Skip to main content

எப்படி இருக்கிறது விக்ரமின் கோப்ரா..? விமர்சனம்

 

 How is Vikram's Cobra..? Review

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் தோன்றும் திரைப்படம். டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் வெற்றிக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகும் படம். ஏ ஆர் ரகுமான் இசை, கணிதத்தை வைத்து நடக்கும் கொலைகள் என பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் கோப்ரா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?

 

பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை பலவிதமான கெட்டப்புகளில் தோன்றி கணிதத்தை அடிப்படையாக வைத்து கொலை செய்கிறார் விக்ரம். அந்தவகையில் பாதிரியார் கெட்டப்பில் தோன்றி ஸ்காட்லாந்து இளவரசரை கொன்றுவிட்டு எஸ்கேப் ஆகி விடுகிறார். இந்த கேசை இன்டெர்போல் ஆபிஸரான இர்பான் பதான் விசாரிக்க துவங்குகிறார். இதே போன்ற பேட்டர்னில் ஒரு கொலை இந்தியாவில் உள்ள ஒரிசா முதல்வரை கொலை செய்த போது இருந்ததாக ஆராய்ச்சி செய்து அதை ஒரு கட்டுரையாக எழுதுகிறார் மற்றொரு கணித மேதையும், கிரிமினாலஜி மாணவியுமான மீனாட்சி கோவிந்தராஜன். இந்த தகவலை அறிந்த இர்பான் பதான் இந்தியா வந்து மீனாட்சி உடன் கைகோர்த்து கொலையாளியை தேட ஆரம்பிக்கிறார். இதையடுத்து கணித மேதை சீயான் விக்ரம் ரஷ்யாவில் உள்ள டிபன்ஸ் மினிஸ்டரை கொலை செய்துவிட்டு மீண்டும் எஸ்கேப் ஆகி விடுகிறார். அப்பொழுது ஒரு மர்ம ஆசாமி இன்டர்போல் அலுவலக கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து அதன் மூலம் சீயான் விக்ரம் பற்றிய தகவல்களைக் கொடுத்து அவரை காட்டி கொடுத்து விடுகிறார். இதைத்தொடர்ந்து அந்த மர்ம ஆசாமி யார்? அவருக்கும் விக்ரமுக்கும் என்ன சம்பந்தம்? விக்ரம் ஏன் இந்த கொலைகளை செய்கிறார்? இர்பான் பதான் கொலையாளியை பிடித்தாரா, இல்லையா? என்பதே குழப்பங்கள் நிறைந்த கோப்ரா படத்தின் மீதி கதை.

 

இன்றைய காலகட்டத்தில் ஒரு இயக்குனராக ஜெயிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான்.  அதற்காக இயக்குனர்கள் புத்திசாலித்தனமாக இருப்பதும் அவசியம் ஆகிறது. இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தன்னை மிகவும் இன்டெலிஜென்ட்டான இயக்குனர் என்பதுபோல் இப்படம் மூலம் காட்ட முயற்சித்துள்ளார். அதை அவர் சரியாக செய்திருந்தாலும் அதுவே இந்த படத்திற்கு சற்று பாதகமாக அமைந்துள்ளது. தனக்குத் தெரிந்த அத்தனை வித்தைகளையும் ஓவர் டோஸ் ஆக கொடுத்து ரசிகர்களை சற்று குழப்பமடைய செய்துள்ளார். ஒரு சிம்பிளான கதையில் கணிதத்தை அழகாக உட்புகுத்தி கதையாக பார்க்கும்பட்சத்தில் மிக சுவாரசியமாக உருவாக்கிய இயக்குனர் திரைக்கதையில் ஏனோ சற்று தடுமாறி இருக்கிறார். படம் முழுவதும் டேட்டாக்களை அள்ளித்தெளித்து வைத்துள்ளதே சற்று மைனஸ் ஆக மாறியுள்ளது. குழப்பமான திரைக்கதை அமைத்து ரசிகர்களுக்கு அயர்ச்சி ஏற்படும்படி செய்துள்ளார். குறிப்பாக பத்து வருடங்களுக்கு முன் இருந்த டிரெண்டில் திரைக்கதை அமைத்து அதை இக்காலகட்டத்திற்கு ஏற்றார் போல் சற்று பட்டி டிங்கரிங் பார்த்து அதன் மூலம் ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். படத்தின் திரைக்கதை சங்கர், முருகதாஸ், அட்லீ படங்களை ஆங்காங்கே ஞாபகப்படுத்தும்படி அமைந்துள்ளது. அதேபோல் படத்தின் நீளமும் மூன்று மணி நேரத்திற்கு மேல் இருப்பதால், பார்வையாளர்களை பல இடங்களில் சோதிக்கவும் செய்துள்ளது. இருந்தும் படத்தின் மேக்கிங், கதை யோசித்த விதத்திலும், அதை காட்சிப்படுத்திய விதத்திலும் படம் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது. முதல் பாதியில் இருந்த காதல் காட்சிகளிலும், இரண்டாம் பாதியில் இருந்த சைக்கலாஜிக்கல் காட்சிகளிலும், ஆங்காங்கே கத்தரிப்போட்டு சில பிளாஷ் பேக் காட்சிகளிலும் கத்திரிப்போட்டு படத்தை இரண்டரை மணி நேரத்திற்கு மிகாமல் குறைத்து இருந்தால் இந்த படம் நிச்சயமாக பிளாக்பஸ்டர் பட வரிசையில் இணைந்திருக்க நிறைய வாய்ப்பு இருந்திருக்கும்.

 

சீயான் விக்ரம் எப்போதும் போல் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் வருத்தி உலகத்தரம் வாய்ந்த நடிப்பை இந்த படத்திலும் வெளிப்படுத்தி பல இடங்களில் கைத்தட்டல் பெற்றுள்ளார். குறிப்பாக பல்வேறு கெட்டப்புகளில் தோன்றும் இவர் அந்த கேரக்டர்களாகவே மாறி பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து பரவசமூட்டி காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார். குறிப்பாக அந்நியன் பட பாணியில், அவருக்குள் நடக்கும் ஹாலுசினேஷனில் வரும் கேரக்டர்களுடன் பேசும் காட்சிகளில் நடிப்பு ராட்சசனாகவே மாறி இருக்கிறார். இவருடன் சேர்ந்து அந்த ஹாலுசினேஷனில் வரும் கேரக்டர்களும் ஒரே நேர்கோட்டில் நடித்து தியேட்டரில் கைதட்டல் பெற்றுள்ளனர்.


வழக்கமான நாயகியாக தோன்றியிருக்கும் கே ஜி எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். அதேபோல் கணித மாணவியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியை காட்டிலும் அதிக காட்சிகளில் தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். இவருக்கும் இர்ஃபான் பதானுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. தமிழ் படத்தில் அறிமுகமாகி இருக்கும் இர்பான் பதான் தனக்கு கொடுத்த வேடத்தை சிறப்பாக செய்து, தான் ஒரு அறிமுக நடிகர் என்பதே தெரியாத அளவுக்கு அழகான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார்.

 

இவர்களுடன் நடித்திருக்கும் ஜான் விஜய் சைலன்டான வில்லத்தனம் காட்டி ஆங்காங்கே மிரட்டி இருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வரும் கே எஸ் ரவிக்குமார் சுரேஷ் மேனன் ஆகியோர், அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து காட்சிகளுக்கு வலு சேர்த்து உள்ளனர். பிளாஷ்பேக்கில் சிறு வயது விக்ரமின் காதலியாக வரும் மிருநாளினி அவருக்கான வேலையை அழகாக செய்துவிட்டு சென்றுள்ளார். சில காட்சிகளே தோண்றினாலும் ரோபோ சங்கரும் ஆனந்தராஜும் அவர் அவருக்கான வேலையை சிறப்பாக செய்து தியேட்டரில் கைதட்டல் பெற்றுள்ளனர். இவர்களைப் போலவே சிறு வயது விக்ரமாக நடித்திருக்கும் நடிகர் அவருக்கான வேலையை அழகாக செய்து நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். கார்ப்பரேட் வில்லனாக நடித்திருக்கும் ரோஷன் மேத்யூ வழக்கமான வில்லன்கள் செய்யும் செயல்களை செய்து மிரட்டி விட்டு சென்றிருக்கிறார்.

 

படம் மிகவும் பிரம்மாண்டமாக தெரிகிறது. அதற்கு முக்கிய காரணம் படத்தின் மேக்கிங். அந்த மேக்கிங்கில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கிருஷ்ணன். இவரது ஒளிப்பதிவு படத்தை ஹாலிவுட் லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் தும்பித்துள்ளல் பாடல் ஹிட்ரகம். இருந்தும் பின்னணி இசையில் ஏனோ பழைய ஏ.ஆர் ரகுமான் சற்று காணாமல் போய் உள்ளார். ஸ்டண்ட் காட்சிகளும், மாஸான காட்சிகளிலும் திறன் பட பின்னணி இசை கொடுத்த இசையமைப்பாளர் பல முக்கியமான காட்சிகளில் அயர்ச்சி ஏற்படும்படி இசையை கொடுத்துள்ளது படத்திற்கு சற்று பாதகமாக அமைந்துள்ளது.

 

முழுக்க முழுக்க விக்ரமின் நடிப்பை நம்பியும், அதன் மூலம் கிடைக்கும் கைதட்டல்களை நம்பியும் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் அஜய் ஞானமுத்து திரைக்கதையிலும் இன்னும் கொஞ்சம் கவனமாக செயல்பட்டு குழப்பம் ஏற்படாதவாறு செய்திருந்து, இன்டெலிஜென்டான விஷயங்களை ஓவர் டோஸாக கொடுக்காமல் படத்தை காட்சிப்படுத்தி, படத்தின் நீளத்தையும் குறைத்து இருந்தால் இன்னமும் இந்த படம் நன்றாக பேசப்பட்டிருக்கும்.

 

கோப்ரா - எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான பழைய ஃபார்முலா!