Advertisment

ஆக்‌ஷன் கதைக்களம் வென்றதா? ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ விமர்சனம்!

Joshua imai pol kaakha movie review

Advertisment

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் ரிலீசாகி இருக்கும் திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க. பொதுவாக காதல் படங்களையும் அதில் ஆக்‌ஷன் காட்சிகளையும் சேர்த்து கொடுக்கும் கௌதம் மேனன் இந்த முறை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படம் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சியில் அவருக்கு வரவேற்பு கிடைத்ததா, இல்லையா?இன்டர்நேஷனல் காண்ட்ராக்ட் கில்லர் ஆக இருக்கும் பிக் பாஸ் வருண் ஒரு நிகழ்வில் நாயகி ராஹியை சந்திக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. தான் ஒரு காண்ட்ராக்ட் கில்லர் என்ற உண்மையை ராஹியிடம் வருண் கூற, ராஹி காதலை முறித்துக் கொண்டு அமெரிக்கா சென்று விடுகிறார். இதற்கிடையே ஒரு மெக்சிகன் போதைப் பொருள் கடத்தல் தாதா போலீசில் சிக்கி விடுகிறார். அவருக்கு எதிராக வாதாட வக்கீல் ஆக களம் இறங்கும் ராஹியை கொல்லமொத்த கடத்தல் கார கும்பலும் போட்டி போட்டுக் கொண்டு படையெடுக்கின்றனர். ராஹியை காப்பாற்ற கில்லர் வருண் நியமிக்கப்படுகிறார். அவர் தன் காதலியை கொலைகாரர்களிடமிருந்து காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

பொதுவாக காதல் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளை வைத்து ரசிக்க வைக்கும் கௌதம் மேனன் இந்த முறை முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை 10 நிமிட இடைவெளியில் தொடர்ந்து சண்டை காட்சிகள் படம் முழுவதும் வருகிறது. விறுவிறுப்பாக செல்லும் இத்திரைப்படம் போகப்போக வேகம் எடுத்து இறுதியில் ஒரு திருப்பத்தோடு முடிந்து ரசிக்க வைத்திருக்கிறது. இருந்தும் ஒரு கதையாக பார்க்கும் பொழுது பெரிதாக எதுவுமே இல்லாமல் வெறும் ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி இப்படத்தை கொடுத்திருக்கிறார் கௌதம் மேனன். அதற்கு முதல் பாதியில் நல்ல பலனும் இரண்டாம் பாதியில் சற்றே அயற்சியுடன் கூடிய பலனும் கிடைத்திருக்கிறது. முதல் பாதையில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் சற்றே மிஸ்ஸிங். அதேபோல் வெறும் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே படம் முழுவதும் வருவது சில இடங்களில் சலிப்பு ஏற்படுத்துகிறது. இருந்தும் ஆக்‌ஷன் காட்சிகளை காட்சிப்படுத்திய விதமும் அதற்குள் வரும் காதல் காட்சிகளும் சிறப்பாக அமைந்து படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது.

நாயகன் வரும் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து இப்படத்தில் நடித்திருக்கிறார். மற்ற அனைத்து காட்சிகளையும் தவிர ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக பங்களிப்பு கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் ஸ்டைலிஷ் ஆக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அவருக்கு மாஸாக இருக்கிறது. அதற்கேற்றார் போல் தன் உடல்வாகை மாற்றிக் கொண்டு சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகளை உருவாக்க உதவி புரிந்திருக்கிறார். இவரது கமிட்மென்ட் நன்றாகவே தெரிகிறது. நாயகி ராஹி வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சின்ன சின்ன உடல் மொழி, வசன உச்சரிப்பு, முகபாவனைகள் என நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். இவருக்கும் வருணுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. சொல்லப்போனால் நாயகனைக் காட்டிலும் நாயகி சிறப்பாக நடித்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதியும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் டிவி புகழ் டிடி,ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் ஆர்டர் கொடுக்கும் பாட்டி கதாபாத்திரத்தை போல், இந்த படத்தில் நடித்திருக்கும் டிடி அந்த கதாபாத்திரத்திற்கான நியாயம் செய்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார் கிருஷ்ணா. ஒரே காட்சியில் வந்தாலும் மாஸ் காட்டியிருக்கிறார் மன்சூர் அலிகான். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

Advertisment

எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு யானிக் பென்னின் ஸ்டண்ட் கோரியோகிராபி நன்றாக உதவி இருக்கிறது. இவரது ஹாலிவுட் தரமான ஸ்டண்ட் காட்சிகள் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. பாடகர் கார்த்திக் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் நான் ஜோஸ்வா பாடல் கேட்கும் ரகம். அதேபோல் பின்னணி இசையிலும் தேர்ந்த இசையமைப்பாளர் போல் சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார். பொதுவாக கௌதம் மேனன் படங்கள் என்றாலே பாடல்களும் இசையும் சிறப்பாக இருக்கும். அதை இந்த படத்தில் கார்த்திக் கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்.

வழக்கமான கௌதம் மேனன் படங்கள் போல் வெறும் வாய்ஸ் ஓவரில் படம் இல்லாமல், முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி இத்திரைப்படம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவை அனைத்துமே ரசிக்கும்படி இருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஆங்காங்கே படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும், படம் சற்று வேகமாக நகர்வது ரசிகர்களுக்கு விறுவிறுப்பைக் கொடுத்துள்ளது.

ஜோஷ்வா - இமை போல் காக்க - அமர்க்களமான ஆக்‌ஷன்!

gautham menon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe