/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/354_21.jpg)
சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு நாயகன் படத்துக்கு பின் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என்ற செய்தி வெளிவந்ததுமே அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கண்டமேனிக்கு எகிறியது. தக் லைஃப் என பெயர் சூட்டப்பட்ட நாளிலிருந்து ரிலீஸ் ஆகி இருக்கும் இன்றைய நாள் வரை இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிரபுதிரியாக இருந்து வந்த நிலையில் தற்பொழுது அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் இந்த படம் பூர்த்தி செய்ததா, இல்லையா?
இரண்டு கேங்குகளுக்கு இடையே நடக்கும் கேங் வாரில் பேப்பர் போட்டு வேலை செய்து கொண்டிருக்கும் குமரவேல் எதிர்பாராத விதமாக கொல்லப்படுகிறார். இதனால் அவரது சிறிய வயது மகன் சிம்புவை தன் மகன் போல் பேணி காத்து வளர்க்கிறார் கேங்ஸ்டர் கமல்ஹாசன். காலங்கள் செல்ல செல்ல சிறுவன் வளர்ந்து பெரியவனாக மாறுகிறான். கமல்ஹாசனும் மிகப்பெரும் கேங்ஸ்டர் ஆக உருவெடுக்கிறார். கமல்ஹாசனுக்கு பின் அவர் அமைத்த சாம்ராஜ்யத்தை சிம்புவிடம் ஒப்படைக்க இது கமல்ஹாசனின் அண்ணன் நாசருக்கு பிடிக்கவில்லை. இதனால் சூழ்ச்சி செய்து சிம்புவையே கமலுக்கு எதிரியாக மாற்றி அவர்களுக்குள் மோதல் உருவாக்கி கமலை போட்டு தள்ள முடிவெடுக்கிறார். கமல் மேல் நாசர், சிம்பு அண்ட் கோ கொலை முயற்சி செய்கின்றனர். அதிலிருந்து கமல் தப்பி விடுகிறார். பிறகு கமல் இவர்களை எல்லாம் பழி வாங்கினாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/352_25.jpg)
கிட்டத்தட்ட செக்கச் சிவந்த வானம், நாயகன், தளபதி உட்பட இவர் இயக்கிய சில படங்களின் சாயலோடு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். பொதுவாக கேங்ஸ்டர் படங்கள் என்றாலே இருதரப்பினருக்கும் ஏற்படும் மோதலை வைத்து மையமாக கதைகளை உருவாக்கி அதன் மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்வார்கள். ஆனால் இந்த முறை ஒரு பெரிய கேங்ஸ்டருடைய உட்குடும்ப பூசல்களை வைத்துக்கொண்டு அவர்களுக்குள் நடக்கும் பகை, கோபம், துரோகம், காதல், ஏமாற்றம், சோகம் என பல்வேறு விதமான உணர்ச்சிபூர்வமான விஷயங்களை கலந்து கட்டி சொல்லியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இதன் மூலம் புதுவிதமான கேங்ஸ்டர் படம் பார்த்த உணர்வை கொடுத்து மீண்டும் ஒருமுறை கைத்தட்டல் பெற்று இருக்கிறார். முதல் பாதி வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகரும் திரைப்படம் இரண்டாம் பாதியில் ஆங்காங்கே பல இடங்களில் ஸ்பீடு பிரேக்கர்கள் போட்டு நம்மை சோதிக்கிறது.
