Skip to main content

தந்தையும் மகனும் சேர்ந்து செய்த வேலை!   

Published on 07/07/2018 | Edited on 07/07/2018

எப்படியிருக்கிறது மிஸ்டர் சந்திரமௌலி?

'மிஸ்டர் சந்திரமௌலி...' என்ற வசனம் 1980களின் கடைசியில் எந்த அளவுக்கு நடிகர் கார்த்திக்கின் சினிமா கேரியரில் தாக்கத்தை ஏற்படுத்தியது, எந்த அளவுக்கு இளைஞர்கள் மணிரத்னம் புகழ் பாடினர், ரசிகர்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி அந்தப் பெயரை டைட்டிலாக பயன்படுத்தி, வசனத்தைப் பேசிய கார்த்திக்கையும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கையும் நடிக்கவைத்து டைட்டில் வைக்கும்பொழுதே சோஷியல் மீடியாவில் விடுகதைப் போட்டியெல்லாம் நடத்தி, ரெஜினாவும் கௌதமும் கிளாமரில் கலக்கும் சிங்கிள் மூலம் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளிவந்திருக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி', அதே பழைய பூரிப்பை நமக்கு அளித்தாரா?
 

karthik



குத்துச்சண்டை வீரர் கௌதம் கார்த்திக், தந்தை கார்த்திக் (சந்திரமௌலி), இருவர் மட்டுமே உள்ள குடும்பம். கார்த்திக்கிற்கு தன் மனைவியின் நினைவாக வைத்திருக்கும் பழைய பத்மினி கார் மீது காதல். மகிழ்ச்சியான இவர்களது வாழ்விற்கிடையே இரண்டு கால் டாக்ஸி கம்பெனிகளுக்குள்ளான வியாபாரப் போட்டி ஏற்படுத்தும் எதிர்பாராத திருப்பமும், இழப்பும் அதை கௌதம் கார்த்திக் எதிர்கொள்ளும் விதமும்தான்  'மிஸ்டர் சந்திரமௌலி'.

 

 


தனது திரைப்பயணத்தின் ஆரம்பத்தில் சற்று சறுக்கிய கவுதம் கார்த்திக் அதன் பின் 'வேறு' மாதிரியான படங்கள் மூலம் மார்க்கெட்டில் நிமிர்ந்து தற்போது ஜனரஞ்சகமான படங்களில் நடிக்கும் முயற்சியாக நடித்துள்ள படம் இது. அது அவரது நடிப்பிலும் வெளிப்படுகிறது. தனது முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் கௌதம், அது ரசிக்கும்படியாக இருக்கிறது. ஒரிஜினல் அப்பா, மகன் பாசம் திரையிலும் ஒர்க் அவுட் ஆகுமென்று நம்பி கார்த்திக்கும் நடிக்கவைக்கப்பட்டிருக்கிறார். 
  gowtham karthik



கார்த்திக், எப்பொழுதும் ரசிக்க வைப்பவர். தனது இளமைக் கால சேட்டை குறும்பை மீண்டும் கொண்டு வர முயற்சித்திருக்கிறார். சில இடங்களில் அது செயற்கையாகிறது. ரெஜினா கஸாண்ட்ரா எதற்காக அழைக்கப்பட்டாரோ அதை சிறப்பாகச் செய்திருக்கிறார். அந்த ஒரு பாடலில் கிளாமர் சிம்பளாகி (சிலரை மட்டும்) சிலிர்க்க வைக்கிறார். முதல் முறையாக தன் சொந்த குரலில் பேசியுள்ளார். கௌதமின் நண்பராக வரும் சதீஷ் ஏமாற்றம் அளித்துள்ளார். சில காட்சிகளில் மட்டுமே வரும் வரலட்சுமியின் நடிப்பு பக்குவமாகியிருக்கிறது. இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன், சந்தோஷ் பிரதாப், மைம் கோபி ஆகியோர் தங்கள் பங்களிப்பை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

 

 


இதுவரை தன் படங்களில் விஷாலை மட்டுமே இயக்கிய திரு முதல் முறையாக கெளதம் கார்த்திக்குடன் இணைந்துள்ள படம் என்றாலும் 'நான் சிகப்பு மனிதன்' படத்தின் சாயல் படம் முழுவதும் நன்றாகத் தெரிகிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நல்ல கமர்ஷியல் படத்திற்கான கதைதான். ஆனாலும் மிக தொய்வான திரைக்கதை, பழகிய காட்சிகள் எல்லாம் சேர்ந்து படத்தைப் பின்னிழுத்துவிட்டன. கார்த்திக், வரலக்ஷ்மி இடையில் உள்ள உறவைக்  கையாண்ட விதம் சுவாரஸ்யம். ஆனால், மற்ற விஷயங்களில் அது இல்லை. படத்தில் சில காட்சிகள் முழுமையாக இல்லாத உணர்வு. இடைவேளை காட்சியில் வந்து தொடங்கும் படம், இறுதியில் ஒரு ட்விஸ்ட்டுடன் முடிகிறது. இந்த இரண்டையும் தவிர படத்தில் வேறெதுவும் ஈர்க்காதது இந்த இரண்டின் எஃபக்ட்டையும் குறைத்திருக்கிறது.

  regina



'விக்ரம் வேதா' சாம்.சி.எஸ் இசையை இன்னும் அதிகமாக எதிர்பார்த்த நமக்கு 'ஏதேதோ ஆனேனே' பாடலும், பின்னணி இசையும் மட்டுமே ரசிக்கக் கிடைத்திருக்கிறது. மற்ற பாடல்களெல்லாம் எங்கேயோ கேட்ட மயக்கம். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் காதல், டூயட், க்ரைம் என அனைத்து காட்சிகளிலும் வெரைட்டியான வண்ணங்கள். திரைக்கதை என்னும் அடித்தளம் இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் அதன் மேல் கட்டப்பட்ட அத்தனையும் வெற்றி பெற்றிருக்கும். ஆனால்?

தந்தை கார்த்திக்கும் மகன் கௌதமும் சேர்ந்து செய்த பாச கெமிஸ்ட்ரி முழு வெற்றியில்லை. மொத்தத்தில் ஒற்றை வரி 'மிஸ்டர் சந்திரமௌலி' உருவாக்கிய ஈர்ப்பை கொஞ்சம் கூட முழு படம் 'மிஸ்டர் சந்திரமௌலி' உருவாக்கவில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்