அவ்வப்போது தமிழ் சினிமாவில் மலைக்காடுகள் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் சம்பந்தப்பட்ட படங்கள் வெளியாகி சில படங்கள் வரவேற்பும் பல படங்கள் ஏமாற்றமும் கொடுக்கத்தான் செய்கிறது. இந்த 21ம் நூற்றாண்டிலும் இன்னமும் அடிப்படை வசதிகள் கொஞ்சம் கூட இல்லாத எத்தனையோ மலைவாழ் கிராமங்கள் இருக்கின்றன அந்த வகையில் வெள்ள கெவி மலைவாழ் கிராமம் இன்னமும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த கெவி திரைப்படம் எந்த அளவு வரவேற்பை பெற்று இருக்கிறது...?
பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானல் ஒட்டி வெள்ளை கவி என்ற ஒரு மலை கிராமம் இருக்கிறது. கொஞ்சம் கூட அடிப்படை வசதிகள் எதுவுமே அல்லாத ஒரு கிராமமாக இருக்கும் அந்த கிராமத்தில் சரியான சாலை வசதிகள் இல்லாமல் இருப்பதும் அக்கம் பக்கத்தில் பள்ளிகள் மருத்துவமனைகள் எதுவும் இல்லாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். இதற்கிடையே அந்த ஊரில் கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் ஷீலா அவரது கணவர் ஆதவன் தம்பதியினர் அந்த ஊரில் இருந்து அதன் மேல் இருக்கும் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு இன்னல்களுக்கு இடையே நடந்து சென்று மருத்துவம் பார்க்கின்றனர். பின்னர் ஊருக்கு திரும்பி வருகின்றனர். இப்படியாக இருக்கையில் ஒரு நாள் இரவு ஷீலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு விடுகிறது. அவரை எப்படியாவது இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அந்த ஊர் மக்கள் டோலி கட்டி அவரை தூக்கிச் செல்கின்றனர்.
இதற்கிடையே நாயகன் ஆதவன் அந்த ஊருக்கு வரும் அரசியல்வாதிகள், போலீசார், அரசாங்க ஊழியர்கள் அநீதி இழைப்பதை எதிர்த்து கேள்வி கேட்டதால் ஆதவனை இரவு நேரத்தில் போலீசார் பிடித்து செல்கின்றனர். அவரை அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்யும் நேரத்தில் ஷீலாவை ஊர் மக்கள் டோலி கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இதைத்தொடர்ந்து போலீசாரிடமிருந்து ஆதவன் தப்பித்து தன் மனைவியிடம் வந்து சேர்ந்தாரா, இல்லையா? ஷீலா நல்லபடியாக மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்தாரா, இல்லையா? என்பதை படத்தின் மீதி கதை.
இன்றைய காலகட்டத்திலும் பல மலைவாழ் கிராமங்கள் இன்னமும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவிப்பதை அப்படியே இந்த கெவி படம் மூலம் நம் கண் முன் கொண்டு வந்து காண்பித்து இருக்கிறார் இயக்குநர் தமிழ் தயாளன். பல அடிப்படை வசதிகள் இல்லாமல் அந்த ஊர் மக்கள் தவிக்கும் தவிப்பு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும் அரசியல்வாதிகள் அவர்கள் மேல் காட்டும் கரிசனம், அதை எதிர்க்கும் மக்கள், அவ்வளவு இன்னல்களையும் தாண்டி அங்கு வாழும் மக்கள், அவர்களின் போராட்டம் என அத்தனை உண்மைதனத்தையும் கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் இல்லாமல் சிறப்பாக காட்சிப்படுத்தி காட்டி கவனம் பெற்று இருக்கிறார் இயக்குநர். குறிப்பாக அந்த மலை மற்றும் அந்த கிராமம் சுற்றிய பகுதிகளை சிறப்பாக காட்சிப்படுத்தி பார்ப்பவர்களை அந்த கிராமத்திற்கு அழைத்து சென்று இருக்கிறார் இயக்குநர் தமிழ் தயாளன். இவரது நேர்த்தியான காட்சி அமைப்புகள் படத்திற்கு சிறப்பான பங்களிப்பு அளித்து இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் கூட வேகம் கூட்டி சுவாரஸ்யமாக நகர்த்தி இருக்கலாம்.
நாயகன் ஆதவன் மிகவும் பரிதாபமான ஒரு நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதிகார வர்க்கத்தை எதிர்த்து கேட்கும் இடத்திலும் அவர்களிடையே பணிந்து போவதும் பின் எதிர்ப்பதும் என இன்றைய எதார்த்த இளைஞரை அப்படியே கண்முன் பிரதிபலித்திருக்கிறார். நாயகி ஷீலா நிறைமாத கர்ப்பிணியாக வருகிறார். அப்படியே அந்த கதாபாத்திரமாகவே மாறி நம் கண்களை குளமாக்குகிறார். சில காட்சிகளே வந்தாலும் ஜாக்லின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்று இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் ஜெகன் சூர்யா ஒளிப்பதிவில் அந்த மலைவாழ் கிராமம் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதிகள் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு, உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. பாலசுப்பிரமணியன் மற்றும் ராஜா ரவி வர்மா இசையில் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது.
மலைவாழ் மக்களின் குரலாகவும் அவர்களது குமுறல் ஆகவும் ஒலித்திற்கும் இந்த கெவி திரைப்படம் அடிப்படை வசதிகள் கொஞ்சம் கூட இல்லாமல் மலைவாழ் மக்கள் எந்த அளவு அவதிப்படுகிறார்கள் என்ற உண்மையை உரக்க கூறி இருக்கிறது. இருந்தும் திரைக்கதையில் இன்னும் கூட சற்று சுவாரசியம் கூட்டியிருக்கலாம்.
கெவி - குமுறல்!