டர்! தி லயன் கிங் - விமர்சனம்

Jada-Desktop Jada-mobile

அரியணையை கைப்பற்ற ராஜகுடும்பத்தில் நடக்கும் சூழ்ச்சியில் அரசன் கொல்லப்படுகிறான். பட்டத்திற்கு அடுத்த வாரிசான இளவரசனைக் கொல்லவும் உத்தரவிடப்படுகிறது. இளவரசன் இறந்துவிட்டதாய் நினைத்து மன்னனாய் முடிசூடுகிறான் வில்லன். ஆனால் தப்பிப் பிழைக்கும் இளவரசன் அரண்மனையை விட்டுத் தள்ளி வேறெங்கோ வசிக்கிறான். ஒரு கட்டத்தில் தன் தந்தையின் மரணத்தைப் பற்றிய உண்மையையும், தன் நாட்டு மக்களின் நிலையையும் கேள்விப்படும் இளவரசன் மீண்டும் அரண்மனைக்குத் திரும்பி, அந்த வில்லனைக் கொன்று அரியணையை கைப்பற்றி, தர்மத்தை நிலைநாட்டுகிறான். இதுதான் 'தி லயன் கிங்' படத்தின் கதை.

 

mufasa the lion king2K கிட்ஸ் இந்த கதையை கேட்டதும் ‘பாகுபலி கதை மாதிரி இருக்கே‘ என்று கூறக் கூடும். மார்வெல் ஃபேன்ஸ் இதை தோர் கதை எனவும் ப்ளாக் பான்த்தர் கதை எனவும் கூறக்கூடும். 1600 கிட்ஸ் இதைக் கேட்டு சிரிக்கக் கூடும். ஆமாம். இந்த அத்தனை படங்களுக்கும் மூலக்கதை, ஷேக்ஸ்பியர் எழுதிய ஹேம்லெட் எனும் நாடகம் தான். வெளியானது முதற்கொண்டு எண்ணற்ற கதைகளுக்கும் நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் அடிப்படையாக இருந்து வருகிறது ஹேம்லெட். அதைத் தழுவி 1994ஆம் வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அனிமேஷன் படம் 'தி லயன் கிங்'. அந்தப் படத்தின் ரீமேக்தான் இப்போது வெளியாகியிருக்கும் 'தி லயன் கிங்'.

மேலே குறிப்பிட்டிருக்கும் அதே ஹேம்லெட் கதைதான். காட்சிக்கு காட்சி 1994ஆம் ஆண்டு வந்த லயன் கிங்கின் மறுபதிப்புதான். ஆனால் திரையில் தோன்றுவது கம்யூட்டர் கிராஃபிக்ஸா இல்லை நிஜ மிருகங்களை இப்படி நடிக்க வைத்திருக்கிறார்களா என வாய் பிளந்து பார்க்க வைக்கும் அபாரமான சி.ஜி வேலைகள்தான் படத்தின் பெரும் பலம். அரசனான முஃபாசா சிங்கத்தின் பிடரி முடி பறப்பது முதல், இளவரசன் சிம்பா பிறந்தவுடன் கொடுக்கும் முகபாவனைகள் வரை ஒவ்வொன்றிலும் அத்தனை நுணுக்கம். சிரிப்பு, சோகம், ஆச்சர்யம், வலி, அதிர்ச்சி என பெரும்பாலான உணர்வுகள் மிருகங்களின் கண்களில் பிரதிபலிக்கின்றன. அந்தளவிற்கான நுணுக்கமான உழைப்புடன் உருவாகியிருக்கிறது இந்த லயன் கிங்.

 

the lion king simbaஎத்தனை முறை, எத்தனை மொழிகளில் வந்திருந்தாலும், அதே ஆர்வத்துடன், சுவாரசியத்துடன் பார்க்க வைக்கும் ஒரு மேஜிக் இந்தக்  கதையில் இருக்கிறது. அதனால்தான் 1994ஆம் ஆண்டு வந்த லயன் கிங் திரைப்படத்தை பார்த்தவர்கள் கூட, காட்சிக்கு காட்சி அப்படியே மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்த லயன் கிங்கையும் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முஃபாசா கதாப்பாத்திரம் கம்பீரத்தின் அடையாளம் என்றால், வில்லனாக வரும் ஸ்கார் பாத்திரம் சூழ்ச்சியின் அடையாளம். அந்த சிங்கத்தின் உடல் அமைப்பும், முக அமைப்பும் அந்த குணநலன்களோடு அப்படி பொருந்திப் போயிருக்கின்றன. அட்டகாசமான வடிவமைப்பு. அதேபோல் பழைய லயன் கிங்கில் கலக்கிய பும்பா மற்றும் டிமோன் கேரக்டர்களின் மீட்டுருவாக்கமும் அட்டகாசம். இந்த வகைப் படங்களில் இளவரசனை எடுத்து வளர்க்கின்ற பாத்திரம் இவர்களுக்கு. இருவரும் தோன்றும் நிமிடத்தில் துவங்கி கடைசி வரை கலகலப்புக்கு பஞ்சமில்லை. இவர்கள் அனைவரும் வாழும் காடும், அதன் ரம்மியமும் அற்புதமாய் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றனது.

ஆங்கிலத்திலும் நிறைய பிராந்திய மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது லயன் கிங். ஆங்கிலம், தமிழ் என இரண்டு முறை படம் பார்த்த பின்பு கண்ணை மூடிக் கொண்டு தமிழ் லயன் கிங் தான் அசத்தல் என்று சொல்லிவிடலாம். காரணம் அத்தனை நேர்த்தியான டப்பிங் மற்றும் பின்னணிக் குரல் கலைஞர்கள் தேர்வு. வசன மொழிபெயர்ப்பும் அதை அந்த கலைஞர்கள் பேசும் விதமும் அட்டகாசம். குறிப்பாக ஸாஸு எனும் பறவைக்கும் பின்னணி பேசியிருக்கும் மனோபாலாவின் குரலும் பேசும் விதமும் அசத்தல். அதே போல் படம் முழுக்க லூட்டியடிக்கும் பும்பா - டிமோன் ஜோடிக்கு ரோபோ சங்கர் - சிங்கம் புலியின் குரல்கள் இன்னும் வலு சேர்க்கின்றன. பல காட்சிகளில் தியேட்டர் சிரிப்பலைகளில் மூழ்குகிறது.

 

 

the lion king scarவில்லன் ஸ்காருக்கு அரவிந்த் சாமியின் குரல் பாந்தமாய் பொருந்துகிறது. அடிக்குரலில் பேசும் சூழ்ச்சி நிறைந்த அந்தக் குரல் கிட்டத்தட்ட தனி ஒருவனின் சித்தார்த் அபிமன்யுவை நினைவுபடுத்துகிறது. முஃபாசாவின் கம்பீரத்தை இன்னும் ஓங்கி எதிரொலிக்கிறது ரவி ஷங்கரின் குரல். சமகாலத்தில் வந்த தமிழ் டப்பிங் படங்களில் மிக நேர்த்தியான டப்பிங் என்று லயன் கிங் திரைப்படத்தை சொல்லி விடலாம்.


பாடல்கள், சில பல மாஸ் காட்சிகள், வில்லன், சூழ்ச்சி, பிரிவு, கண்ணீர், காதல், பழிவாங்குதல் என ஒரு பக்கா தமிழ் கமர்ஷியல் படத்துக்கான டெம்ப்ளேட்டுள்ள படம் தி லயன் கிங். ஆனால் வருத்தம் என்னவெனில் படத்தின் கடைசி 20 நிமிடங்கள் இங்கே நாம் பார்த்து சலித்த தமிழ் மசாலா படங்களின் டெம்ப்ளேட்டில் இருப்பதுதான். உண்மை தெரிந்த நாயகன், நேரடியா வந்து ஒரே சண்டையில் வில்லனை வீழ்த்தி ஜெயிக்கும் அதே பாணி. இதுபோன்ற கதைகளில் இதெல்லாமா பார்ப்பார்கள் என்று கேள்வி கேட்டாலும், எந்தக் கதையாய் இருந்தாலும் நாயகனுக்கு தடைகள் வருவதும் அதை உடைத்து அவன் வெல்வதும்தானே பார்வையாளர்களுக்கு சுவாரசியம் ஏற்படுத்தும் திரைக்கதை? அது இல்லாததால் சிம்பா உண்மை உணர்ந்து திரும்பி வருவதற்கு பின்னான காட்சிகள் எந்தவித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடக்கின்றன.

இன்னொரு விதமான விமர்சனத்தையும் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. மன்னனுக்குப் பின் இளவரசன், அவனுக்குப் பின் அவன் மகன் என்று ஒருவித அரசகுல அதிகாரத்தை நிலைநாட்டும், ஜனநாயகமற்ற அதிகாரப் பகிர்வை படம் காட்டுகிறது என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது. ஆனால் பாகுபலி, தோர் போல இது ஒரு காடு, அந்த காட்டின் ராஜா என்பது குறித்த ஒரு படம். அதில் எத்தகைய நற்பண்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதையே கவனித்துப் பார்க்க வேண்டும். அந்த விதத்தில் பார்த்தால், காடு என்பது அனைத்து விலங்குகளுக்கும் பொதுவானது, யாருக்கும் இது சொந்தமில்லை, அனைவருக்கும் வாழ்வதற்கான சம உரிமை உண்டு என சமத்துவத்தைதான் போதிக்கிறான் இந்த சிங்க ராஜா.

பழகிய கதைதான், பார்த்த படம்தான். ஆனால் பிரம்மிப்பூட்டும் கிராஃபிக்ஸ் வேலைகளுக்காகவும், மேம்பட்ட தொழில்நுட்ப செறிவிற்காகவும் இந்த லயன் கிங்கை தவற விடாமல் சந்தித்து விட்டு வரலாம். நிச்சயம் ஒரு பேரனுபத்தை உறுதி. அதுவும் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், இந்த வரியை படித்து முடித்ததும் டிக்கெட் எடுக்க கிளம்பி விடுங்கள்!

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்