Skip to main content

சாதி சங்கங்களிடம் கோலிசோடா2 கேட்ட கேள்வி...!

Published on 16/06/2018 | Edited on 18/06/2018

தங்களுக்கென அடையாளமில்லாத மூன்று இளைஞர்கள், தங்கள் உழைப்பின் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி, ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால், அதிகாரத்திலும் பணத்திலும் கொழுத்த வேறு மூவர் இவர்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறார்கள், தடுக்கிறார்கள். அழுத்த அழுத்த அழுத்தம் தாங்காமல் வெடித்துப் பொங்கும் 'கோலிசோடா' படத்தின் அடிப்படைக் கதைதான் கோலிசோடா 2வுக்கும். ஆனால், களமும் மனிதர்களும் பிரச்சனைகளும் வேறு.

 

gst 1



தாதா தொழிலதிபர் ஒருவரிடம் ஓட்டுநராக வேலை செய்யும் பரத் சீனி, ஸ்மார்ட் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் வினோத், புரோட்டா கடை பாஸ்கெட் பால் பிளேயர் எசக்கி பரத் மூவரும் தங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல முயலும்போது பணமும் அதிகாரமும் வாய்ந்த செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, வின்சென்ட் செல்வா மூவரும் தனித்தனியே இவர்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக நிற்கின்றனர். சமுத்திரக்கனி எனும் புள்ளியில் நல்லவர்கள் ஒன்று சேர சாதி எனும் புள்ளியில் கெட்டவர்கள் ஒன்று சேர யார் ஜெயிக்கிறார்கள் என்பதே கோலிசோடா2.

 

 


படமெங்கும் எளிய மனிதர்களின் மகிழ்ச்சி, சவால், அன்பைக் காட்டியது, 'பேபி காலிங் பேபி' ரிங்டோன், 'தமிழனாய் இருந்தால் ஷேர் செய்யவும்னு போடு உடனே ஷேர் பண்ணுவாங்க' என்ற கிண்டல் வசனம், 'இவங்க இருக்கும்போது சாமி படம் எதுக்குப்பா' என்று காந்தி, அம்பேத்கர், பெரியார் படங்களைக் காட்டுவது என 'விஜய் மில்டன் ஸ்பெஷல்'கள் படத்தில் நிறைய உண்டு. மூன்று இளைஞர்களின் கதையையும் சொல்லி அவர்களை ஒன்றாக்குவதற்குள் படத்தின் இடைவேளை வந்துவிடுகிறது. இந்த அவசரத்தில் மூவரும் பார்ப்பவர்கள் மனதில் பதியத் தவறுகிறார்கள். கோலிசோடா 1இல் அந்த நான்கு சிறுவர்களின் வாழ்க்கையும் ஒன்றாக இருப்பது இந்த வேலையை எளிமையாக்கியிருக்கும்.

 

 

samuthirakani



காதல், முன்னேறும் நோக்கம், சிக்கல்கள், சமுத்திரக்கனியின் அன்பு, வில்லன்கள் கொடுக்கும் பிரச்சனை என முதல் பாதி விறுவிறுவென செல்ல, பிரச்சனையை சந்திக்கும் இரண்டாம் பாதிதான் படத்திற்கு பிரச்சனை. சத்தமான வசனங்கள், பறந்து பறந்து போடும் சண்டையென படம் சற்றே கட்டுப்பாட்டை மீறிய வேகத்தில் செல்கிறது. அதுவும் நிறுத்தி நின்று தத்துவ வசனம் பேசிக்கொண்டே வில்லனை அடிப்பதெல்லாம் கொஞ்சம் அதிகம். அதுபோல தற்செயல்களும் அதிகம். தற்செயலாக இவர் அவரை சந்திப்பது, தற்செயலாக இவர் அங்கு இருப்பது என்று பல தற்செயல்கள். தற்செயலாக ரோகிணிக்கும் மகள் சுபிக்ஷாவுக்கும் ஒரே போன்ற காதல் கதை அமைவதெல்லாம் அதீத தற்செயல். படம் முழுவதும் வசனங்கள் நன்றாக இருக்க (தனித்தனியாகவாவது) அந்த வங்கி மேலாளர் பேசும் வசனம் சற்று ஓவர். வில்லத்தனம் செய்பவர்கள் யார் நேரடியாக இப்படிப் பேசுவார்கள்?

 

 


மூன்று இளைஞர்களில் பரத் சீனி, எசக்கி பரத் இருவரும் இயல்பாக நடித்து விட வினோத் மட்டும் சற்று தடுமாறுகிறார். சமுத்திரக்கனிக்கு இந்தப் பாத்திரம் நமது பிரதமருக்கு வெளிநாடு செல்வது போல. மிக எளிதாக, மகிழ்ச்சியாக செய்திருக்கிறார். மூன்று வில்லன்களும் சிறப்பு. நாயகிகள் மூவரும் எளிமையாகக் கவர்கின்றனர். ரோகிணி, ரேகா இருவருக்கும் அளவான பாத்திரங்கள். படத்தின் 'காஸ்டிங் சர்ப்ரைஸ்' கெளதம் மேனன், அதுவும் காவல்துறை அதிகாரி 'ராகவனா'க. ஆனால், சில காட்சிகள் மட்டுமே பெரிய தாக்கமில்லாமல் வந்து செல்கிறார்.

 

 

gst villains



'பொண்டாட்டி நீ' பாடல் பல மாதங்களாக யூ-ட்யூப் ஹிட். அச்சு ராஜாமணியின் இசையில் அந்தப் பாடல் மனதில் நிற்க மற்ற பாடல்கள் கதைக்கு வேகம் கொடுக்கின்றன. பின்னணி இசையும் விறுவிறுப்பைக் கூட்ட முயன்றிருக்கின்றது. விஜய் மில்டனின் ஒளிப்பதிவில் வழக்கம் போல கோணங்களும், உண்மைக்கு அருகிலிருப்பது போல் உணர வைக்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. எடிட்டர் தீபக்குக்கு ஒரு 'ஹார்டின் ஸ்மைலீ' போடலாம். சாதாரண சினிமா ரசிகரையும் 'எடிட்டிங் என்ற ஒன்றால் ஒரு படத்தை இத்தனை விறுவிறுப்பான அனுபவமாக மாற்ற முடியும்' என்று உணர வைத்திருக்கிறார். ஆனாலும் அதீதங்கள் நிறைந்த காட்சிகளால் படம் சற்றே சறுக்குகிறது. சுப்ரீம் சுந்தரின் சண்டைக்காட்சிகள் பறந்து, விழுந்து, தாவிக் குதித்து, மரத்தில் ஏறி என அவ்வப்போது கால்கள் தரையில் படாமல் நிகழ்வது சற்றே நெருடல்.

தமிழகத்தில் நடந்த பல சாதி ஆணவ, காதல் கொலை சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன சாதி சங்கக் காட்சிகள். 'உங்கள் சமுதாயத்தில் காதல் நடந்தால் தடுக்கும் நீங்கள், எத்தனை ஏழை இளைஞர்களுக்கு உதவியிருக்கிறீர்கள்?' என்று ஒரு காட்சியில்  கேட்கிறார் நாயகர்களில் ஒருவர். நல்ல கேள்விதான்.

கோலிசோடா - பொங்கியிருக்கிறது, ஆனால் சீற்றம் குறைவு.    




                         

    

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடுனவன் நின்னு அடிச்சா என்ன ஆகும் தெரியுமா? - உணர்ச்சிவசப்பட்ட கெளதம் மேனன்

Published on 11/06/2018 | Edited on 12/06/2018

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கோலிசோடா-2’. சமுத்திரகனி, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹிணி, ஸ்டன்ட் சிவா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் விஜய் மில்டன்,  சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

gowtham menon



இந்நிகழ்ச்சியில் இயக்குநனர் கௌதம் மேனன் நெகிழ்ச்சியுடன் உணர்ச்சிகரமாகப்  பேசியது...

