Skip to main content

இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்... விவசாயிகளுக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகள் போதுமே! கொரில்லா - விமர்சனம் 

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

1975ல் வெளிவந்த 'டாக் டே ஆப்டர் நூன்' ஹாலிவுட் படத்தை தழுவி வெளிவந்துள்ள படம் 'கொரில்லா'. சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்யும் ஜீவா, ஐ.டி கம்பெனியில் வேலையிழந்த சதீஷ், நடிகராகத் துடிக்கும் விவேக் பிரசன்னா மற்றும் காங் என்ற சிம்பன்சி குரங்கு ஆகியோர் நண்பர்களாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
 

jiiva with monkey



இவர்களது வீட்டில் கீழ் போர்ஷனில் வசிக்கும் ஏழை விவசாயி மதன்குமார் சென்னையில் பணம் சம்பாரிக்க வழி தேடிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே இவர்கள் நால்வருக்கும் பணத்தேவை அதிகரிக்கிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர்கள் நான்கு பேரும் ஒரு கட்டத்தில் குரங்குடன் சேர்ந்து வங்கியை கொள்ளையடிக்க முடிவு செய்து வங்கிக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து விடுகின்றனர். அப்போது போலீஸ் வங்கியை சுற்றிவளைத்து விடுகிறது. இதன் பிறகு இவர்கள் போலீசிடம் இருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதே 'கொரில்லா'.

 

 

shaliney pandey



நகைச்சுவை படமாக உருவாக்க முயற்சி செய்யப்பட்டுள்ள இப்படத்தில் விவசாயிகளின் கடன் பிரச்சனையையும் சேர்த்து ரசிக்கவைக்க முயன்றுள்ளார் இயக்குனர் டான் சாண்டி. ஆரம்பத்தில் கலகலப்பாக திருட்டு, காதல், நட்பு என வழக்கமான முறையில் நகரும் படம் பிற்பகுதியில் பேங்க் கொள்ளை, விவசாய பிரச்சனை என திசை திரும்புகிறது. இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள் ஓரளவு ரசிக்க வைத்துள்ளன. ஆனால் விவசாய பிரச்சனையை பேச இந்த கதை களத்தை தேர்ந்தெடுத்தது சரியா என்ற கேள்வி பெரிதாக எழுகிறது. தமிழ் திரைப்படங்களில் சமீப காலமாக அரசியலையும் மக்கள் பிரச்சனைகளையும் பேசும் போக்கு அதிகரித்திருக்கிறது. உண்மையில் இது சரியாக நடந்தால், மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்தான். ஆனால், பொருந்தாத, தேவையில்லாத கதைக்களத்தில் திடீரென நுழைக்கப்படும்போது, தங்களது தாய்ப்பாசம், தங்கை பாசம், நட்பு என்ற கமர்சியல் செண்டிமெண்ட் வரிசையில் விவசாயிகள் பாசத்தையும் சேர்த்துவிட்டார்களோ என்று கவலைப்பட வைக்கிறது. விவசாயிகளுக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகள் போதும். தமிழ் சினிமா அதை புரிந்துகொள்ள வேண்டும்.

 

gorilla team



ஒரு இடைவெளிக்குப் பிறகு லோக்கலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜீவா. பழைய பக்கத்துவீட்டு பையன் ஜீவாவாக வரும் அவர் தனக்கு கொடுத்த வேலையை நன்றாகச் செய்துள்ளார். இருந்தும் கதை தேர்வில் இவருக்கு ஏற்பட்ட சறுக்கல் இன்னும் தொடர்கிறது என்றே தோன்றுகிறது. 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே ஒரு பாட்டுக்கும், சில சீன்களுக்கும் வந்து செல்கிறார். ஜீவா கூடவே வரும் சதிஷ், விவேக் பிரசன்னா, மதன் குமார் ஆகியோர் தங்கள் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நக்கலான போலீஸ் அதிகாரியாக வந்து ரசிக்கவைத்துள்ளார் நடிகர் ராதாரவி. மேலும் லொள்ளுசபா சாமிநாதன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் காங் குரங்கு ஆகியோர் இரண்டாம் பாதியை தங்கள் காமெடி மூலம் தாங்கிப்பிடிக்க முயற்சி செய்துள்ளனர். யோகிபாபு வரும் காட்சிகள் சிரிக்கவைக்கின்றன, உண்மைதான். ஆனால், எத்தனை நாளைக்கு அவரது உருவத்தை மட்டுமே வைத்து சிரிப்பை உண்டாக்க முடியும்? அதைத்தாண்டி கொஞ்சமேனும் இயக்குனர்கள் யோசிக்கவேண்டும்.

சாம்.சி.எஸ் இசையில் யாரடியோ பாடலும், பின்னணி இசையும் நன்று. ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு ஒரு டிராமாவை எந்த அளவு படமாக்க முடியுமோ அப்படி படமாக்கியுள்ளது. இப்படத்தில் விவசாயக் கடன் பிரச்சனையும், காங் குரங்கும் அவசியமா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. ஆனால், அது இரண்டையும் நமபித்தான் படத்தையே எடுத்திருப்பார்கள் போல. லாஜிக், பொருத்தம், தொடர்பு என்றெல்லாம் யோசிக்காமல் சிரிக்கத் தயாராக இருப்பவர்களை இந்த ‘கொரில்லா’ கொஞ்சம் குதூகளப்படுத்தும்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!

Next Story

திரையரங்கில் அடிதடி - தொண்டர்களால் பரபரப்பு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
yatra 2 fans fight between jegam mogan reddy pawan kalyan

தெலுங்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தவர். 'யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'யாத்ரா 2' என எடுக்கப்பட்டுள்ளது.  ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துளளார். இப்படம் இன்று வெளியான நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்கள் திரையரங்கிற்கு வந்து மேள தாளத்துடன், வெடி வெடித்துக் கொண்டாடினர்.  

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில், படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்களுக்கும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் கைகலப்பு ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பவன் கல்யாணின் ‘கேமராமேன் கங்காதோ ராம்பாபு’ படம் கடந்த 7 ஆம் தேதி ரீ ரிலீஸாகியுள்ளது. இந்த சூழலில் இந்த தொண்டர்களின் அடிதடி சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த சம்வவம் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.