Advertisment

வெற்றி பெற்றதா கார்த்தியின் ஸ்பை திரில்லர் முயற்சி? - சர்தார் விமர்சனம்

Is Karthi's spy thriller successful? - Sardar Review

தேவ் படத்தின் தோல்விக்கு பிறகு அதே தயாரிப்பாளர் உடன் மீண்டும் ஒரு ஹிட்டுக்காக கைகோர்த்த கார்த்தி, இரும்புத்திரை வெற்றிக்குப் பிறகு‘ஹீரோ’ படம் கொடுத்த சறுக்கலை சரி செய்யும் நோக்கில் கார்த்தி உடன் இணைந்த இயக்குனர் பி.எஸ். மித்ரன். இருவருக்கும் இந்த படம் கம்பேக் கொடுத்ததா?

Advertisment

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் கார்த்தி எதை செய்தாலும் அதை பப்ளிசிட்டி செய்து புகழ் அடைகிறார். இப்படி பப்ளிசிட்டி பைத்தியமாக இருக்கும் கார்த்தி ஒரு போராட்டத்தை கலைக்க சென்ற இடத்தில், அதில் கலந்துகொண்ட லைலா மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையை துப்புத் துலக்கும் இன்ஸ்பெக்டர் கார்த்தி அந்த கொலைக்கு பின்னணியில் தேச துரோகி என முத்திரை குத்தப்பட்ட தன் அப்பா சர்தார் இருப்பதை கண்டறிகிறார். இதையடுத்து இதற்குப் பின்னால் இருக்கும் குடி தண்ணீர் மூலம் ஊழல் செய்து நாட்டையே நிர்மூலமாக்கத்துடிக்கும் கார்ப்பரேட்டுக்கும் சர்தாருக்குமான போராட்டம் என்ன? அதற்கும் போலீஸ் கார்த்திக்கும் என்ன சம்பந்தம்? என்பதே சர்தார் படத்தின் மீதி கதை.

Advertisment

நம் நாட்டுக்கு இப்போது உள்ள சூழலில் மிக அவசியமான ஒரு மெசேஜை சிறப்பாக சொல்லி கைத்தட்டல் பெற்று மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் இயக்குனர் பி.எஸ். மித்ரன். வரும் காலத்தில் குடிநீரின் தேவை எவ்வளவு முக்கியம், பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிநீர்களால் ஏற்படும் பேராபத்து என்ன, தண்ணீரால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மூன்றாம் உலகப் போர் குறித்து எச்சரித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் இயக்குனர். இந்தப் படத்தை பார்த்த பிறகு பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கி குடிப்பதற்கு மக்கள் ஒரு முறை யோசிப்பார்கள். அந்த அளவுக்கு பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரால் ஏற்படும் பேராபத்தையும், அதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும், அதிலிருக்கும் பல திடுக்கிடும் உண்மைகளையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். படம் ஆரம்பித்து முதல் அரை மணி நேரம் சற்று அயர்ச்சி கொடுத்தாலும் அதன்பின் வேகம் எடுத்த திரைப்படம் கடைசி வரை எந்த இடத்திலும் பின் வாங்காமல் விறுவிறுப்பாக நகர்ந்து ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக அப்பா கார்த்தியின்சர்தார் கதாபாத்திரம் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டு அதுவே படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறி படத்தை கரை சேர்த்து உள்ளது.

சர்தார், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் என இரு வேடங்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. இதில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கதாபாத்திரத்தைக் காட்டிலும்உளவாளி சர்தார் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து மாஸ் காட்டியுள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்க ஸ்டன்ட்டுகளை செய்து தியேட்டரில் கைதட்டல் பெறுகிறார். அதே போல் படம் முழுவதும் வெவ்வேறு கெட்டப்புகளில் தோன்றி அந்த கெட்டப்புகளாகவே மாறி காதல் காட்சிகளிலும், நாடகக் காட்சிகளிலும், குடும்பக் காட்சிகளிலும், உளவாளி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். நடிகை ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகிய இருவரும் வழக்கமான காட்சிகளில் தோன்றி வழக்கமான விஷயங்களை வழக்கத்திற்கு மாறாமல் செய்து விட்டு சென்றுள்ளனர். சில காட்சிகளே தோன்றினாலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்த லைலா. இவரின் அனுபவ நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டியுள்ளது. அதேபோல் சில காட்சிகளே தோன்றினாலும் எதார்த்தமான நடிப்பை அசால்ட்டாக செய்து தியேட்டரில் கைதட்டல் பெற்றுள்ளார் சிறுவன் ரித்விக். இவருக்கும் லைலாவுக்கும் ஆன கெமிஸ்ட்ரி மற்றும் இவருக்கும் கார்த்திக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்து ரசிக்க வைத்துள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அசால்ட்டான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி சென்றிருக்கிறார் ரித்விக். வழக்கமான வில்லனாக வரும் சங்கி பாண்டே வழக்கமான வில்லத்தனம் காட்டி சென்றுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முனீஸ்காந்த் அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல் இயக்குனர் பாலாஜி சக்திவேலும் தன் பங்குக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார்.பின்னணி இசை அபாரம். ஜார்ஜ்சி வில்லியம்சின் ஒளிப்பதிவில் சர்தார் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதகளம். குறிப்பாக உளவாளி மற்றும் ஆக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாக படம் பிடித்து படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இன்றைய சூழலில் குடிதண்ணீரில் நடக்கும் ஊழல்களையும் அதில் இருக்கும் ஆபத்துகளையும் ஓர் உளவாளி கதை மூலம் சிறப்பான திரைக்கதை அமைத்து ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்துள்ளார் இயக்குனர் மித்ரன்.

சர்தார் - இன்டலிஜெண்ட் வாரியர்!

moviereview
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe