Advertisment

இந்தப் படம் பார்த்தால் சுகர் வருமா? சில்லுக்கருப்பட்டி - விமர்சனம் 

சினிமாவின்பல்வேறு வடிவங்களும், கிட்டத்தட்ட அனைத்துமே,தமிழ் சினிமாவில் முயன்று பார்க்கப்பட்டுள்ளன. 'ஆந்த்தாலஜி' என்பது சினிமாவின் ஒரு வடிவம். ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகள், ஒன்றோடொன்று தொடர்புடையதாகவோ இல்லாமலோ ஒரு திரைப்படமாக உருவாக்கப்படுவது 'ஆந்த்தாலஜி' (பொதுவாகவும் அந்த வார்த்தையின் அர்த்தம் அதுதான்). அந்த வகையில் தமிழில் சில முயற்சிகள் நடந்திருந்தாலும், பெரிய வெற்றியாக அது அமைந்ததில்லை. 'சில்லுக்கருப்பட்டி' அந்த வகை முயற்சி. இது வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை படம் அளித்திருக்கிறது.

Advertisment

samuthirakani sunaina

ஒரு திரைப்படம், ஒரு மைய இலக்கைகொண்டிருக்க வேண்டும், அதை நோக்கி பாத்திரங்கள் பயணிக்க வேண்டும், அதில் தடைகள் வேண்டும், பாத்திரங்களுக்கிடையே பிரச்னைகள் வேண்டும், திருப்பங்கள் வேண்டும்... இதெல்லாம் சிறப்பாக அமைந்தால்தான் அது திரைப்படமா? ஒரு நல்ல திரைப்படத்துக்குஇவையெல்லாம் கண்டிப்பாக வேண்டுமா என்று கேட்டு, தேவையில்லை என்று இனிமையாக, அழகாக, அமைதியாக பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹலிதா ஷமீம். 'பூவரசம் பீப்பீ' மூலம் பால்ய வயதின் வெப்பம், சோகம், மகிழ்ச்சி, குழப்பம், அனைத்தையும் கூறி கவனம் ஈர்த்தவர் 'சில்லுக்கருப்பட்டி'யுடன் வந்திருக்கிறார்.

'பிங்க் பேக்', 'காக்கா கடி', 'டர்ட்டுல்ஸ்', 'ஹே அம்மு' என நான்கு கதைகள். நான்குக்குமான தொடர்பு காதல். வெவ்வேறு வயதில், தளத்தில் நிகழும் காதலை மிகைகள் இல்லாமல் (வெகு சில இடங்கள் தவிர்த்து)இயல்பாக, இனிமையாகசொல்லியிருக்கிறார் இயக்குனர். மாநகரின் பணக்காரர்கள் குப்பையாகக் கருதித் தூக்கியெறியும் பொருள்களிலிருந்து தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்து வாழும் சிறுவன் மாஞ்சா, அந்த குப்பைக்குள் தன் காதலை கண்டெடுக்கிறான். தினமும் அவன் காணும் ஒரு பிங்க் பைக்குள் இருக்கும் பொருள்களை வைத்தே மிட்டி ('தெய்வத்திருமகள்' சாரா) மீது காதல் வருகிறது. அவளை தேடிப் போகிறான். அதன் பிறகு, நாம் பயப்படுவது போல காதல், பிரச்னை என்றெல்லாம் போகாமல் கவிதையாக முடிகிறது 'பிங்க் பேக்'.

manikandan nivethitha

Advertisment

ஐடி ஊழியராகவும் மீம் கிரியேட்டராகவும் இருக்கும் மணிகண்டனுக்கும் ஃபேஷன் டிசைனர்நிவேதிதாவுக்கும் ஏற்படும் காதல்'காக்காகடி'. காதலை சமகால விஷயங்களுடன் மிக யதார்த்தமாகப் பேசுகிறது. திடீரென கேன்சரால் பாதிக்கப்படும் மணிகண்டனை துணைநின்று மீட்கும் நிவேதிதா, படம் பார்ப்பவர்களின் 'ரிலேஷன்ஷிப் கோல்' ஆக வாய்ப்புகள் அதிகம். கேன்சர் என்றவுடன் இருமல், ரத்தம், சோகமெல்லாம் இல்லை. இந்தக் கதையும் மிக அழகாக நகர்ந்து இனிமையாக முடிகிறது. 'பூவரசம் பீப்பீ'யில் சிறுவர்களுக்கு ஏற்படும் முதல் உணர்வுகளைக் கூட தைரியமாகக் காட்சிப்படுத்தியவர் ஹலிதா. இந்தப் படத்திலும் பேசாத பொருள்கள் சிலவற்றை போறபோக்கில் பேசுகிறார். சரி, படத்தின் கதையை அப்படியே சொல்லிவிட்டீர்களே என்று தோன்றினால், இந்தப் படத்தின் கதையை தாராளமாக சொல்லலாம். ஏனெனில் அந்தக் கதைகளல்ல, கதைகள் தரும் இனிமையான அனுபவம்தான் 'சில்லுக்கருப்பட்டி'.

