டாடா வெற்றிக்கு பிறகு அடுத்ததாக கவின் நடித்த ‘ஸ்டார்’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படங்கள் போதிய வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது. அந்த தோல்வியை சரி கட்ட தற்பொழுது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் உடன் இணைந்து கிஸ் படம் மூலம் கோதாவில் குதித்து இருக்கிறார் கவின். இந்த கிஸ் திரைப்படம் கவினுக்கு வெற்றியை திருப்பிக் கொடுத்ததா, இல்லையா?
காதலர்களை கண்டாலே பிடிக்காமல் இருக்கும் கவினுக்கு ஒரு மர்ம புத்தகம் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி மூலம் கிடைக்கிறது. அந்த புத்தகத்துக்கு பிறகு யாரெல்லாம் கிஸ் அடித்துக் கொள்கிறார்களோ அவர்களது வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்க போகும் விஷயங்கள் இவர் கண் முன் அப்படியே வந்து செல்கிறது. காலத்தை முன்கூட்டியே கணிக்கும் சூப்பர் பவரை பெரும் கவின் அந்த பவரை வைத்துக்கொண்டு அவர் செய்யும் சேட்டைகள் என்ன? காதலே பிடிக்காத கவினுக்கும் காதல் வர, அது கைகூடியதா, இல்லையா? அந்த சூப்பர் பவரால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்பதே இந்த கிஸ் படத்தின் மீதி கதை.
படத்தின் தலைப்பு கிஸ் என வைத்ததுமே இத்தலைமுறையை சார்ந்த ரசிகர்களுக்கு ஏற்றவாறு படம் முழுவதும் இளமை ததும்ப முத்த காட்சிகள் நிரம்பி இருக்கும் என எண்ணி செல்பவர்களுக்கு இந்த படம் ஏமாற்றம் மட்டுமே கொடுக்கிறது. என்னடா ஆரம்பமே ஏமாற்றம் என நினைத்து விட வேண்டாம். முத்தத்தை தாண்டி அந்த முத்தத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன. அதனை எப்படி நாயகன் கையாள்கிறார், என்ற விறுவிறுப்பான கதையம்சம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை இளமை துள்ளலான காதல் காட்சிகள் நிறைந்துள்ள இந்த படத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி காதல் கதையை மிக எதார்த்தமாகவும் அதேசமயம் ரசிகர்களுக்கு பிடித்தவாறு ஜனரஞ்சகமான முறையிலும் விறுவிறுப்பாக காமெடி கலந்து கூறியிருக்கிறார் அறிமுக இயக்குநர் டான்ஸ் மாஸ்டர் சதீஷ். நெல்சன் பட பாணியில் ஆங்காங்கே சில டார்க் காமெடி காட்சிகள் மூலம் கதையை நகர்த்தும் சதீஷ், சொல்ல வந்த விஷயத்தை இக்கால ரசிகர்களுக்கு ஏற்றவாறு விறுவிறுப்பாகவும் காதல் காட்சிகள் நிறைந்தும் கூறியிருக்கிறார்.
ஒரு காதல் திரைப்படம் என்றாலே அதற்கு இசை பெரும் பங்கு வகிக்கும். ஆனால் இந்தப் படத்திலோ அது சற்றே மிஸ்ஸிங். பொதுவாக பார்க்கும் பட்சத்தில் இசை சிறப்பாகவே இருந்தாலும் காதல் படங்கள் என்றால் ஒரு படி மேலே போய் எக்ஸ்ட்ராடினரியாக இருக்க வேண்டும். அது இந்த படத்தில் இல்லாதது பல இடங்களில் நம்மை படத்துடன் ஒட்ட வைக்கவில்லை. வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் அதனுள் சொல்லிய ஃபேண்டஸி கதை பார்ப்பவர்களுக்கு புதிதாக கனெக்ட் செய்யும்படி இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. ஆங்காங்கே வரும் காமெடி காட்சிகளும் ஒன்லைன் பஞ்ச் காமெடிகளும் சிறப்பாக அமைந்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது. ப்ளடி பெக்கர் படத்தில் விட்டதை கிஸ் மூலம் எட்டி பிடித்திருக்கிறார் கவின். முதல் படம் போல் தெரியாத அளவிற்கு சிறப்பாக இயக்கியிருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் சதீஷ்.
