ஐந்து ஸ்தலங்களில் ஒரு ஸ்தலமான வாயு ஸ்தலம் என அறியப்படுகிற ஸ்ரீ காளகஸ்தி கோயிலில் இருக்கும் 63 நாயன்மார்களில் ஒருவராக இருந்து கொண்டு சிவனுக்கு தன் கண்களையே அர்ப்பணித்த கண்ணப்பரின் வரலாற்றை மையமாக வைத்து இந்த கண்ணப்பா திரைப்படம் உருவாகி இருக்கிறது. பக்திமான்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்படி இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. அது எந்த அளவு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது என்பதைப் பார்ப்போம்..... 

மிகப்பெரும் வனப்பகுதியில் ஐந்து பிரிவுகளாக அதாவது 5 பட்டி எனச் சொல்லக்கூடிய ஐந்து கிராமங்களுக்கு ஒவ்வொரு தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கீழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு பட்டியின் தலைவராக இருக்கும் சரத்குமாரின் மகன் விஷ்ணு மஞ்சு கடவுள் நம்பிக்கை இல்லாத ஆத்திகராக இருக்கிறார். ஊரே வழிபடும் சாமியை இவர் கல் என்று அழைக்கிறார். இதனால் அந்த ஊர் மக்களுக்கும் விஷ்ணு மஞ்சுவுக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவது வழக்கம். வில் வித்தையில் தேர்ந்தவராக இருந்து கொண்டு போரில் பல பேரை விழித்தும் மாவீரனாக இருக்கும் விஷ்ணு மஞ்சு மற்றொரு பட்டியல் தலைவராக இருக்கும் மதுபாலாவின் மகள் மாபெரும் சிவபக்தை ப்ரீத்தி முகுந்தனைக் காதலிக்கிறார். 

அவரும் விஷ்ணு மஞ்சுவை காதலிக்கிறார். இந்த காதல் மதுபாலாவுக்கு பிடிக்காததால் இருவரும் அந்த ஊரை விட்டு சென்று தனிமையாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே இந்த ஐந்து பட்டியில் இருக்கும் ஒரு பட்டியல் சிவனின் வாயுலிங்கம் இருக்கிறது. அதற்குத் தலைவராக மாபெரும் சிவ பக்தர் மோகன்பாபு இருக்கிறார். அந்த சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு செல்ல அரக்கர்கள் படையெடுத்து வருகின்றனர். அவர்களைத் தனி ஒரு மனிதனாக வீழ்த்துகிறார் நாயகன் விஷ்ணு மஞ்சு. அந்த அரக்கர்களுக்குள் தலைவனாக வரும் வில்லன் அற்பித் ரங்கா தம்பியை விஷ்ணு மஞ்சு வதம் செய்து விடுகிறார். இதனால் மிகுந்த கோபமடையும் அற்பித் ரங்கா லட்சக்கணக்கான படைகளைத் திரட்டிக் கொண்டு அந்தப் பட்டிகள் மீது படையெடுத்து வருகிறார். 

இதனால் அச்சம் கொள்ளும் அந்த ஐந்து பட்டியைச் சேர்ந்த மக்களும் இவர்களை எதிர்த்துப் போராட முடிவு செய்கிறார்கள். இதை எடுத்து அந்தப் போரில் யார் வென்றார்கள்? வாயுலிங்கம் காப்பாற்றப்பட்டதா இல்லையா? நாத்திகராக இருக்கும் விஷ்ணு மஞ்சு எப்படி ஆத்திகராக உருவெடுத்துக் கண்ணப்பராக மாறுகிறார்? என்பதே கண்ணப்பா படத்தின் மீது கதை. திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் ஆகிய மூன்று யுகங்களில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களையும், வீரனையும் மையப்படுத்திக் குறிப்பாக தின்னாவாக இருக்கும் விஷ்ணு மஞ்சு எப்படிக் கண்ணப்பராக மாறுகிறார் என்கிற வரலாற்றுக் கதையை மையமாக வைத்துக் கொண்டு அந்தந்த யுகங்களுக்குள்ளேயே நாம் பயணிப்பது போல் மிகப் பிரம்மாண்டமான முறையில் காட்சி அமைப்புகளை உருவாக்கி அந்த வனத்துக்குள்ளேயே நம்மைக் கூட்டிக்கொண்டு சென்று பரவசப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் முகேஷ் குமார் சிங். 

