Advertisment

'ஹிப் ஹாப்' ஆதிக்கு என்ன ஒரு தைரியம்! நான் சிரித்தால் - விமர்சனம்

'மீசைய முறுக்கு', 'நட்பே துணை' வெற்றிகள் தந்த உற்சாகத்தோடு 'நான் சிரித்தால்...' எனவந்திருக்கிறார் நாயகன் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி. பள்ளி, கல்லூரி மாணவர்களை அவர் கவர்ந்திருக்கிறார் என்பதை அவரது என்ட்ரியிலும் பாடல்களின்போதும் அரங்கில் எழும் உற்சாகத்தில் உணர முடிகிறது. 'நான் சிரித்தால்' தொடங்கும்போது இருக்கும் அந்த உற்சாகம் படம் முடியும் வரை தொடர்கிறதா?

Advertisment

hihop aadhi

எஞ்சினியரிங் படிப்பை அரியர்களுடன் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஆதியின் வாழ்வில் திடீரென தொடர் சோதனைகள். அலுவலகத்தில் பிரச்னை, காதலில் பிரச்னை என பிரச்னைகள் இறுக்க மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆதிக்கு சோகம், அதிர்ச்சி, பதற்றம் என எதிர்மறை உணர்வுகளுக்கு ஆளாகும்போது சிரிக்கும்நோய் (nervous laughter) வருகிறது. தனக்கு சோகம் நேர்ந்தாலோ, யாருக்காகவாவது பரிதாபப்பட்டாலோ அழுவதற்கு பதிலாக சிரிக்கத் தொடங்குகிறார் ஆதி. இதனால், பிரச்னைகள் மேலும் பெரிதாகின்றன. இதற்கிடையே சென்னையின் இரு பெரும் காமெடி ரௌடிகளுக்கு இடையிலான பகையில் தெரியாமல்மாட்டிக்கொள்கிறார். ஆதியின் பிரச்னைகள் முடிந்ததா, காதல் வென்றதா என்பதே இயக்குனர் ராணாவின் 'நான் சிரித்தால்'.

Advertisment

ராணா, சுந்தர்.சியின் சிஷ்யர் போல படம் எடுத்திருக்கிறார். காமெடி ரௌடிகள், ஆள் மாறாட்டம், கூச்சல் குழப்பம், அடிதடி காமெடி, இவர் பறந்து அவர் மேல் விழுவது, அவர் விழுந்து இவர் அடிபடுவது என பெரும்பாலான காமெடிகள் சுந்தர்.சி டைப் காமெடிகள். 'அவன் நல்லவன்', 'ஊருக்கு ஒரு பிரச்னைன்னா தானா போய் நின்னு மாட்டிக்குவான்', அலுவலகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான பேச்சுஎன ஆதிக்கு இமேஜ் பூஸ்ட் கொடுத்து எழுதியுள்ளார் ராணா. அழுக வேண்டிய, கோபப்பட வேண்டிய இடத்தில் சிரிக்கும் நோய் என்ற சுவாரசியமான களத்தை எடுத்துக்கொண்டவர் அதில் இன்னும் சுவாரசியமான, நகைச்சுவையான காட்சிகளை உருவாகியிருக்கலாம். சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகும் 'சிரிப்பு' காமெடி தொடர்ந்து பார்க்க அயர்ச்சி தருகிறது. தல - தளபதி ரசிகர்களிடம் ஆதி மாட்டிக்கொள்ளும் காட்சிகள் உண்மையில் 'கலகல'. அதுபோல மேலும் பல காட்சிகளை எதிர்பார்க்கும் நமக்கு சற்றே ஏமாற்றம்.

aiswarya menon

ஆதி, 'துறுதுறு சுறுசுறு' இளைஞனாக வழக்கம் போல கலக்குகிறார். இன்றைய இளைஞர்களின் பிரதிநிதியாகப் பொறுப்பேற்று ஹெலிகாப்டர் மாப்பிள்ளை கேட்கும் பெண்கள் உள்பட அத்தனை 'அநீதி'களுக்கு எதிராகவும்கேள்வி கேட்கிறார். ஆனால், நடிப்பில் நுண்ணுணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் இன்னும் பயிற்சி, அனுபவம் தேவைப்படுகிறது போல. 'பாட்ஷா' டைப்பில் வைக்கப்பட்டுள்ள அந்த இடைவேளை காட்சி காமெடிதான் என்றாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கையும் திட்டமும் தெரிகிறது. பாடல்களில் ஆதியின் உற்சாகம் தியேட்டரிலும் தெரிகிறது. 'எனக்கு பிரேக்-அப்பு' பாடல் இளைஞர்களுக்குகொண்டாட்டமாக இருக்கிறது. பொறியியல் படிப்பு குறித்த கிண்டலும் அவநம்பிக்கையும் தொடர்ந்து ஆதி படங்களில் வைக்கப்படுகிறதோ என்று யோசிக்கவைக்கின்றன சில காட்சிகளும் வசனங்களும்.

shara munees

கே.எஸ்.ரவிக்குமார், ரவி மரியா, 'படவா' கோபி, முனீஷ்காந்த், ஷாரா, ராஜ்மோகன், 'எருமசாணி' விஜய் என நடிகர்கள் யாரும் குறை சொல்ல வைக்கவில்லை. ஆனால், அவர்களின் பாத்திரங்களில் நம்மை கவர்வது 'படவா' கோபி உள்ளிட்ட வெகு சிலதான். யோகி பாபு கடைசியில் என்ட்ரி கொடுத்து பத்துக்கு ஐந்து என்ற கணக்கில் சிரிக்க வைக்கிறார். நாயகி ஐஸ்வர்யா மேனன், அழகாக வந்து செல்வதற்கும் 'பிரேக்-அப்' பாடலுக்கும் பயன்படுகிறார். 'பிக்பாஸ்' ஜூலியை கிண்டல் செய்வதற்கென்றே இந்தப் பாத்திரம் கொடுக்கப்பட்டதுபோல. அவரது சொல், பல் எல்லாவற்றையும் நகைச்சுவையாக்கியது நியாயமா? அது போல தோற்றத்தை, குறைகளை கிண்டல் செய்யும் காமெடிகளும் நிறைய. இத்தனையும் சேர்ந்து நம்மை சிரிக்க வைப்பது என்னவோ குறைவாகத்தான்.

ஹிப்ஹாப் தமிழாவின் இசை படத்தை முழுவதுமாய் ஆக்கிரமிக்கிறது. அதீத சத்தம் பல இடங்களில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. உண்மையில் கொண்டாட்டமாக இருப்பது ஒரு பாடல். மற்றவை 'கொஞ்சம் குறைச்சுக்கலாமே' ஃபீலிங்கைத்தான் கொடுக்கின்றன. வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவு சில காட்சிகளை பிரம்மாண்டமாக்கியிருக்கிறது.

படத்தின் முடிவில் நல்ல கருத்தை சொல்கிறார் 'ஹிப்ஹாப்' ஆதி. அதை விட முக்கியம் படம் முழுவதும் இன்னும் நல்ல திரைக்கதை இருப்பது. 'நான் சிரித்தால்' பார்த்தால் ஆங்காங்கே சிரிக்கலாம்.

sundar c nansirithal hiphop adhi moviereview
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe