/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/62_78.jpg)
தமிழ் சினிமாவில் அவ்வப்போது சினிமா தனம் இல்லாத எதார்த்தமான மற்றும் சினிமா பிரின்ஸ்பல் எதையும் கடைப்பிடிக்காமல் நிதர்சனத்தை சுமந்து கொண்டு வரும் திரைப்படங்கள் வெற்றி பெற்று ரசிகர்கள் கவனத்தை ஈர்க்க செய்வது வழக்கம். அதில் பல படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெறும் சில படங்கள் விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெறும். தற்பொழுது இந்த வரிசையில் இணையும் முயற்சியில் வெளியாகியுள்ள ‘குட் டே’ திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெற்றதா, இல்லையா?
ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் ஒரு நாள் சம்பவம் எப்படி அவன் வாழ்நாள் முழுவதையும் மாற்றுகிறது என்பதை இந்த குட் டே படம் பேசுகிறது. நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தான் வேலை செய்யும் கம்பெனி முதல் தன் மனைவி வரை அனைத்து இடங்களிலும் பண பற்றாக்குறையால் அவமானத்துக்கு உள்ளாகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர் இரவு குடித்துவிட்டு தன்னிலை மறந்து சேட்டை செய்ய ஆரம்பிக்கிறார். இவரது சேட்டை அளவுக்கு மீறி போய் போலீஸ் வரை சென்று விடுகிறது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யும் நேரத்தில் போலீசாரிடமிருந்து தப்பி விடுகிறார். இதையடுத்து போலீசார் அவரை வலை வீசி தேடுகின்றனர். குடிபோதையில் போகின்ற இடங்களில் எல்லாம் ரகளை செய்து கொண்டிருக்கும் பிரித்திவிராஜ் போலீஸில் சிக்கினாரா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/63_82.jpg)
ஒரு கதையாக பார்க்கும் பொழுது இது பெரிய விஷயமாக இல்லாமல் தெரிந்தாலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கும் அல்லது நம் உடன் இருப்பவர்கள் யாரேனும் ஒருவர் இந்த மாதிரி குடித்துவிட்டு தன்நிலை மறந்து நடந்து கொண்டிருப்பதை பார்த்திருப்போம். அந்த வகையில் இந்த சமூகத்திலும் நமக்கும் மிக நெருக்கமான ஒரு கதையை கையில் எடுத்துக் கொண்ட இயக்குநர் அரவிந்தன் அதை எதார்த்தம் மாறாமல் அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் சினிமாவுக்கே உரித்தான பிரின்ஸ்பல் மற்றும் திரைக்கதை உத்திகள் எதையும் பயன்படுத்தாமல் நம் கண் முன் நடக்கும் சம்பவங்கள் போல் பக்கத்து வீட்டில் அல்லது நம் வீட்டிலேயே நடக்கும் விஷயங்களை பார்ப்பது போல் திரைக்கதை அமைத்து நாமே அந்த கதைக்குள் இருப்பது போன்ற ஒரு உணர்வை கொடுத்திருப்பது இந்த படத்திற்கு பிளஸ்ஸாக மாறியிருக்கிறது.
இந்தப் படத்தின் திரைக்கதைக்கு ஏற்றார் போல் கதை மாந்தர்களும் அவர்களது முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்து இருப்பது படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. படத்தின் முதல் பாதி கலகலப்பாகவும் அதேசமயம் அழுத்தமான காட்சிகள் நிறைந்து விறுவிறுப்பாகவும்செல்கிறது. அதேபோல் இரண்டாம் பாதியும் செல்லும் என எதிர்பார்த்த பார்வையாளர்களுக்கு சற்றே அயற்சி ஏற்படும் படி பல இடங்களில் ஸ்பீடு பிரேக்கர்கள் போட்டிருப்பது படத்திற்கு மைனஸாகஅமைந்திருக்கிறது. வந்த விஷயங்களேதிரும்பத் திரும்ப ரிப்பீட் அடிப்பதாலும் அதே சமயம் சொல்ல வந்த விஷயத்தை மிக நீண்டுஇழுத்து சொல்லுவதாலும் இந்த அயற்சி ஏற்படுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் நெருங்கும் போது நீண்ட நெடிய காட்சிகள் சோர்வை கொடுத்தாலும் போகப்போக கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பாக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியிலும் கடைப்பிடித்து இருக்கலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/64_104.jpg)
புதுமுக நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம் பாத்திரம் அறிந்து நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை குடிபோதையில் இருக்கும் ஆசாமியாக இவர் செய்யும் ரகளை தியேட்டரில் கை தட்டல்களால் அதிரசெய்கிறது. சின்ன சின்ன முக பாவனைகள் மற்றும் வசன உச்சரிப்புகள் மூலம் சிறப்பாக நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். புதுமுக நடிகர் என்ற உணர்வை தராமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் பாதியில் இவர்களுடன் வரும் ஆடுகளம் முருகதாஸ் மற்றும் மைனா நந்தினி மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் கதைக்களத்திற்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். குறிப்பாக மைனா நந்தினி வரும் காட்சிகள் கலகலப்பாக நகர்கின்றன.