நாயகன் கவின் வழக்கம்போல் ‘உர்...’என இருக்கும் கதாபாத்திரத்தையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். அவர் பாட்டுக்கு அமைதியாக உர் என இருக்கிறார் பிரச்சனைகள் அவரைத் தேடி வருகிறது. இதற்கு முந்தைய படங்களிலும் அவர் இதையேதான் செய்தார், அதையேதான் இந்த படத்திலும் செய்திருக்கிறார். ஆனால் அது ஓரளவு ரசிக்கும்படி இருப்பது அவருக்கு பிளஸ் ஆகவே அமைந்திருக்கிறது. இருந்தும் தன் கதாபாத்திரத் தேர்வு இன்னமும் கூட இனிவரும் காலகட்டத்தில் வேறு மாதிரி தேர்வு செய்தால் அவர் கரியருக்கு நல்லது. நாயகி ப்ரீத்தி அஸ்ரானி அழகாக இருக்கிறார், சிறப்பாக நடித்திருக்கிறார், சூப்பராக நடனமாடுகிறார். தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வழக்கமான நாயகியாக இல்லாமல் தனக்கு என்ன வருமோ அதை நன்றாக செய்து கதாபாத்திரத்திற்கும் வலு சேர்த்து இருக்கிறார்.
முக்கிய பாத்திரத்தில் வரும் விடிவி கணேஷ் சிறப்பாக நடித்து பார்ப்பவர்களை சிரிக்க வைத்திருக்கிறார். இவருடன் இணைந்து மிர்ச்சி விஜையும் தன் பங்குக்கு சிறப்பான முறையில் பங்களிப்பு கொடுத்து தியேட்டரில் கைதட்டல் உருவாக்கியிருக்கிறார். கவின், மிர்ச்சி விஜய், வி டிவி கணேஷ் ஆகியோரின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் வரும் தேவயானி, கௌசல்யா உட்பட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்து மனதில் பதிகின்றனர். மற்றபடி உடனடித்த அனைவருமே அவரவர் வேலையை நிறைவாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.
முன்பு கூறியது போல் ஜென்மார்ட்டின் இசை நன்றாகவே இருக்கிறது. ஆனால் இந்தப் படத்திற்கு போதுமானதாக இல்லை. இன்னமும் கூட சிறப்பான பாடல்கள் கொடுத்திருக்கலாம். மற்றபடி பின்னணி இசை ஓகே. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாக அழகாக இருக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகளை மிக என்டர்டைன்மென்ட்டாக கொடுத்திருக்கிறார். இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
கதை சொன்ன விதத்தில் பெரிதாக அழுத்தம் இல்லாததும். அதேசமயம் படத்தில் சில பல லாஜிக் மீறல்கள் இருப்பதும் சற்றே நெளிய வைத்திருக்கிறது. காதலிக்கு நடக்க போகும் விஷயத்தை சந்தர்ப்ப சூழ்நிலையால் அவரிடம் மறைக்காமல் ஏதோ மறைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் மறைத்தது போல் இருப்பது கதையையும் காட்சி அமைப்புகளையும் வேண்டும் என்றே நீட்ட வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. அது பல இடங்களில் பார்ப்பவர்களுக்கு அயற்சி ஏற்படுத்தும் போல் இருக்கிறது. மற்றபடி ஒரு காதல் கதைக்கு பின் கதையாக இருக்கும் ஃபிக்ஷன் கதை விறுவிறுப்பாக ரசிக்கும்படி அமைந்திருப்பதும். அதை தொடர்ந்து வரும் இந்த கால கவின் காதல் கதை விறுவிறுப்பாகவும் காமெடியாகவும் நகர்ந்து சென்று இருப்பதும் ஒரு பீல் குட் ரொமான்டிக் காமெடி படம் பார்த்த உணர்வை இந்த கிஸ் திரைப்படம் கொடுத்திருக்கிறது. அதுவே இந்த படத்திற்கு பிளஸ் ஆக மாறி ரசிகர்களையும் ஈர்த்திருக்கிறது.
கிஸ் - விரசம் இல்லா முத்தமழை