
சதுரங்க வேட்டை படம் மூலம் பிரபலமான ஹீரோவாக அறியப்பட்ட நடிகர் நட்டி அவ்வப்போது குணசத்திர வேடங்களில் நடித்து வரவேற்பைப் பெற்று வருகிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக நட்டி களம் இறங்கி இருக்கும் குருமூர்த்தி திரைப்படம் எந்த அளவு வரவேற்பை பெற்றுள்ளது?
தொழிலதிபர் ராம்கி அரசாங்கத்துக்கு தெரியாமல் தான் பதுக்கி வைத்திருக்கும் ஐந்து கோடி ரூபாய் கருப்பு பணத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு செல்லும் வழியில் சில நபர்களால் அந்த பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. அந்தக் கொள்ளையை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி நட்டி அண்ட் டீம் களம் இறங்குகிறது. இதையடுத்து அந்த பணத்தை கொள்ளையடித்தது யார்? அதை நட்டி கைப்பற்றினாரா, இல்லையா? ராம்கியின் நிலை என்னவானது? என்பதே குருமூர்த்தி படத்தின் மீதி கதை.
பொதுவாக ஒரு போலீஸ் படம் என்றாலே அதுவும் கமர்சியல் படமாக எடுக்கும் பொழுது ஒரு வில்லனுக்கும் ஹீரோவுக்குமான கேட் அண்ட் மவுஸ் கேமாகத்தான் பெரும்பாலும் படம் இருக்கும். ஆனால் இந்தப் படம் அப்படி இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடக்கும் ஒரு திருட்டு சம்பவத்தை ஒரு போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடிக்கிறார் என்ற புதுமையான முயற்சியை கையிலெடுத்துள்ளார் இயக்குநர் தனசேகர்.
படம் ஆரம்பித்த உடனேயே காணாமல் போகும் பணப்பெட்டியை நட்டி மற்றும் அவருடைய போலீஸ் டீம் கண்டுபிடிக்க ஆரம்பித்து படம் முழுவதும் அப்பெட்டி ஒருவர் கை ஒருவராக பயணித்து இறுதியில் அது எப்படி போலீஸிடம் சிக்கியது.சிக்கிய பின் நடக்கும் திருப்பங்கள் என்ன என்பதை கமர்சியலாக கூறி இருக்கிறார் இயக்குநர். படம் ஆரம்பித்தஉடனே கதைக்குள் சென்று விறுவிறுப்பாக நகர ஆரம்பிக்கிறது. இதன்பின் வரும் பில்டப் காட்சிகளும், பாடல்களும் படத்திற்கு சற்று பின்னடைவை கொடுத்தாலும் படத்தின் கதைக்கரு சிம்பிளாக அமைந்து சில இடங்களில் திருப்தி அளித்துள்ளது. இருந்தும் படம் முழுவதும் ஆங்காங்கே வரும் கிளிஷேவான காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். அதுவே படத்திற்கு சற்று அயற்சியை கொடுத்துள்ளது.

நாயகனாக நடித்திருக்கும் நட்டி வழக்கம்போல் தனது தெளிவான வசன உச்சரிப்பு எதார்த்த நடிப்பு மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். போலீசுக்கே உரித்தான மிடுக்கும், கம்பீரமும் கதைக்கு ஏற்றவாறு தன் நடிப்பின் மூலம் கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். அவருடன் போலீசாக வரும் ரவி மரியா, மனோபாலா ஆகியோர் கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். பெட்டியை தேடிதுப்பு துலுக்கும் காட்சிகளில் நாயகனுக்கு பக்கபலமாக நடித்திருக்கின்றனர்.
தனித்து காமெடி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன் நடிகைகள் சஞ்சனா சிங், அஸ்மிதா சிங் உடன் இணைந்து நடனமாடி ரசிக்க வைத்துள்ளார். குடுகுடுப்பு காரராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளார். சில காட்சிகளேவந்தாலும் அமைதியான நடிப்பை அளவாக கொடுத்து விட்டு சென்றிருக்கிறார் ராம்கி. நாயகி பூனம் பாஜ்வாவிற்கு அதிக வேலை இல்லை. வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். இவர்களுடன் இணைந்து நடித்த மற்ற நடிகர்கள் அவரவர் வேலையை செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.
சத்ய தேவ் இசையில் குங்பூ பாண்டா பாடல் தவிர மற்ற பாடல்கள் சுமார். பின்னணி இசை ஓகே. மலையும் மலை சம்பந்தப்பட்ட டிராவல் காட்சிகள் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குருமூர்த்தி - கடமையை செய்பவன்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)