முக்கிய பாத்திரத்தில் வரும் போஸ் வெங்கட் நறுக்கென்று ஒரு வசனம் பேசினாலும் நிதர்சனத்தை பேசி விட்டுகைதட்டல் பெற்று இருக்கிறார். 'இந்த பிரச்சனை உனக்கு மட்டும் தான் இருக்குன்னுநினைக்கிறியா? காலையில் எழுந்து பாரு உன்னையே உனக்கு பிடிக்காமல் போகும்!' என இவர் பேசும் நிதர்சன வசனம் மொத்த படத்தையும் தாங்கி பிடித்திருக்கிறது. அதேபோல் சிறிய பாத்திரத்தில் வரும் வேலராமமூர்த்தி ஒரு காட்சியில் வந்தாலும் மனதில் பதியும்படியாக அழுத்தமான வசனங்கள் பேசி சென்று இருக்கிறார். குடி என்பது வாழ்க்கையில் எவ்வளவு கேடு என்பதை அழகாக அனைவரும் மனதில் பதியும்படி சொல்லிவிட்டு சென்றிருப்பது படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் காளி வெங்கட், நாயகனுடன் இணைந்து ரகளை செய்து மாஸ் காட்டி இருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு ரசிகர்களை கலகலப்பாக வைக்க உதவி இருக்கிறது.
போலீஸாக வரும் கலை இயக்குநர் விஜய் முருகன் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வந்து செல்கிறார். இவருடன் திருநங்கையாக நடித்திருக்கும் போலீஸ் அதிகாரி, பாத்திரம் அறிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைவரும் அவரவர் வேலையை நிறைவாக செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. பாடல்கள் ஒரு முறை கேட்கும் பொழுது சிறப்பாக இருக்கிறது அதேபோல் பின்னணி இசையும்படத்திற்கு தூண் போல் நின்று காத்திருக்கிறது. மதன் குணதேவ் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரே படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். குறிப்பாக நாயகன் ரகளை செய்யும் காட்சிகளில் சிறப்பான முறையில் இவரது கத்திரி வேலை செய்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/65_123.jpg)
நாம்அன்றாடம் பார்த்து பழகும் ஒரு சம்பவத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் அதை சரிவர திரையில் காண்பித்து சினிமா தனங்கள் இல்லாத எதார்த்த திரைப்படமாக கொடுத்திருக்கிறார். முதல் பாதி இப்படி இருக்க அதை இரண்டாம் பாதியிலும் கொடுத்திருந்தால்படம் நிச்சயம் பெரும் வரவேற்பை பெற்ற படமாக அமைந்திருக்கும். இருந்தும் படத்தில் சொல்ல வந்த விஷயமும், அதை காட்சிப்படுத்தப்பட்டவிஷயமும் சிறப்பான முறையில் அமைந்திருப்பதும், கதை மாந்தர்களின் பங்களிப்பும் சிறப்பான முறையில் இருப்பதும் படத்தை நன்றாகவே கரை சேர்த்திருக்கிறது. அதுவே இந்த படத்தை தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க படமாகவும் மாற்றி இருக்கிறது.
குட் டே - எல்லா நாளும் நல்ல நாளே!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)