Advertisment

படத்தில் சொல்லப்பட்ட வரலாற்றுக் கதை பல பேருக்குத் தெரிந்த ஒரு கதையாக இருந்தாலும் அதைக் காட்சிப்படுத்திய விதமும் சுவாரஸ்யமான திரைக் கதையும் பார்ப்பவர்களை நன்றாகக் கவர்ந்திருக்கிறது. குறிப்பாகக் காட்சி அமைப்புகள் முழுக்க முழுக்க நியூசிலாந்திலேயே காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அந்த வனத்துக்குள்ளேயே நம்மளை கூட்டிக்கொண்டு செல்வது போல் இருக்கிறது. படத்தில் காண்பிக்கப்பட்ட ஒவ்வொரு இடமும் அப்படியே கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி அளவுக்கு அழகாகவும் பிரம்மாண்டமாகவும் அந்த படத்திற்கே ஏற்ற ஒரு இடமாகவும் அமைந்து காட்சிகளுக்கும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் திரைக்கதைக்கும் பக்கபலமாக அமைந்து படத்தை நம் கண்ணை விட்டு விலகாத படி அமைய உதவி செய்திருக்கிறது. 

அதேபோல் பக்தி படம் என்ற உடனேயே இது முழுக்க முழுக்க பக்தியாகவே இருக்கும் என எண்ணி விடாமல் படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை இந்த காலை இளைஞர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பாகத் திரைக்கதை அமைத்து அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் கமர்சியல் ஆகவும் காட்சிகள் அமைத்து நாயகன் நாயகி எனக் காதல் காட்சிகளையும் வீரியமாக வைத்து அதன் பிறகு அதனுள் தெய்வ வழிபாடு என ஆன்மீகத்தையும் உட்புகுத்திச் சிறப்பான முறையில் திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் முகேஷ் குமார் சிங். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகச் செல்கிறது. ஆங்காங்கே பல இடங்களில் வேகத்தடைகள் இருப்பதையும் தவிர்க்க முடியவில்லை. இருந்தும் காட்சி அமைப்புகள் மிகவும் பிரம்மாண்டமாகவும் உலகத்தரமாகவும் அமைந்திருப்பது அதையெல்லாம் மறக்கடிக்கச் செய்கிறது. இருந்தும் படத்தின் நீளத்தைச் சற்று குறைத்திருக்கலாம். 

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு அதிரடி காட்டுகிறார் அதகலப்படுத்துகிறார் காதல் செய்கிறார் வில்வித்தையில் மிளிர்கிறார் பக்தியில் அனைவரையும் மிஞ்சுகிறார் இப்படி தனக்குக் கொடுத்த அனைத்து பாத்திரங்களிலும் ஜொலித்திருக்கிறார். இவருக்குத் தந்தையாக வரும் சரத்குமார் பாத்திரம் அறிந்து அனுபவம் நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் ப்ரீத்தி முகுந்தன் அழகாக இருக்கிறார் கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். அதேசமயம் பக்திமானாகவும் மாறி பரவசப்படுத்துகிறார். சிறப்புத் தோற்றத்தில் வரும் அக்ஷய்குமார் காஜல் அகர்வால் மோகன்லால் பிரபாஸ் ஆகியோர் வரும் காட்சிகள் தியேட்டரில் கைதட்டல்களாலும் விசில்களாலும் திரையரங்கம் அதிர்கிறது. மற்றபடி முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் மதுபாலா, மோகன்பாபு, அற்பித் ரங்கா, பிரமானந்தம், சம்பத் ராம், தேவராஜ், ஐஸ்வர்யா, சுரேகா வாணி உட்படப் பலர் அவரவர் வேலையைச் சிறப்பாகச் செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். 

Advertisment

செல்டன் ஒளிப்பதிவில் படம் மிக மிகப் பிரம்மாண்டமாக உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நியூசிலாந்து நாட்டை இவ்வளவு அழகாக எந்த திரைப்படத்திலும் காட்டவில்லை. அந்த வகையில் இவரது இந்த உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவு இந்த படத்திற்கு மிக மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தையும் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று கரை சேர்க்க உதவி இருக்கிறது. ஸ்டீபன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை இந்த கால இளைஞர்களையும் கவரும் வகையில் அதே சமயம் பக்திமான்களைக் கவரும் வகையிலும் சிறப்பான முறையில் இசையைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறது. 

கண்ணப்பரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் இந்த கால  2கே (2K) கிட்ஸ் செய்யும் கவரும் வகையில் ஜனரஞ்சகமான முறையில் திரைக் கதையுடன் கூடிய பிரம்மாண்டமாகத் திரைப்படமாக உருவாகியிருப்பது படத்தை ரசிக்க வைத்துப் பார்க்கும் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இருந்தும் படத்தின் நீளத்தில் இன்னும் கூட கவனமாக இருந்திருக்கலாம்.

கண்ணப்பா - எல்லாம் சிவமயம்!