/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1245_0.jpg)
ஒரே ஷாட்டில் அதுவும் நான் லீனியர் திரைக்கதையில் இதுவரை உலகில் எந்த திரைப்படமும் வெளிவரவில்லை. ஆனாலும் வெளிநாடுகளில் சில சிங்கிள் ஷாட் படங்கள் வெளியாகி இருந்தாலும் அவைகள் லீனியர் படங்களாகவும், ஒரு நீண்ட காட்சியை எடுத்துவிட்டு அதை திரைப்படமாக கன்வெர்ட் செய்து கொடுத்த படங்களாகவே இதுவரை இருந்துள்ளன. இப்படியான பரீட்சார்த்த முயற்சிகள் பல்வேறு நாடுகள் மேற்கொண்டாலும் அப்படங்களில் குறைந்த அளவிலேயே நடிகர்களும், ஒரே இடத்தில் நடக்கும் படியான கதைகளும் இருக்கும் படி பார்த்துக் கொள்வர். எங்கே ஏதாவது ஒரு இடத்தில் தவறு நடந்து விடுமோ என்ற எச்சரிக்கை உணர்வோடு இப்படி படங்கள் எடுப்பது வழக்கம்.
ஆனால் நடிகர், இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரவின் நிழல் திரைப்படம் இந்த அனைத்து தடைகளையும் உடைத்து ஒரு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் கமர்சியல் படங்களுக்கு இணையாக அதில் காட்டப்படும் அத்தனை அம்சங்களையும் நான்-லீனியர் பாணியில் ஒரே ஷாட்டில் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படியான பல்வேறு இடையூறுகள் ஒரு படத்தை எடுப்பதற்கு இருக்கும் இந்த தருணத்தில் எப்படி ஒரே ஷாட்டில் ஒரு நான் லீனியர் படத்தை கொடுக்க முடியும்? இது எப்படி சாத்தியம்? வாருங்கள் பார்ப்போம்...
ஊரில் ஒரு மிகப்பெரிய பைனான்சியர் ஆக இருக்கும் பார்த்திபன் தன் கடைசி கட்டத்தில் இருக்கிறார். மிச்ச மீதி இருக்கும் இவரது எதிரிகள் இவரை போட்டு தள்ளுவதற்கு முன் இவர் அவர்களை போட்டுத்தள்ள கிளம்புகிறார். இந்தப் பயணத்தில் அவரது முந்தைய வாழ்க்கை பிளாஷ்பேக் ஆக விரிகிறது. அதில் இச்சமூகம் மூலம் அவர் எப்படி இந்த இடத்திற்கு வந்தார்? இதற்காக அவர் என்னவெல்லாம் இழந்தார்? அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கான காரணங்கள் என்ன? என்பதை விவரிக்கிறது இரவின் நிழல் திரைப்படம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1246_0.jpg)
முதலில் இப்படி ஒரு படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கே நடிகர், இயக்குநர் பார்த்திபனை பாராட்டியே ஆகவேண்டும். சாதாரணமாக ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது, அதற்காக உழைக்கும் கலைஞர்கள் சந்திக்கும் இன்னல்கள் எவ்வளவு, அதுவும் பல நாள் பல இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தி, அனைவரையும் ஒன்று சேர்த்து வேலை வாங்கி, அதில் தவறுகள் நடக்காத படி பார்த்துக்கொண்டு, அந்த படத்தை வெற்றி பெற வைப்பதற்கு ஒரு இயக்குநரின் போராட்டம் என்பது சொல்லில் அடங்காத ஒரு மாபெரும் செயல். இப்படியான சினாரியோவில் உருவாகும் படங்களே பல நேரங்களில் வெற்றி பெறாமல் போகிறது. அப்படி இருக்கும் இந்த சூழலில் ஒரு படத்தை ஒரே ஷாட்டில் அதுவும் நான் லீனியர் பாணியில் கொடுத்து அதை ரசிக்கவும் வைத்து வெற்றி பெறவும் செய்து ஒரு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார் இயக்குநர் நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
அது எப்படி நான் லீனியர் பாணியில் அதுவும் ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க முடியும்? என்ற கேள்விக்கு படம் ஆரம்பித்து காட்டப்படும் 30 நிமிடங்கள் அடங்கும் மேக்கிங் வீடியோவில் சிறப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் பதில் கூறியுள்ளார். இதன் பிறகு ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு முழு படம் ஆரம்பிக்கிறது கிட்டத்தட்ட 93 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தில் பெரும்பாலான இடங்களில் அயர்ச்சி ஏற்படாதவாறு ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்து அதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் பார்த்திபன். அதுவும் கதை யோசித்த விதத்தை மிகவும் கவனமாகவும், கெட்டிக்காரத்தனமாகவும் திரைக்கதை அமைத்து ஒரு மனிதன் தன் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் இருக்கும் பொழுது தன் வாழ்க்கையை ரீவைண்ட் செய்து பார்க்கும்படியான கதை அமைப்பை கொடுத்திருப்பதால் சிங்கிள் ஷாட் பாணியில் நான் லீனியர் திரைக்கதையில் இப்படத்தை கொடுக்க இக்கதையும் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளது.