‘ஓடுனவன் நின்னா, ஓடுனவன் அடிச்சா என்ன ஆகும் தெரியுமா?’அது தான் இந்தப் படம். மில்டன் என்னை கூப்பிட்டு "இந்த மாதிரி நீங்க படத்தில் நடிக்க வேண்டும்" என்றார்.  ஏற்கனவே எனக்கு வாய்ப்புகள் வந்திருக்கு, ஆனால் இது ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸா  இருக்கும். மில்டன் நல்லா ஹேண்டில் பண்ணுவார். இந்தப் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். சமுத்திரக்கனி சார் இருக்காரு என்று சொன்னார். அவ்வளவுதான் சொன்னார். வேற யாரும் இல்லை என்று சொன்னது எனக்குப் பிடித்து இருந்தது. கொஞ்சம் கம்ஃபர்ட்டபுலா இருக்கும்.

கனி சார் நிறைய பேருக்கு பிரச்சனையில் உதவி செய்து இருக்கிறார். அந்த லிஸ்ட்டில் நானும் ஒருத்தன். எனக்கு ஏதாவது என்றால் கூப்பிட்டு கேட்பாரு, 'என்ன ஆச்சு நான் உதவி செய்கிறேன்' என்று. அந்த மாதிரி ஒரு கேரக்டர். ரொம்ப கம்ஃபர்ட்டபுலான ஒரு கேரக்டர். புதுமுகங்களோடு ஒர்க் பண்ணது ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. நான் ஒன்றும் யோசிக்கவில்லை அவர் என்ன சொன்னாரோ அதை செய்தேன். நல்லா இருந்தா அதற்கு அவர்தான் காரணம், நல்லா இல்லை என்றால் அதற்கு நான்தான் காரணம். இந்த லுக் எல்லாம் அவரே பிக்ஸ் செய்துவிட்டார். அந்த ஃபோட்டோ இப்ப வெளியிட்டு இருக்கிறார்கள். அதைப் பார்க்க எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு. ஆனா, இந்த டீம் கூட ஒர்க் பண்ணியது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

 

 

 

 

Next Story

சமுத்திரக்கனி சொன்ன நல்ல விஷயம்...

Published on 11/06/2018 | Edited on 12/06/2018

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கோலிசோடா-2’. சமுத்திரக்கனி, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹிணி, ஸ்டன்ட் சிவா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

 

 


இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் விஜய் மில்டன்,  சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

 

samuthra



இந்நிகழ்ச்சியில் இயக்குனர் சமுத்திரக்கனி பேசியது...

ஒரு நல்ல விஷயம் அதை சொல்ல வேண்டும். வாழ்க்கையில் சரியான நேரத்தில் ஒன்று வரும், அதைப் பிடித்துக்கொண்டால் ‘உன் வாழ்க்கைக்கு நீ முதலாளி’. மிஸ் பண்ணிவிட்டாயென்றால் ‘அடுத்தவனுடைய வாழ்க்கைக்கு நீ கடைசி வரைக்கும் தொழிலாளி’ இது தான் உண்மை. இதை நான் என் வாழ்க்கையிலும் பார்த்திருக்கிறேன். நிறைய நண்பர்களையும் பார்த்திருக்கிறேன். உண்மையா, நேர்மையா ஒரு திரைப்படம் இது. நண்பன் கௌதமோடு பயணித்தது நல்ல அனுபவம். நான் அடிக்கடி கேட்பேன், "என் கூட நடிங்க, இல்ல என்னை  வைத்து படம் எடுங்க" என்று. கடைசியில் பார்த்தா நாங்க இரண்டு பேரும் நடித்தோம், விஜய் மில்டன் எடுத்தாரு. ரொம்ப சந்தோஷமாக இருந்தது இந்த பயணம்.