'டர்ட்டுல்ஸ்'... காலம் கடந்த, ஆனால் கனிந்த காதல். பிற உறவுகள் தள்ளி நிற்கும் அல்லது நிற்பதுபோல இருக்கும் காலகட்டத்தில் நமக்கென ஒரு துணை, ஒரு ஸ்பரிசம் தேடும், தேவைப்படும் வயதில் யசோதாவுக்கும் (லீலா சாம்சன்) நவநீதனுக்கும் (ஸ்ரீராம்)நிகழும் காதல். "நமக்கு நெருக்கமானவங்க மரணத்தில் இருந்து மீள்வதே வாழ்க்கையாகிப் போச்சுல்ல" போன்ற பக்குவமான பேச்சுகளும் "இந்தாங்க இஞ்சி டீ வித் ஆடட் டிகினிட்டி" போன்ற சின்ன குறும்புப்பேச்சுகளும் நிறைந்த காதலாக கவர்கிறது 'டர்ட்டுல்ஸ்'.

sriram leela samson

வேலையிலும் மொபைல் போனிலும் மூழ்கி வேறெதையும் பெரிதாகக் கவனிக்க, கண்டுகொள்ள நேரமில்லாத நடுத்தர வயதை எட்டிக்கொண்டிருக்கும் ஆடிட்டர் தனபாலுக்கும்(சமுத்திரக்கனி) வீட்டை கவனிப்பதேவாழ்க்கையாகிப் போன அவரது மனைவி அமுதினிக்குமான(சுனைனா), இடைவெளி பெருகுவதும் இடையில் வேறு ஒரு பொருளால் இடைவெளிநிறைந்து இருவரும்நெருங்குவதும்தான் 'ஹே அம்மு'. குடும்பத்தில் செலவிடப்பட வேண்டிய நேரத்தை பணியும் ஃபோனும் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் யதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ளன. அருகிலேயே இருப்பவர்கள் மீது ஏற்படும் அலட்சியம், வருடங்களோடு சேர்ந்து மெல்ல வடியும் காதல் என உறவுப் பாடமாக அமைந்துள்ளது இந்தப் பகுதி. பாடமென்றால் சீரியசான பாடமில்லை, சிரிப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன.

நான்கு கதைகளிலுமே சின்னச்சின்ன சுவாரசியங்களோடு நகைச்சுவையும் சேர்ந்த வசனங்கள் பெரும் ஈர்ப்பு. படத்தில் நான்கு கதைகளும் வைக்கப்பட்ட வரிசையில் தனது திரைக்கதை ஸ்மார்ட்னெஸ்ஸைநிறுவியிருக்கிறார் ஹலிதா. ஒவ்வொரு கதையிலும் இருக்கும் இனிமை, சில்லுக்கருப்பட்டி என்ற பெயருக்கு நியாயம் செய்கிறது. இத்தனை இனிமையானஇந்தப் படத்தைப் பார்த்தால் திகட்டாதா, சுகர் வருமா என்றால் வராது. இது வெள்ளை ஜீனி அல்ல, கருப்பட்டி. அதிலும் 'இன்னும் கொஞ்சம் நீளுமோ' என்ற எண்ணம் இருக்கும்போதே முடிந்துவிடும் 'சில்லு சில்லான' கருப்பட்டி.

ragul

நடிப்பில் சமுத்திரக்கனி - சுனைனா, மணிகண்டன் - நிவேதிதா இணைகள்மற்றவர்களை விட இயல்பாக ஈர்க்கின்றன. மற்றவர்களும் பெரும் குறை வைத்துவிடவில்லை. பிரதீப்குமாரின்பின்னணி இசை படமெங்கும் சாரல் போல வீசிக்கொண்டே இருக்கிறது, சில இடங்களில் அதீதமாய். இப்படி ஒரு படத்தில்ஆங்காங்கே அமைதி இருந்திருக்கலாம். அபிநந்தன், மனோஜ் பரமஹம்ஸா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி ஆகியோரின் ஒளிப்பதிவு ஒவ்வொரு கதையையும்ஒரு அழகான கிரீட்டிங் கார்டாக மாற்றியுள்ளது. இயக்குனர் ஹலிதாவே படத்தை எடிட் செய்திருக்கிறார். தான் சொல்ல நினைத்ததை நினைத்த அளவில், வடிவத்தில் தந்திருக்கிறார். ஒவ்வொரு கதைக்குமான அந்த டைட்டில் டிசைனிங், அனிமேஷன்அழகு.

'ஓலா' பயணத்தில் இத்தனை முறை யதார்த்தமாக சந்திக்க முடியுமா, அலெக்ஸ்சாவை இப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமா போன்ற கேள்விகள் ஆங்காங்கே எழலாம். நான்காவது கதை மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான சம்பவங்களுடன் நீள்கிறதே என்ற எண்ணம் தோன்றலாம். இப்படி சில சின்னச் சின்ன சினிமா சுதந்திரங்களை எடுத்துக்கொண்டு ஒரு நல்ல படத்தை தந்திருக்கும் இயக்குனருக்காக அந்தக் கேள்விகளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லலாம்.

moviereview samuthirakani sillukarupatti
இதையும் படியுங்கள்
Subscribe