/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/udhayan5.jpg)
ஒரு பக்கம் அரசியல், இன்னொரு பக்கம் சினிமா என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் உதயநிதி ஸ்டாலின், தான் நடிப்பிலிருந்து முழுவதுமாக விலகப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தாலும் தொடர்ந்து தரமான படங்களாகக் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீப காலங்களில் வெளியான சைக்கோ, நெஞ்சுக்கு நீதி ஆகியபடங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் கலகத் தலைவன் திரைப்படம் அதே வரவேற்பைப் பெற்றதா...?
ஃபரிதாபாத்தில் மிகப்பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருக்கும் வஜ்ரா என்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் கனரக வாகனங்களை தயாரித்து வருகின்றது. அப்படி அவர்கள் தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக மைலேஜ் தரும் வகையில் ஒரு புதிய வாகனத்தை தயாரிக்கின்றனர். ஆனால், அந்த வாகனத்தில் இருந்து வெளியாகும் புகை அதிகமான காற்று மாசு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது என்று வஜ்ரா கார்ப்பரேட் கம்பெனி விழி பிதுங்கி நிற்கும் நேரத்தில் இந்த ரகசியம் எப்படியோ வெளியில் கசிந்து விடுகிறது. இதனால் பங்குச்சந்தையில் இந்தக் கம்பெனியின் பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கின்றன. இந்தப் புதிய வாகனம் விற்பனைக்கு வருவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
காற்று மாசு குறித்த ரகசியம் எப்படி வெளியே கசிந்தது? யார் மூலம் கசிந்தது? என்பதைக் கண்டுபிடித்து அவர்களை அழிக்க வஜ்ரா கம்பெனி சைக்கோபாத் கில்லர் வில்லன் ஆரவ்வை நியமிக்கின்றனர். ஆரவ்வும் இந்த ரகசியங்களை எல்லாம் போட்டி கம்பெனிகளுக்கு விற்கும் நாயகன் உதயநிதி ஸ்டாலினை தேடிச் செல்கிறார். இதையடுத்து வில்லன் ஆரவ் நாயகன் உதயநிதியைஎப்படி நெருங்கினார்;உதயநிதி ஸ்டாலினின் பின்னணி என்ன;அவர் ஏன் இந்த கம்பெனி ரகசியங்களை வெளியிடுகிறார்;இறுதியில் ஆரவ்விடம் உதயநிதி சிக்கினாரா, இல்லையா..? என்பதே கலகத் தலைவன் படத்தின் மீதி கதை.
தடையறத் தாக்க, மீகாமன், தடம் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளார். பொதுவாக மகிழ் திருமேனி படங்களில் காதல் காட்சிகள் தென்றலைப் போல வருடியும், திரில்லர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்து ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவழைக்கும். அப்படியான அம்சங்கள் இந்தப் படத்திலும் அமைந்து இப்படத்தை வெற்றிப் படமாக மாற்றி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய்யின் துப்பாக்கி படத்தில் எப்படி வில்லனும் ஹீரோவும்‘கேட் அன் மவுஸ்’ கேமில் ஒருவரையொருவர் நெருங்குவார்களோ, அதே போல் நாயகன் உதயநிதியை வில்லன் ஆரவ் ஒவ்வொரு லூப்ஹோலாக கண்டுபிடித்து, கண்டுபிடித்து நெருங்கும் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாகவும், திரில்லிங்காகவும் அமைக்கப்பட்டு ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவழைத்து ரசிக்க வைத்துள்ளது.
அதேபோல் காதல் காட்சிகளையும் சரியான இடங்களில் பொருத்தி திரைக்கதைக்கு எந்த இடத்திலும் பாதிப்பு ஏற்படாதவாறு அயர்ச்சி இன்றி காட்சிகளை அமைத்து விறுவிறுப்பு கூட்டியுள்ளார் இயக்குனர் மகிழ்திருமேனி. இருந்தும், முதல் பாதியில் வரும் பாடலைக் காட்டிலும் இரண்டாம் பாதியில் வரும் பாடல்காட்சி படத்திற்கு சற்று வேகத்தடையாக அமைந்துள்ளது. ஆனாலும் எந்த இடத்திலும் வில்லனுக்கோ, ஹீரோவுக்கோ அதிக மாஸான காட்சிகளோ, வசனங்களோ வைக்காமல் ஜஸ்ட் லைக் தட் காட்சிகளை நகர்த்தி நிஜத்துக்கு நெருக்கமான காட்சிகள் மூலம் கைத்தட்டல் பெறுகிறார் இயக்குநர். குறிப்பாக இன்டர்வலுக்கு முன்பு வரும் ரயில்வே ஸ்டேஷன் காட்சியும், கிளைமேக்ஸ் காட்சியும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து படத்தை கரைசேர்த்திருக்கிறது.
நாயகன் உதயநிதி ஸ்டாலின் மற்றப் படங்களைக்காட்டிலும் இப்படத்தில் சற்றே அடக்கி வாசித்து இருக்கிறார். அதுவே படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. நாளுக்கு நாள் இவரது நடிப்பு மெருகேறிக் கொண்டு செல்வது இப்படத்தில் சிறப்பாக தென்பட்டுள்ளது. காதல் காட்சிகளைக் காட்டிலும் மற்றக் காட்சிகளில் மிக இயல்பான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தி மனதில் பதிகிறார் நாயகன் உதயநிதி. சின்னச் சின்ன வசன உச்சரிப்பு, முகபாவனைகள் என நடிப்புக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் அழகாக வெளிப்படுத்தி இப்படத்தில் தோற்றத்திலும் அழகாகத்தென்படுகிறார். ஜாடிக்கேத்த மூடி போல் அழகான நடிப்பை தேவையான இடங்களில் மட்டும் வெளிப்படுத்திவிட்டு சென்றுள்ளார் நாயகி நிதி அகர்வால். இவருக்கும் உதயநிதிக்குமான காதல் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது.
அதிக ரொமான்ஸ், அதிக உணர்ச்சிகள், அதிக சோகங்கள், அதிக சந்தோஷங்கள் என எதுவுமே இல்லாமல் இன்றைய காலகட்ட காதலை மேம்போக்காகவும் அதே சமயம் தேவைப்படும் இடங்களில் அழுத்தமாகவும் இயக்குநர் காட்டியிருப்பது இவர்களின் நடிப்பை இன்னமும் மெருகேற்றிக் காட்டி இருக்கிறது. சில காட்சிகளே வந்தாலும் நடிகர் கலையரசன் மீண்டும் ஒருமுறை மனதில் பதியும்படி நடித்துவிட்டு சென்றிருக்கிறார். மிக எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி மனதில் பதிந்துள்ளார். நாயகன் ரோலை காட்டிலும் வில்லன் ரோலில் அதகளப்படுத்தி இருக்கிறார் நடிகர் ஆரவ். இவர் நாயகன் உதயநிதியை ஒவ்வொரு படியாக நெருங்கிச் செல்லும் காட்சிகளில் வில்லத்தனத்தை வெறித்தனமாக காட்டி பயமுறுத்தி இருக்கிறார். அதேபோல் தேவையற்ற சண்டைக் காட்சிகளைத்தவிர்த்து மூளையையும், திறமையையும் நன்றாகப் பயன்படுத்தி காட்சிகளை இயக்குநர் நகர்த்தி இருப்பது வில்லன் ஆரவுக்கு நன்றாக நடிக்க ஸ்பேஸ் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதை அவர் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். நடிகர் ஆரவ்இதே ரூட்டில் செல்லும் பட்சத்தில் குறிப்பிடத்தக்க நடிகராக தமிழ் சினிமாவில் ஜொலிப்பது உறுதி. ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார். ஆர்.ஜே.விக்னேஷ்.
அருள் கொரோலி இசையில் முதல் பாதியில் வரும் பாடல் காட்சி அருமை. இந்தப் படத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸாக பின்னணி இசையில் கம்பேக் கொடுத்து மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. இவரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து இப்படத்தை வெற்றி பெறச் செய்ய பெரிதும் உதவி இருக்கிறது. காதல் காட்சிகளிலும், ஆக்சன் காட்சிகளிலும், திரில்லர் காட்சிகளிலும் சிறப்பான இசையை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். இவருக்கு உறுதுணையாக ஒளிப்பதிவாளர் தில் ராஜ் சிறப்பான காட்சியமைப்புகளை படம் முழுவதும் படரச் செய்துள்ளார். எந்தெந்த காட்சிகளுக்கு எந்த மாதிரியான லைட்டிங் தேவையோ அதைச் சிறப்பாக செய்து அசத்தியிருக்கிறார்.
பொதுவாக கார்ப்பரேட் படங்கள் என்றாலே அந்த நிறுவனத்தின் தலைவரை வில்லனாக சித்தரித்து படத்தின் நாயகன் ஹீரோயிசம் காட்டி அழிக்கும் படியான படங்கள் வரிசையாக வெளியாகி நம்மை போரடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அதே கார்ப்பரேட் நிறுவனத்தின் அரசியலை வேறு ஒரு கோணத்தில் காட்டி, எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் கார்ப்பரேட் கம்பெனியில் நடக்கும் ஊழலால் கடைக்கோடியில் இருக்கும் சாமானியன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை மிகச் சிறப்பாகவும், நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்தி வெற்றி படமாக இப்படத்தை மாற்றி இருக்கின்றனர் கலகத் தலைவன் படக்குழுவினர்.
கலகத் தலைவன் - இந்தத் தலைவனின் கலகம் நன்மைக்கே!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)