irugapatru movie review

எலி படம் கொடுத்த மாபெரும் தோல்விக்கு பிறகு திரை உலகை விட்டு காணாமல் போன இயக்குநர் யுவராஜ் தயாளன் விட்ட இடத்தை பிடிக்க இறுகப்பற்று படம் மூலம் மீண்டும் களம் இறங்கி இருக்கிறார். இந்தப் படம் அவருக்கு பெயர் சம்பாதித்து கொடுத்ததா, இல்லையா?

Advertisment

படத்தில் மூன்று ஜோடிகள். ஒரு ஜோடி விக்ரம் பிரபு, ஸ்ரத்தா ஸ்ரீநாத். இன்னொரு ஜோடி விதார்த், அபர்நதி. மற்றொரு ஜோடி ஸ்ரீ, சானியா அயப்பன் ஆகியோர். இந்த மூன்று ஜோடிகளுக்குள்ளும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது நாளடைவில் பிரிவு வரை சென்று விடுகிறது. இதை சைக்காலஜிஸ்ட் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தீர்த்து வைக்கும் நேரத்தில் அவருக்கும் அவரது கணவர் விக்ரம் பிரபுவுக்குமே பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. ஊருக்கே உபதேசம் சொல்லும் ஸ்ரத்தா ஶ்ரீநாத் தன் குடும்பத்தைகாப்பாற்றிக் கொள்ள தவறுகிறார். இதை அடுத்து மூன்று ஜோடிகளின் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

Advertisment

இப்படி ஒரு சிம்பிளான கதையை ஓரளவு சுவாரஸ்யமான திரைக்கதை மூலம், ஓரளவு ரசிக்கும்படி கொடுத்து கரை சேர்ந்திருக்கிறார் இயக்குநர் யுவராஜ். நம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை அப்படியே கண் மூடி நிறுத்தி, அதற்கு எந்த வகையில் தீர்வு காண வேண்டும் என்ற சொல்யூஷனையும் கொடுத்து, ஒரு நல்ல மெசேஜ் மூலம் குடும்ப படத்தை பார்த்த உணர்வை கொடுத்து கைதட்டல் பெற்றுள்ளார். மூன்று ஜோடிகளின் கதையை ஒன்றன்பின் ஒன்றாக காட்டாமல், நான் லீனியர் திரைக்கதை மூலம் திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். முதல் பாதி சற்று வேகமாக நகர்ந்து, இரண்டாம் பாதி விவேகத்துடன் சென்று முடிந்திருக்கிறது. முழுக்க முழுக்க எதார்த்த காட்சி அமைப்புகளை மட்டுமே நம்பி எடுத்து இருக்கும் இந்த திரைப்படம், ஒரு நல்ல முயற்சி.

ஸ்ரத்தா ஶ்ரீநாத், விக்ரம் பிரபு வாழ்க்கையில், அதிக கவனத்துடன் இருந்தாலும் தவறு என்பதை சுட்டி காட்டி இருக்கிறார் இயக்குநர். விதார்த், அபர்ணதிவாழ்க்கையில், குண்டாக இருப்பதுஒரு பிரச்சனை இல்லை என்பதை சுட்டி காட்டி இருக்கிறார். ஸ்ரீ, சானியா ஐயப்பன் வாழ்க்கையில், யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது என்ற மெசேஜை சுட்டிக்காட்டி இருக்கிறார். இப்படி அன்றாட வாழ்வில் நடக்கும் எதார்த்தமான விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டி அதற்கு தீர்வும் கொடுத்திருக்கிறார். இதற்கு பக்கபலமாக இதில் நடித்த நடிகர்களும் அவரவர் வேலையை மிகச் சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். குறிப்பாக விதார்த், அபர்ணதி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. மிக யதார்த்தமான கதாபாத்திரங்களை இவர்கள் இருவரும் மிக சிறப்பாக செய்து நடிப்பில் நன்றாக தேறி இருக்கின்றனர். விதார்த், தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அபர்ணதியும் அவரது பங்குக்கு மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஸ்ராத்தா ஶ்ரீநாத், விக்ரம் பிரபு ஆகியோர் எப்போதும் போல் இயல்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஶ்ரீ மற்றும் சானியா ஐயப்பன் ஆகியோரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கின்றனர்.

Advertisment

ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கின்றது. கோகுல் பினாய் ஒளிப்பதிவில் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குடும்ப உறவுகள் எவ்வளவு முக்கியம். அதில் நடக்கும் சின்ன சின்ன தவறுகளை கூட எப்படி சரி செய்து கொண்டு, வாழ்வை அழகாகவும் சந்தோஷமாகவும் எப்படி கடப்பது என்பதை ஆழமாகவும், அழுத்தமாகவும் கூறி அவரவர் பார்ட்னர்களை கடைசி வரை எப்படி இறுகப்பற்றி கொள்ள வேண்டும் என்பதை நேர்த்தியாக கூறி கவனம் பெற்று இருக்கிறார் இயக்குநர் யுவராஜ்.

இறுக்கப்பற்று - இறுக்கம் குறைவு! அழுத்தம் நிறைவு!