Skip to main content

படம் ஹிட்டாக தியேட்டர் மொமன்ட்ஸ் மட்டும் இருந்தால் போதுமா..? காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

Published on 28/04/2022 | Edited on 28/04/2022

 

review

 

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு ஒரு காதல் கதை உருவாகிறது என அறிவிப்பு வெளியான நாள் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இதோடு விஜய் சேதுபதி நடிப்பு, விக்னேஷ் சிவன் இயக்கம், அனிருத் இசை, என நானும் ரவுடிதான் வெற்றி கூட்டணி  மீண்டும் இணைந்தது மேலும் ஆவலை அதிகரித்தது. இப்படி உச்ச நட்சத்திரங்கள் இணைந்து, ஒரு முக்கோண காதல் கதையாக உருவாக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா..?

 

சிறுவயதிலிருந்தே தான் ஆசைப்பட்டது எதுவும் நடக்காத அதிர்ஷ்டம் இல்லாதவராக வளரும் விஜய் சேதுபதி வாழ்க்கையில் ஒரே நேரத்தில் இரண்டு  கதாநாயகிகளுடன் காதல் ஏற்படுகிறது. அந்தக் காதல் கிடைத்தவுடன் அவரது துருதிஷ்டங்கள் எல்லாம் அதிர்ஷ்டமாக மாறுகிறது. பகலில் நயன்தாராவையும், இரவில் சமந்தாவையும் விஜய்சேதுபதி காதலிக்கிறார். இந்த காதல் இரு பெண்களுக்கும்  ஒருகட்டத்தில் தெரியவர பிரச்சனை வெடிக்கிறது. இதை விஜய் சேதுபதி எப்படி சமாளித்து, இறுதியில் யாரை கரம் பிடிக்கிறார் என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

 

கொஞ்சம் பிசகினாலும் தவறாக போய் முடியும் ஒரு முக்கோண காதல் கதையை திறம்பட கையாண்டு தியேட்டர் மொமண்ட்ஸ்களால் வெற்றி கண்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். படத்தில் எந்த ஒரு இடத்திலும் பெரிய ட்விஸ்டோ, பரபரப்பான பஞ்ச் வசனமோ, அதிரவைக்கும் கூஸ்பம்ப் காட்சிகளோ இல்லாமல் இருந்தாலும் காதல் காட்சிகளை கலகலப்பாக ரசிகர்களுக்கு பிடித்தவாறு நிறைவாக அமைத்து படத்தை கரை சேர்த்துள்ளார். படத்தின் ஹீரோவை காட்டிலும் ஹீரோயின்களே காட்சிக்கு காட்சி மாஸ் காட்டி தியேட்டரில் கைதட்டல் அள்ளுகின்றனர். இரு கதாநாயகிகளின் ரசிகர்களுக்குள் பொறாமையை தூண்டிவிட்டு அதை வைத்தே காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி, ரசிகர்களிடம் தியேட்டர் அதிரும்படி கைதட்டல் பெற்று அவர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்துள்ளது இப்படம். ஒரு காட்சியில் நயன்தாரா ரசிகர்களை சாட்டிஸ்ஃபை  செய்தால், அடுத்த காட்சியில் சமந்தா ரசிகர்களை சாட்டிஸ்ஃபை செய்கிறது. இப்படியே படம் முழுவதும் மாறி மாறி ஹீரோயின்களுக்கே காட்சிகளை அமைத்து, அதை வைத்தே முழு படத்தையும் ரொமான்டிக் காமெடியாக இன்டலிஜெண்ட்டான திரைக்கதையோடு கொடுத்து புது ட்ரெண்டை உருவாக்கி வெற்றி கண்டுள்ளது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம்.

 

இருந்தும் படத்தின் நீளம் சற்று அதிகமாக இருப்பதும், முதல்பாதியில் திரைக்கதைக்குள் சின்னச்சின்ன தொய்வுகளும் சற்று அயர்ச்சியை கொடுத்துள்ளது. அதே போல் ஆங்காங்கே ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்குமான தொடர்பு சரியாக அமையாமல் இருப்பதும் சற்று பாதகமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு காட்சியாக தனியாக பார்க்கும்பொழுது ரசிக்கும்படி இருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று ஒட்ட மறுத்துள்ளது. இருந்தும், இவை அனைத்தையும் அனிருத்தின் சிறப்பான பாடல்களும் பின்னணி இசையும் சரி செய்து ஒரு ஃபீல் குட் லவ் மூவியை கொடுத்துள்ளது. படத்திற்கு மிகப்பெரிய பலமாக அனிருத் இசை அமைந்துள்ளது. இவரே படத்துக்கு இன்னொரு நாயகனாக மாறியுள்ளார். காட்சிக்கு காட்சி இவரது இசையே ஒரு ஹைப்பை உருவாக்கி அதை சரியான இடங்களில் சாட்டீஸ்ஃபை செய்து படத்தை கரை சேர்த்துள்ளது.

 

படத்தின் நாயகனாக விஜய் சேதுபதி என்ன செய்ய வேண்டுமோ அதை நிறைவாக செய்துள்ளார்.  ஆனால் இவரைக் காட்டிலும் படத்தின் நாயகிகளான நயன்தாராவும், சமந்தாவும் பல இடங்களில் ஸ்கோர் செய்துள்ளனர். குடும்பப் பாங்கான தோற்றத்தில் நயன்தாரா நடிப்பில் ரசிக்க வைக்கிறார். ஆனால் தோற்றத்தில் ஏனோ ஒரு சோர்வு தெரிகிறது. நயன்தாராவை காட்டிலும் கதீஜாவாக தோன்றும் சமந்தாவுக்கு ரசிகர்களிடம் அதிக கைதட்டல் கிடைத்துள்ளது. படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை சமந்தாவே முன்னிலை வகித்துள்ளார்.

 

முதல்முறையாக நடிப்பில் களமிறங்கியிருக்கும் டான்ஸ் மாஸ்டர் கலா நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி சென்றுள்ளார். லொள்ளு சபா மாறன் கிடைத்த கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்து ரசிக்க வைத்துள்ளார். அதேபோல் முக்கிய பாத்திரங்களில் வரும் கிங்ஸ்லி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வரும் பிரபு சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதியும்படி நடித்து ரசிகர்களிடம் மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.

 

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் பகலில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளும், இரவில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளும் அழகாகவும் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இவரது ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

 

கொஞ்சம் தவறினாலும் பிரச்சனை ஏற்படக்கூடிய  ஒரு முக்கோண காதல் கதையை போகிறபோக்கில் ஜஸ்ட் லைக் தட் ஃபீல் குட் மூவியாக கொடுத்தற்கே இப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

 

காத்துவாக்குல ரெண்டு காதல் - டபுள் ட்ரீட் டிரெண்ட் செட்டர்..!

 

 

 

சார்ந்த செய்திகள்