Skip to main content

ஹலோ சொன்ன ஜோதிகா... வேற லெவல் சொன்ன சிம்பு! காற்றின் மொழி - விமர்சனம் 

Published on 17/11/2018 | Edited on 23/11/2018

"எங்க அக்கா கூட கேப்பாங்க, அதெப்படிடீ நீ சுடுற பூரி மட்டும் புஸ்ஸுன்னு வருதுன்னு. அதெப்படின்னுலாம் எனக்குத் தெரியாது, ஆனா நான் சுடுற பூரி புஸ்ஸுன்னுதான் வரும்" - இது காற்றின் மொழியில் ஜோதிகா பேசும் ஒரு வசனம். இந்த வசனம்தான் விஜயலட்சுமி (ஜோதிகாவின் பாத்திரம்).

 

katrin mozhi jo



எது செய்தாலும் அதை முழு மனதுடன் சிறப்பாக தன்னம்பிக்கையுடன் செய்யும்,  யார் என்ன சொன்னாலும் அது தன்னை பாதிக்காமல், தன் வழியில் நடக்கும், அதே நேரம் கணவன், மகன் மீது மிகுந்த பாசத்தோடு இருக்கும் ஒரு பெண். பனிரெண்டாம் வகுப்பில் ஃபெயிலான, பல திறமைகள் இருந்தும் எதிலும் ஊக்குவிக்கப்படாத, 'ஹவுஸ் வொய்ஃப்' என்ற பட்டதைத் தாண்டி வெளியே வரத் துடிக்கும் பெண் விஜயலட்சுமியாக ஜோதிகா. 'நேத்து ராத்திரி யம்மா' பாடும்போதும், சரோஜாதேவி  போல் நடிக்கும்போதும், முகம் தெரியாதவர்களின் பிரச்சனைகளுக்கு எஃப்.எம்.மில் தீர்வளிக்கும்போதும், இறுதியில் 'ஹலோ' சொல்லி கலங்கும்போதும்... உண்மையில் ஜோ, சூப்பர்! 'வாடீ ராசாத்தீ' என்று பாடியது இந்தப் படத்துக்கு மிகச் சிறப்பாகப் பொருந்தும். 'காற்றின் மொழி' படம் ஜோதிகா மீதுதான் பயணிக்கிறது.

தன் திறமைக்கேற்ற ஏதாவது ஒரு வேலைக்குப் போக வேண்டுமென்ற ஆர்வமுள்ள ஜோதிகா, அவரை முடிந்த அளவு உற்சாகமூட்டும் கணவர் விதார்த், வீடியோ கேம் மோகத்தில் இருக்கும் மகன்... இவர்களுடன் ஜோதிகாவின் தந்தை, இரட்டை சகோதரி அக்காக்கள், ஊறுகாய் விற்கும் மாமி, அப்பார்ட்மெண்ட் சுற்றத்தினர் கொண்ட சிறிய உலகத்திலிருந்து, கிடைத்த வாய்ப்பின் மூலம்  ஒரு பெரிய வாய்ப்பை தேடிப் பெற்று எஃப்.எம். ஆர்ஜே என்னும் வேலையால் ஒரு பெரிய உலகத்துக்குச் செல்லும்போது, குடும்பத்தில், சுற்றத்தில் ஏற்படும் அதிர்வுகள், மாற்றங்கள், அதை ஜோதிகா எப்படி எதிர்கொள்கிறார், தன் விருப்பமான வேலையிலிருந்து பின்வாங்கினாரா இல்லையா என்பதை  அழகாக, மென்மையாகப் பேசியிருக்கிறது இந்த காற்றின் மொழி. விதார்த், ஜோதிகாவின் முன் சற்று டல்லாகத் தெரிகிறார், அவருடன் சற்றே தயக்கமாக நடிக்கிறார். ஆனால், தனியே வரும் காட்சிகளில் தேர்ந்த நடிகர் என்று நிரூபிக்கிறார். ஜோதிகா, திருமணத்துக்குப் பின் இத்தனை அன்னியோன்யமாக நடித்திருப்பது இந்தப் படத்தில்தான். நேரடியாக நெருக்கத்தைக் காட்டாமல், உரையாடலாகவும், பாடலாகவும் காட்டியிருப்பது நன்று. ஜோதிகாவின் தந்தையாக மோகன் ராம், மற்றும் அந்த இரட்டை சகோதரிகள் நமக்கே வெறுப்பு வரும் அளவுக்கு நன்றாகவே நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, உமா பத்மநாபன், மயில்சாமி, லக்ஷ்மி மஞ்சு, இளங்கோ குமரவேல் என ராதா மோகனின் பலமாக நடிகர்கள் அனைவரும் இருக்கின்றனர்.

