நம் நாட்டில் குடிப் பழக்கத்தால் பல்வேறு இளம் பெண்கள் சிறிய வயதிலேயே விதவை ஆவது காலம் தொட்டு நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதைத் தழுவி பல்வேறு திரைப்படங்கள் பல ஆண்டு காலமாக வெளிவந்த வண்ணம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் பல படங்கள் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சில படங்கள் தோல்வியும் சந்தித்து இருக்கின்றன. இன்னொரு பக்கம் சில அரசியல் கட்சிகள் பெண்கள் கூட்டமைப்புகள் என மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் முழு மதுவிலக்கு அமல் படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவை அனைத்தையும் உள்ளடக்கிக் கதைக் கருவாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பல்வேறு வருடங்களாக வெளிவந்த வண்ணம் இருக்கின்ற இந்த வேளையில் தற்பொழுது இதே கலை கருவை வைத்துக்கொண்டு குயிலி திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. மற்ற படங்களைப் போல் இந்த படமும் எந்த அளவு வரவேற்பு பெற்று இருக்கிறது என்பதைப் பார்ப்போம்...?.
மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த தாஸ்மிகா அதே கிராமத்தில் வசிக்கும் ரவி சாவைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் ரவி சார் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தன் வாழ்க்கையையே நாசமாக்கிக் கொள்கிறார். இதனால் தாஸ்மிகா மற்றும் அவரது மகன் வாழ்க்கை பெரிதாகப் பாதிக்கப்பட்டு இருவரும் படுகுழிக்குத் தள்ளப்படுகின்றனர். இதற்கிடையே ரவி சாவை அவரது பழைய பகை கொண்ட எதிரிகள் குடிபோதையில் கொலை செய்து விடுகின்றனர். அதேபோல் தாஸ்மிகா மாமனாரும் குடியால் இறந்து விடுகிறார். இதனால் வெகுண்டு எழும் தாஸ்மிகா அந்த ஊரில் இருக்கும் மதுபான கடையை எரித்து விடுகிறார். பின்பு எப்படியாவது அந்த மதுக் கடையை இழுத்து மூட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொள்ளும் அவர் தன் மகனைப் பெரிய கலெக்டர் ஆக்கி அதிகாரத்திற்கு வந்து அந்த கடைக்குச் சீல் வைக்கும் படி தன் மகனிடம் கூறி அவரையும் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்து அந்த ஊருக்கே கலெக்டராக மாற்றி விடுகிறார். மாவட்ட கலெக்டராக ஆகும் அவரது மகன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றாமல் அந்த மதுபான கடை முதலாளியின் மகளைத் திருமணம் செய்து கொண்டு அவருக்குச் சாதகமாக நடந்து கொள்கிறார். இதனால் வெகுண்டு எழும் அவரின் தாய் எடுக்கும் அதிர்ச்சிகரமான முடிவு என்ன? என்பதை இந்த படத்தின் மீதி கதை.
காலம் தொட்டு தமிழ் சினிமாவில் தொடர்ந்து மது ஒழிப்பை வலியுறுத்தி வெளியாகி இருக்கும் திரைப்படங்களில் வரிசையில் இந்த படமும் இணைந்து இருக்கிறது. முதல் பாதி முழுவதும் காதல் குடும்பம் என வழக்கமான பாணியில் நகரும் திரைப்படம் இரண்டாம் பாதியில் இருந்து சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. கலெக்டர் மற்றும் அவரது உச்சவரம்பு அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல் அதற்கு ஒத்துழைக்கும் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் அவர்களை எதிர்க்கும் சாமானிய மக்கள் அவர்கள் செய்யும் போராட்டம் அந்த போராட்டத்தின் விளைவு எனப் பரபரப்பாக நகரம் இரண்டாம் பாதி திரைப்படம் இறுதிக் கட்டத்தில் பரபரப்பான அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தோடு முடிகிறது. இரண்டாம் பாதியில் இருந்த விறுவிறுப்பும் கதை ஓட்டத்தையும் முதல் பாதியில் இருந்தே கொடுத்திருந்தால் இந்த படம் இன்னமும் சிறப்பான படமாக அமைந்திருக்கும். தான் சொல்ல வந்த விஷயத்தை இரண்டாம் பாதியில் இருந்து மிக சிறப்பாக அதே சமயம் தெளிவாகவும் சொல்லிப் பார்ப்பவர்களுக்கு உணர்ச்சி பொங்க வைத்திருக்கிறார் இயக்குநர் பி முருகசாமி. இரண்டாம் பாதியில் இருந்த வீரியத்தை முதல் பாதியிலும் கடத்தி இருந்தால் இந்த படம் இன்னமும் கவனிக்கத்தக்கப் படமாக மாறி இருக்கும். மற்றபடி இரண்டாம் பாதியில் சொல்ல வந்த விஷயம் இந்த நாட்டுக்கும் சமூகத்துக்கும் மிகவும் ஒரு அவசியமான விஷயமாக இருப்பது படத்திற்கு பிளஸ்.
படத்தின் முதல் பாதி நாயகியாக வரும் தாஸ்மிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். பல குறும்படங்கள் மூலம் கவனம் பெற்ற இவர் தனக்குக் கொடுத்த பாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்து சின்னசின்ன காட்சிகளில் அழகான முக பாவனைகள் நடிப்பின் மூலம் சிறப்பான பங்களிப்பை கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து இருப்பது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இரண்டாம் பாதி நாயகியாக வரும் லிஸி ஆண்டனி வீரப் பெண்மணியாகச் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்து படத்திற்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறார். இவரது யதார்த்தமான அதே சமயம் நேர்த்தியான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இறுதிக்கட்ட காட்சிகளில் இவர் எடுக்கும் முடிவு படத்தைப் பார்ப்பவர்களைக் கண்கலங்க வைத்திருக்கிறது. படத்தின் நாயகன் ரவி சார் அப்படியே கிராமத்தில் இருக்கும் நடுத்தர வருட இளைஞரைப் பிரதிபலித்துக் காட்டியிருக்கிறார். உடன் நடித்திருக்கும் மற்ற நடிகர் நடிகர்களும் அவரவர் வேலையை நிறைவாகச் செய்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். பிரவீன் ராஜின் ஒளிப்பதிவு முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதியில் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஜோ ஸ்மித் இசையில் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை சிறப்பு.
மது போதைக்கு அடிமையாகி நம் சமூகம் படும் பாட்டால் பல்வேறு இளம் விதைகள் உண்டாவதைத் தடுக்க முடியவில்லை என்ற சமூகத்திற்கு அவசியமான ஒரு மெசேஜை இந்த படத்தின் மூலம் கொடுத்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மது ஒழிப்பு என்பது எவ்வளவு முக்கியம் அதேசமயம் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகள் எந்த அளவு மனசாட்சி படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இந்த படம் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.
குயிலி - போராளி!