Skip to main content

பாகுபலி ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ஆர்.ஆர்.ஆர்? - விமர்சனம்

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

junior ntr ramcharan rajamouli movir rrr review

 

பாகுபலி படங்கள் மூலம் மொத்த இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜமௌலி. இவர் பாகுபலிக்கு பிறகு தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமாரம் பீம் கதாபாத்திரங்களைத் தழுவி 'ரத்தம் ரணம் ரௌத்திரம்' என்ற படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படம் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களிடையே நிலவிய மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா...?

 

சுதந்திரத்திற்கு முன் 1920களில் விசாகப்பட்டினம் பகுதியில் வாழும் பழங்குடியின சிறுமியை வெள்ளைக்கார கவர்னரின் மனைவி டெல்லிக்கு அடிமையாக அழைத்துச் சென்று விடுகிறார். சிறுமியைக் காப்பாற்றி மீட்டுவரப் பழங்குடியின மக்களின் காப்பான ஜூனியர் என்.டி.ஆர் டெல்லிக்குக் கூட்டாளிகளோடு விரைகிறார். இந்த விஷயம் டெல்லியில் உள்ள கவர்னருக்கு தெரியவர, ஜூனியர் என்.டி.ஆரை பிடித்துத் தரும் போலீஸ் அதிகாரிக்குச் சிறப்பு அதிகாரியாகப் பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் போலீஸ் அதிகாரியான ராம்சரண் பெரும் போராட்டத்துக்குப் பின் என் டி ஆர் ஐ பிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைத்து பதவி உயர்வு பெறுகிறார். இதை அடுத்து என் டி ஆர் ஐ தூக்கிலிட அரசாங்கம் உத்தரவிடுகிறது. அதை நிறைவேற்றும் நேரத்தில் அதே போலீஸ் ராம்சரண் என் டி ஆர் ஐ காப்பாற்றுகிறார். அவர் ஏன் என் டி ஆர் ஐ காப்பாற்றுகிறார், கடத்தி சென்ற பழங்குடியின சிறுமி மீட்கப்பட்டாரா, இல்லையா என்பதே பரவசமூட்டும் 'ரத்தம் ரணம் ரௌத்திரம்' பிரம்மாண்ட படத்தின் மீதி கதை.

 

ஒரு கதையாகப் பார்க்கும்பொழுது பெரிதாக ஒன்றுமில்லை எனத் தோன்றினாலும், அதைக் காட்சிப்படுத்திய விதம், வசனம், கதையாடல், திரைக்கதை எனப் பார்ப்பவர் கண்களுக்குப் பிரமாண்ட விருந்து அளித்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி. பாகுபலி போன்ற ஒரு பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்துவிட்டு அதற்கு அடுத்த படமாக ஆர் ஆர் ஆர் படத்தை இயக்குவதில் எந்த அளவு அழுத்தம் இருக்குமோ அந்த அளவு அதைச் சிறப்பாகக் கையாண்டு அதையே பிளஸ் ஆக மாற்றி மீண்டும் ஒரு முறை தெலுங்கு சினிமாவை மொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும்படி செய்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி. 

 

junior ntr ramcharan rajamouli movir rrr review

 

குறிப்பாகப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது சண்டைக் காட்சிகள். அதை சாலமன் மற்றும் நிக் பவல் ஆகியோர் எந்த சமரசமும் இன்றி திறம்படக் கையாண்டு பார்ப்பவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளனர். இவர்களுக்கு உறுதுணையாக ஒளிப்பதிவாளர் கே.கே செந்தில் குமார், கலை இயக்குநர் சாபு சிரில், விஷுவல் எபெக்ட்ஸ் சீனிவாஸ் மோகன் ஆகியோர் இயக்குநர் ராஜமௌலி உடன் இணைந்து திரையில் சாகசங்களை நிகழ்த்தி இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். குறிப்பாக இவர்களது கூட்டணி திரையில் ஒரு பிரம்மாண்ட மேஜிக்கை நிகழ்த்தி கண்களுக்கு விருந்து அளித்துள்ளன. 