இருப்பினும் டெக்னிக்கல் விஷயங்கள் மற்றும் படம் எடுக்கப்பட்ட விதம் ஆகியவை நமக்கு கூஸ்பம்ப் கொடுத்தாலும் படத்தின் பிற்பகுதியில் வரும் காட்சிகள் அழுத்தமாக இல்லாமல் அப்படியே கடந்து செல்வதாலும், ஆங்காங்கே சற்று அயர்ச்சியை கொடுப்பதாலும் சில நெருடல்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. காட்சிகளையும் இன்னமும்கூட அழுத்தம் நிறைந்த வேகமான திரைக்கதையோடு கொடுத்து இருந்திருக்கலாம். அதேபோல் படத்தில் இடம்பெற்ற சில வல்கேரிட்டி நிறைந்த காட்சிகள், மிகவும் ராவான பச்சை பச்சையாக பேசும் வசனங்கள் ஆகியவை கதை நடக்கும் இடங்களின் சூழலுக்கு ஏற்றால் போல் ஏற்றுக்கொள்ளும் படி இருந்தாலும், அவையும் சில இடங்களில் நெருடல்கள் ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. இதனால் சிறியவர்களும் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து பார்க்க முடியாதசூழலை இந்த மாதிரியான காட்சிகள் ஏற்படுத்தியுள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1244.jpg)
படத்தில் மொத்தம் ஐந்து பார்த்திபன்கள் நடித்துள்ளனர். அதில் முறையே ஜோஸ்வா, பிரவீன்குமார், சந்துரு, ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அந்தந்த வயதிற்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்தில் நாயகன் நந்துவாக நடித்துள்ளனர். இதில் நடித்த அனைவருமே இயக்குநர் பார்த்திபன் மனதில் இருந்த நாயகர்களை அப்படியே தத்ரூபமாக பிரதிபலித்து கைத்தட்டல் பெற்றுள்ளனர். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு முகபாவனைகளும், நடிப்பும், வசன உச்சரிப்பும் தேவையோ அதை சரியான நேரத்தில், சரியான அளவில் அதுவும் ஏதாவது ஒரு இடத்தில் தெரியாமலோ, தெரிந்தோ எந்த தவறு செய்தாலும் படத்தை முதலில் இருந்து தான் எடுக்க முடியும். அப்படி இருக்கும் சூழலில் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவும், நேர்த்தியாகவும், அதேசமயம் கவனமாகவும் செய்து ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளனர். அதேபோல் நாயகன் நந்துவிற்கு மூன்று கதாநாயகிகள். அவர்கள் முறையே சினேகா குமாரி, பிரிகிடா சாகா, சாய் பிரியங்கா ருத் ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களும் எந்த ஒரு இடத்திலும் அசகாமல், பிசகாமல் தெளிவான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்த்து உள்ளனர். குறிப்பாக தெலுங்கு பேசி நடித்திருக்கும் பிரிகிடா சாகா அழகான நடிப்பை வெளிப்படுத்தி காட்சிகளுக்கு உயிரூட்டியுள்ளார். இவர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோபோ சங்கர், வரலட்சுமி, ரேகா நாயர் மற்றும் இன்னும் சில நடிகர்கள் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிரமமின்றி சிறப்பாக செய்து ரசிக்க வைத்துள்ளனர்.
இப்படி ஒரு படத்தை உருவாக்குவதற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது டெக்னிக்கல் டீம் மட்டுமே. அவர்கள் இல்லையேல் இப்படம் இல்லை. இப்படி ஒரு சாத்தியமில்லாத படத்தை சாத்தியமாக்கியதற்கு பக்கபலமாக இருந்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அண்ட் டீம், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அண்ட் டீம், கலை இயக்குநர் விஜய் முருகன் அண்ட் டீம் ஆகியோர்களுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்.
குறிப்பாக ஏ ஆர் ரகுமானின் காயம், மாயவா, பாவம் செய்யாதிரு மனமே ஆகிய பாடல்கள் மனதை வருடுகின்றன. அதேபோல் காட்சிகளுக்கு உயிரூட்டும் படியான ஆழமான பின்னணி இசையை அசால்டாக கொடுத்து படத்தை உலகத்தரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இப்படத்தின் யூஎஸ்பி ஆக பார்க்கப்படும் ஏ. ஆர் ரகுமான் அதற்கான வேலையை செவ்வனே செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். இவரது பின்னணி இசை காட்சிகளை எலிவெட் செய்து பார்ப்பவர்களுக்கு மனதில் படத்தை எளிதாக கடத்தும் படி செய்துள்ளது. அதேபோல் ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவும், விஜய் முருகன் கலை இயக்கமும் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு காட்சியும் அடுத்த காட்சிக்கு எடுத்து செல்லும் டிரான்ஷிசனை சிறப்பான முறையில் அமைத்து பல்வேறு விருதுகளுக்கு தகுதியான வேலையை உலகத்தரத்தில் செய்துள்ளனர்.
ஒரே ஷாட்டில் அதுவும் நான் லீனியர் பாணி திரைக்கதையில் ஒரு படத்தை கொடுப்பது என்பதே ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் இச்சூழலில் அதை சற்று ரசிக்கும்படி கொடுப்பதற்காகவே இரவின் நிழல் படத்தை கண்டிப்பாக கொண்டாடலாம்.
இரவின் நிழல் - உலக சினிமாவிற்கு சவால்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)