 

vidharth jo



இந்தியில் வித்யாபாலன் நடித்த 'துமாரி சூலு' படத்தைத் தன் பாணியில் கொஞ்சம் மாற்றி தமிழ்ப்படுத்தியிருக்கிறார் ராதா மோகன். சிரிக்க வைக்கும் சின்னச் சின்ன வசனங்கள், நல்ல பாத்திரங்கள், மென்மையான நகைச்சுவை, வாழ்வின் இன்பங்கள் சொல்லும் காட்சிகள் என தன் பிராண்டிலேயே உருவாக்கியிருக்கிறார். 'மொழி' படத்தில் ஜோதிகாவின் திறமையை மிக அழகாக வெளிப்படுத்திய இவர் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது அர்த்தமுள்ளதாகியிருக்கிறது. இத்தனை ரகளையான, ரசனையான ஜோதிகாவை வேறு யாரும் வெளிக்கொண்டுவரவில்லையென்றே சொல்லலாம். படத்திற்குத் தேவையில்லாத சில நகைச்சுவைக் காட்சிகள், சில இடங்களில் ஜோதிகா பேசும் தமிழ், சில ராதாமோகன் க்ளீஷே காட்சிகள் என வெகு சில குறைகளுடன் ஒரு நிறைவான படத்தைக் கொடுத்திருக்கிறார் ராதாமோகன். சிம்பு வரும் காட்சியும் யோகிபாபு வரும் காட்சியும் படத்திற்கு தேவையாக இல்லை. ஆனாலும், சிம்பு வரும் காட்சி ரசிக்க வைக்கிறது, யோகிபாபு வரும் காட்சி படத்திலிருந்து அந்நியமாகவே தெரிகிறது. அதுவும் சிம்பு தன்னைதானே லேட் விஷயத்தில் கிண்டல் செய்துகொள்வது ஜாலி.


 

str and co



பொன்.பார்த்திபனின் வசனங்களில் ஒன்றிரண்டை எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியாது. படத்திற்கு வசனங்கள் மிகப்பெரும் பலம். ஏ.ஹெச்.காசிப்பின் இசை தனியாக வெளியே தெரியாமல் படத்தின் அடி இழையாக இருக்கிறது. பின்னணி இசை படத்துடன் பிணைந்திருக்க பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் மனதோடு பெரிதாக ஒட்டவில்லை. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாக, அழகாகக் காட்டியுள்ளது. படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல் சற்று தாராள மனதோடு செயல்பட்டிருக்கிறார். சில தேவையில்லாத காட்சிகளிடம் கண்டிப்பாக இருந்திருக்கலாம். படத்தில் ஜோதிகாவைப் பார்த்து சிம்பு சொல்வார், 'உலகத்துல அதிகமா பயன்படுத்தப்படுற வார்த்தை 'ஹலோ' தாங்க, ஆனா நீங்க சொல்ற ஹலோ வேற லெவல்ங்க' என்று. உண்மைதான் இந்தக் காற்றின் மொழியில் ஜோதிகா சொல்லும் ஹலோவும் ஜோதிகாவும் வேற லெவல்.      

 

                                                      

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.