குறிப்பாக இரண்டாம் பாதியில் பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கும் சமயத்தில் பல இடங்களில் அயர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அது படத்திற்கு சற்றே பாதகமாக அமைந்திருந்தாலும் படத்தின் மேக்கிங் மற்றும் பெரும் நட்சத்திர பட்டாளங்களின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸும் நம்மை திரையை விட்டு அகலாதபடிக்கு செய்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. வழக்கமான மணிரத்னம் வகை கேங்ஸ்டர் படமாக இல்லாமல் அதனுடன் சென்டிமென்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை எடுத்து இருக்கின்றனர். பல இடங்கள் நமக்கு நாயகனை நினைவு படுத்தி இருந்தாலும் அதற்கும் இந்த படத்திற்கும் பெரும்பாலும் சம்பந்தம் இல்லாத படி செய்து ஒரு புதுவித உணர்வு ஏற்படும்படி மிகவும் பிரஷ்ஷான ஒரு கேங்க்ஸ்டர் படத்தைக் கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/353_21.jpg)
கமல்ஹாசன் வழக்கம் போல் எந்த வேடம் கொடுத்தாலும் அதை அவரை விட சிறப்பாக யாராலும் செய்ய முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டி திரையரங்கை கைத்தட்டல்கள் மற்றும் விசில்களால் அதிர செய்திருக்கிறார். குறிப்பாக வயதான கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருக்கும் அவர் அந்த வயதிற்கு ஏற்ப முதிர்ச்சியையும் அதற்கு ஏற்ப ஆக்சன் காட்சிகளையும் சிறப்பாக கையாண்டு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாக தன்னை அப்படியே அர்ப்பணித்து பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்திருக்கிறார். இவருக்கு பக்கபலமாக எஸ்.டி.ஆர் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார். கமல் அசரும் இடங்களில் எல்லாம் எஸ்.டி.ஆர் அதகளப்படுத்தி கேப்புகளில் கிடா வெட்டி இருக்கிறார். தனக்கு கிடைத்த ஸ்பேஸ் களில் எல்லாம் சிக்ஸர் அடித்திருக்கிறார். கமலுக்கு போட்டியாக தானும் ஒரு சிறந்த நடிகர் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
நாயகி த்ரிஷாவுக்கு வித்தியாசமான ஒரு வேடம். அதை மிக சிறப்பாகவும் அதேசமயம் ரசிகர்கள் கவரும்படியும் செய்திருக்கிறார். மற்றொரு நாயகி அபிராமி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதன் அச்சு அசல் மாறாதபடி நடிப்பதில் வல்லவர். அந்த வகையில் இந்தப் படத்தில் அதை சிறப்பாக செய்து காட்டியிருக்கிறார். கூட இருந்து குழி பறிக்கும் கதாபாத்திரமாக நடித்திருக்கும் நாசர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படி ஒரு கதாபாத்திரத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். அதை வழக்கம்போல் சிறப்பாகவும் எரிச்சல் ஏற்படும் படியும் செய்து ரசிக்க வைத்திருக்கிறார். கேங்கில் ஒருவராக வரும் ஜோ ஜூ ஜார்ஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். போலீசாக வரும் அசோக் செல்வன் முதிர்ச்சியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். அவரின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி நல்ல தேர்வு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/356_22.jpg)
மற்றபடி முக்கிய பாத்திரத்தில் வரும் பகவதி பெருமாள், அர்ஜுன், மகேஷ் மஞ்சுரேக்கர், சின்னி ஜெயந்த், வையாபுரி, வடிவுக்கரசி, சேத்தன் உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து விட்டு சென்றிருக்கின்றனர். மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து கதாபாத்திரங்களுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைத்து அவரவர்களுக்கான ஸ்பேசில் சிறப்பான முறையில் பங்களிப்பு அளிக்கும்படி செய்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். குறிப்பாக முத்தமழை, ஜிங்குச்சா, சுகர் பேபி ஆகிய பாடல்கள் ரிப்பீட் மோடில் ஒலிக்கிறது. அதே போல் பின்னணி இசையையும் வழக்கம் போல் மிக மிக சிறப்பாக கொடுத்து படத்தை உலக தரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார். இவருக்கு பக்கபலமாக தனது ஒளிப்பதிவின் மூலம் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி.கே. சந்திரன். இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தை மிகவும் பிரம்மாண்டமாக காட்டி இருக்கிறது. இவர்களுடன் கூட்டணி அமைத்து சிறப்பாக எடிட் செய்திருக்கிறார் ஸ்ரீகர் பிரசாத். படத்தின் நீளத்தில் சற்று கவனமாக இருந்திருக்கலாம்.
குடும்பம் மற்றும் சுற்றி இருக்கும் நண்பர்கள் எதிரிகள் உள்ளிட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்குள் நடக்கும் உட்குடும்ப பூசல்களை மையமாக வைத்து வித்தியாசமான முறையில் ஒரு கேங்ஸ்டர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் மணிரத்னம் அதன் நீளத்தை இன்னும் கூட குறைத்து இருக்கலாம். அதேபோல் முதல் பாதியில் இருந்த எதிர்பார்ப்பும் விறுவிறுப்பும் சிறப்பாக அமைந்திருந்ததை போல் இரண்டாம் பாதியிலும் கொடுத்திருந்தால் இன்னமும் இந்த படம் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தும் மிகப்பெரும் நட்சத்திர பட்டாளங்களின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் ஆகியவை இவை அனைத்தையும் மறக்கடிக்க செய்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது.
தக் லைஃப் - எ கேங்ஸ்டர்ஸ் லைஃப்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)