 

இவை ஒருபுறமிருக்கப் படத்தின் சிலசில மைனஸ் ஆகப் பார்க்கப்படுவது செண்டிமெண்ட் காட்சிகள். பொதுவாக ராஜமௌலி படங்களில் எந்த அளவு பிரம்மாண்டமும், திரைக்கதை வேகமும் ரசிக்கும்படி இருக்குமோ அதே அளவு செண்டிமெண்ட் காட்சிகளும் கூடுமான அளவுக்கு நெகிழ்ச்சியை அளிக்கும். ஆனால் இந்தப் படத்திலோ ராம்சரண் சார்ந்த செண்டிமெண்ட் காட்சிகள் பெரிதாக மனதில் ஒட்ட மறுக்கிறது. அதுவே படத்தின் இரண்டாம் பாதியில் சற்று அயர்ச்சியை அளித்துள்ளது. அதேபோல் பாகுபலியை மனதில் வைத்துக்கொண்டு இந்த படத்தைப் பார்க்கும் பட்சத்தில் சற்று ஏமாற்றம் அளிப்பது போல் தோன்றலாம். ஆனால் அந்தப் படத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு ஆர் ஆர் ஆர் படத்தை லாஜிக் பார்க்காத தனி படமாகப் பார்க்கும் பட்சத்தில் நிச்சயமாகப் பார்ப்பவர்களுக்குப் பரவசம் ஏற்படுத்தும். அதுவும் படத்தின் நீளம் 3 மணி நேரம் என்றாலும் படம் முடிவது தெரியாத அளவுக்கு வேகமாகச் சென்றுள்ளது. இதற்கு உறுதுணையாக ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் உதவி புரிந்துள்ளது.

 

நடிப்பில் ஜூனியர் என்.டி.ஆரும், நடனத்தில் ராம் சரணும், சண்டைக் காட்சிகளில் இருவரும் ரேஸ் குதிரை போல் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் போட்டிப் போட்டுக்கொண்டு அதகளப்படுத்தியுள்ளனர். படத்தில் இருவருக்குமே சரிசம முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் இதில் யார் சிறப்பாக பர்பாமன்ஸ் செய்துள்ளனர் என்ற கேள்வியே எழ மறுக்கிறது. குறிப்பாக இருவரும் நடிப்பைத் தாண்டி தங்கள் உடல் உழைப்பை 100% அர்ப்பணித்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். வெள்ளைக்கார கவர்னர் ஜெனரலாக நடித்திருக்கும் வில்லன் ரே ஸ்டீவன்சன் மற்றும் அவரது மனைவியும் கொடூர வில்லியுமான அலிசன் டூடி நன்றாக நடித்துள்ளனர். என்.டி.ஆரின் காதலியாக நடித்திருக்கும் ஒலிவியா மோரிஸ் மதராசபட்டினம் படத்தை ஞாபகப்படுத்தியுள்ளார். நாயகியாக வரும் ஆலியா பட், முக்கிய கதாபாத்திரங்களில் வரும் அஜய் தேவகன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி ஆகியோருக்கு படத்தில் அதிக வேலை இல்லை என்றாலும் அவ்வப்போது வந்து மனதில் பதிகின்றனர். 

 

படத்தின் இன்னொரு நாயகனாகப் பார்க்கப்படுவது மரகதமணியின் பின்னணி இசை. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் இவர் கொடுத்திருக்கும் பின்னணி இசை பிரம்மாண்டத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. பல இடங்களில் இவரது இசை கூஸ் பம்ப் மோமண்ட்ஸ்களை கொடுத்து பரவசப்படுத்தியுள்ளது. அதே போல் இவரது இசையில் உருவான நாட்டுக்கூத்து பாடல் செவிகளுக்கும், கண்களுக்கும் பிரம்மாண்ட விருந்து அளித்துள்ளது. குறிப்பாக இந்தப் பாடல் வரும் காட்சி தியேட்டருக்குள் நடன திருவிழாவை உண்டாக்கி அதிரச் செய்துள்ளது.

 

பாகுபலியை மறந்துவிட்டு லாஜிக் பார்க்காமல் சென்றால் ரத்தம் ரணம் ரௌத்திரம் படம் நிச்சயமாக மேஜிக் கொடுக்கும். 

 

ஆர்.ஆர்.ஆர் - பரவசம்!

 

 

சார்ந்த செய்திகள்