Skip to main content

பேண்டஸி ஆக்‌ஷன் ஹிட்டா? - ‘ஹனுமன்’ விமர்சனம் 

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
hanuman movie review

இந்திய சினிமாவில் சமீப காலங்களாக வெளியாகும் பக்தி பேண்டஸி திரைப்படங்கள் போதிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதற்கு காரணம் கதைக்கும், திரைக்கதைக்கும் போதிய கவனம் செலுத்தாமல் படத்தின் மேக்கிங்க்கு மட்டுமே அதிக கவனம் செலுத்துவதால் இந்தப் போக்கு தற்போது நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக சில படங்கள் மேகிங்கிலும் சொதப்பி படுதோல்வி அடைந்து விடுகிறது. அந்த வகையில், அதே ஜானரை மையமாக வைத்து ரிலீஸ் ஆகி இருக்கும் மற்றுமொரு பக்தி பேண்டஸி திரைப்படமான ஹனுமன் திரைப்படம் மேற்கூறிய மைனஸ்களை சரி செய்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதா இல்லையா?

வரலட்சுமியின் தம்பியாக வரும் நாயகன் தேஜா சஜ்ஜா வெளியூரில் டாக்டருக்கு படித்துவிட்டு சொந்த கிராமத்துக்கு திரும்பும் அமிர்தா ஐயரை சிறு வயது முதலே ஒருதலையாக காதலிக்கிறார். அந்த கிராமத்தில் ஊர் காவலனாக இருக்கும் ராஜ் தீபக் ஷெட்டி அந்த ஊர் மக்களுக்கு பல்வேறு கொடுமைகளை செய்து வருகிறார். இவரை தட்டிக் கேட்கும் நபர்களை அவர் போட்டுத் தள்ளி விடுகிறார். நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் வெளியூரிலிருந்து கிராமத்திற்கு வந்திருக்கும் அமிர்தா ஐயர், ராஜ் தீபக் செட்டியின் அட்டூழியத்தை எதிர்த்து குரல் கொடுக்கிறார். அந்த சமயம் அமிர்தா ஐயரை ஒரு கொள்ளை கும்பல் காட்டில் வைத்து கொலை செய்ய முயற்சி செய்கிறது. அந்த நேரம் நாயகன் தேஜா சஜ்ஜா அமிர்தாவிற்கு தெரியாமலேயே அவரைக் காப்பாற்றி விட்டு கொள்ளைக்காரர்களிடம் சரமாரியாக கத்தி குத்து வாங்கி உயிருக்குப் போராடும் நிலையில் மலை உச்சியிலிருந்து மிகப் பெரிய ஆஞ்சநேயர் கோயில் இருக்கும் ஏரியில் விழுந்து கடலில் அடித்துச் செல்லப்படுகிறார். கடலுக்கு அடியில் அவருக்கு ஒரு அதிசய கல் கிடைக்கிறது. அந்தக் கல் நாயகனிடம் வந்த பிறகு அவர் உயிர் பிழைத்து பல அபூர்வ சக்திகளைப் பெற்று சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். கல்லினால் அவருக்கு கிடைத்த சக்தியைப் பயன்படுத்தி அந்த ஊர் மக்களுக்கு பல நன்மைகள் செய்கிறார்.

இதை ஒரு youtube வீடியோவில் பார்த்த வில்லன் வினை, அந்தக் கல்லைக் கைப்பற்ற நினைக்கிறார். சிறு வயது முதலே தானும் ஒரு சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வினை அதற்காக தன் குடும்பத்தையே கொலை செய்கிறார். அந்த அளவு சூப்பர் ஹீரோ கனவு அவரை வெறி பிடித்தவராக மாற்றுகிறது. இதற்கிடையே வில்லன் வினை அந்தக் கல்லை நாயகனிடமிருந்து பிடுங்க அந்த கிராமத்திற்கு வருகிறார். வந்த இடத்தில் நாயகன் தேஜாவுக்கும் வினைக்கும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் யார் வெற்றி பெற்று சூப்பர் ஹீரோவாக மாறினார்கள்? என்பதே இப்படத்தின் மீதி கதை.ஒரு பக்தி நிறைந்த பேண்டஸி படத்தை மிகவும் ஜனரஞ்சகமான காதல், பாசம், சோகம் என அத்தனை கமர்சியல் அம்சங்களோடு விறுவிறுப்பான படமாக மாற்றி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்து கவனம் பெற்றிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் வர்மா. ஆன்மிகத்தையும் மனிதர்களின் எமோஷனலையும் சரிவரக் கொடுத்து அதனுள் ஜனரஞ்சகமான விஷயங்களை உட்பகுத்தி  தரமான விஃப் எக்ஸ் உதவியோடு ஒரு சிறப்பான ஹாலிவுட் படம் பார்த்த உணர்வை இப்படம் மூலம் தந்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் வர்மா. கதையும் அதற்கு ஏற்றவாறு விறுவிறுப்பான திரைக்கதையும் அமையும் பட்சத்தில் நாயகன் யாராக இருக்கும் பட்சத்தில் அந்த படம் வெற்றி பெறும் என்பதை இப்படம் மூலம் நிரூபித்துக் காட்டி இருக்கிறது ஹனுமன் திரைப்படம்.

கிட்டத்தட்ட புதுமுக நாயகனாகவே பார்க்கப்படும் தேஜா சஜ்ஜாவை வைத்துக்கொண்டு இந்த அளவு ரசிக்கும்படியான படத்தைக் கொடுத்ததற்கு இயக்குநருக்கு பாராட்டுக்கள். குறிப்பாக காதல் காட்சிகளும், சென்டிமென்ட் காட்சிகளும், பக்தி மயமான காட்சிகளும் அதற்கு ஏற்றார்போல் அமைந்த மிக சிறப்பான கிராபிக்ஸ் காட்சிகளும் தரமாக அமைந்திருப்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. ஒரு குறுகிய பட்ஜெட்டில் இந்த அளவு சிறப்பான கிராபிக்ஸ் காட்சிகளோடு கூடிய ஒரு தரமான படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்தப் பொங்கல் ரேசில் வெற்றி பெற்ற படமாக ஹனுமன் படம் திகழ்ந்திருக்கிறது. அதேபோல் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் ஒரு சேர ரசிக்கும்படியான விஷயங்களை இப்படத்தில் வைத்து மிகவும் கம்ஃபோர்ட்டபில் ஆக படத்தை கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் வர்மா.

வளர்ந்து வரும் நடிகர் தேஜா சஜ்ஜா இந்தப் படத்திற்கு என்ன தேவையோ அதைத் தன் துடிப்பான நடிப்பின் மூலம் சிறப்பாகக் கையாண்டு ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றிருக்கிறார். இவருக்கும் உடன் நடித்த காமெடி நடிகர்களுக்குமான கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். அதேபோல் காமெடி காட்சிகளிலும் தேர்ந்த நடிகர்களைப் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். இவரது கரியரில் இந்த படம் ஒரு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கிறது. நாயகி அமிர்தா ஐயர் நாயகனுக்கு ஏத்த ஜோடி. அழகாக இருக்கிறார் அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லன் வினை எப்பொழுதும் போல் கார்ப்பரேட் வில்லன் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களை கொடுத்து மிரட்டி பயமுறுத்துகிறார். அவருக்கு கொடுக்கப்பட்டது என்ன வேலையோ அதை நிறைவாகச் செய்திருக்கிறார். நாயகன் தேஜாவின் அக்காவாக வரும் வரலட்சுமி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கலங்கடித்திருக்கிறார். இவருக்கும் நாயகன் தேஜாவுக்குமான கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. குறிப்பாக இறுதிக் காட்சிகளில் நம்மை கண்கலங்க வைத்து விடுகிறார்.

ஊர்க்காவலனாக வரும் ராஜ் தீபக் சிறிது நேரமே வந்தாலும் வில்லத்தனம் காட்டி மிரட்டியிருக்கிறார். நாயகன் தேஜாவின் நண்பராக நடித்திருக்கும் நடிகர், டீக்கடை வைத்திருக்கும் நடிகர், வெண்ணிலா கிஷோர் ஆகியோர் காமெடி போர்ஷனுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு அதை சிறப்பாகக் கையாண்டு நம்மை சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள். இவர்களது ஸ்பாண்டெனியஸ் ஆன நடிப்பு படத்துக்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. சாமியாராக வரும் சமுத்திரக்கனி அவ்வப்போது படத்தில் தோன்றி மறைகிறார்.

ஷிவேந்திரா ஒளிப்பதிவில் காட்சிகள் மிக மிகப் பிரமாண்டம். இவருக்கு பக்கபலமாக மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகள் உதவி புரிந்துள்ளன. குறிப்பாக கிராமம், ஆஞ்சநேயர் சிலை வி.எஃப்.எக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு கவனம் பெற்றுள்ளது. இப்படத்திற்கு அதுவே மிகப் பெரிய பிளஸ் ஆகவும் அமைந்திருக்கிறது. கௌரா ஹரியின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பிரமாண்டத்தைக் கூட்டியிருக்கிறது. குறிப்பாக இவரது பக்தி மயமான பின்னணி இசை பார்ப்பவர்களுகளை மெய் சிலிர்க்க வைத்தது. படத்தில் வேலை செய்த பெரும்பாலான முதன்மை டெக்னீசியன்கள் ஒரு சேர சிறப்பான வேலை செய்து இப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். சினிமாவில் அவ்வப்பொழுது யாருமே எதிர்பாராத வகையில் சில படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று பிரமாண்ட வெற்றியைப் பெரும். அந்த வரிசையில் இந்த ஹனுமன் திரைப்படம் இணைந்து இருக்கிறது.

ஹனுமன் - பொங்கல் ரேஸ் வின்னர்!

சார்ந்த செய்திகள்