Advertisment

“ஆண்களைச் சீண்டும்; பெண்களைக் கவரும் காமெடி குஸ்தி” - ‘கட்டா குஸ்தி’ விமர்சனம்

Katta kusthi

தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்ததில் இருந்து தான் நடித்து தயாரிக்கும் படங்களை தரமாகவும், வெற்றிப் படங்களாகவும் கொடுத்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் தயாரித்து நடித்துள்ள கட்டா குஸ்தி திரைப்படம் இதற்கு முந்தைய படங்களைப் போல் வரவேற்பைப் பெற்றதா? இல்லையா?

Advertisment

படிப்பறிவு இல்லாத, ஊரில் சல்லித்தனம் செய்து கொண்டிருக்கும் விஷ்ணு விஷால் தன்னைவிட மிகக் குறைவான படிப்பு கொண்ட, முடி நீளமாக உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ள பெண் பார்த்து வருகிறார். அப்போது பட்டப்படிப்பு படித்துவிட்டு குஸ்தி வீராங்கனையாக முடி குறைவாக இருக்கும் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி தலையில் விக் வைத்துக் கொண்டு தான் படிக்கவில்லை என்று பொய் சொல்லி விஷ்ணு விஷாலை திருமணம் செய்து கொள்கிறார். இதையடுத்து ஒரு கட்டத்தில் தன் மனைவியைப் பற்றிய உண்மை விஷ்ணு விஷாலுக்கு தெரிய வர அதன் பின் இருவருக்குள்ளும் நடக்கும் பிரச்சனைகள் என்ன? அவை சரி செய்யப்பட்டதா, இல்லையா? என்பதே கட்டா குஸ்தி படத்தின் மீதி கதை.

Advertisment

இது ஒரு கதையாக பார்க்கும் பொழுது ரொம்ப பெரியதாக இல்லை என்று தோன்ற வைத்தாலும் படத்தை காட்சிப்படுத்திய விதமும், திரைக்கதை அமைத்த விதமும் மிகவும் ஜனரஞ்சகமாக, நேர்த்தியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இப்படம் வெற்றி பெற்றுள்ளது. கதாநாயகனை காட்டிலும் கதாநாயகிக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ள கதையாக இப்படத்தை உருவாக்கி அதை நேர்த்தியாக படம் பிடித்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாற்றி இருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு. குறிப்பாக இடைவேளை காட்சியில் பெண்களின் விசில் சத்தமும், கைத்தட்டல் சத்தமும் தியேட்டரை அதிரச் செய்கிறது.

சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்திற்கு பிறகு மிகவும் சீரியசான கேரக்டர்களில் நடித்து வந்தநாயகன் விஷ்ணு விஷால் இந்த படத்தின் மூலம் மீண்டும் காமெடிக்கு திரும்பியிருக்கிறார். ஆரம்பத்தில் கெத்து காட்டி விட்டு பிறகு மனைவிக்கு பம்மும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் விஷ்ணு விஷால் அதை மிக சிறப்பாக செய்து சின்ன சின்ன முக பாவனைகள் மூலம் கிச்சுகிச்சு மூட்டி உள்ளார். விஷ்ணு விஷால், கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் நல்ல கெமிஸ்ட்ரியுடன் அமைந்து கைதட்டல் பெற்றுள்ளது.

ks

குஸ்தி வீராங்கனையாகவும், வீட்டிற்கு அடங்கி ஒடுங்கி நடக்கும் மனைவியாகவும், அப்பாவின் செல்ல பெண்ணாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி. அடுத்தடுத்து தமிழில் நல்ல வரவேற்பை பெறும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி. குறிப்பாக குஸ்தி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், ஸ்டண்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும் சிறப்பான உடல் உழைப்பையும், நடிப்பையும் ஒருசேர கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். இவருடைய பிசிகல் பிட்னஸ் கதாபாத்திரத்திற்கு உறுதுணையாக அமைந்து இருக்கிறது.

விஷ்ணு விஷாலின் மாமாவாக நடித்திருக்கும் கருணாஸ் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல காமெடி கலந்த, குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். வழக்கம்போல் இவரின் சின்ன சின்ன பஞ்ச் வசனங்கள் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. ஐஸ்வர்யா லட்சுமியின் சித்தப்பாவாக நடித்திருக்கும் முனீஸ்காந்த் அளவான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்களின் கூட்டாளியாக வரும் காளி வெங்கட் கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் கிடா வெட்டி அசத்துகிறார். எப்போதும் போல் இவரது எதார்த்தமான நடிப்பு கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது.

முதல் பாதியை மேற்குறிப்பிட்டுள்ள நடிகர்கள் பார்த்துக் கொண்டால், இரண்டாம் பாதியை ரெடின் கிங்ஸ்லி பார்த்துக் கொண்டுள்ளார். இவரின் எதார்த்தமான காமெடி காட்சிகள் இரண்டாம் பாதி முழுவதும் படர்ந்து பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. சில காட்சிகளே வந்தாலும் நடிகர் ஹரீஷ் பெரோடி மனதில் பதிகிறார். இவர்களுடன் நடித்திருக்கும் மற்ற இதர நடிகர்களும் அவரவர்களுக்கான வேலையை நிறைவாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசை ஃபன்னாக அமைந்து கைதட்டல் பெற்றுள்ளது. ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில் பொள்ளாச்சி மற்றும் கட்டா குஸ்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படம் ஆரம்பித்து இறுதிவரை காமெடியாகவும், கலகலப்பாகவும் அதேசமயம் ஆங்காங்கே சென்டிமென்ட் ஆகவும் கதையை நேர்த்தியாக எடுத்துச் சென்ற இயக்குநர், பெண்கள் என்றஒரு சாராருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதும், இளைஞர்களை கவரும் வகையில் சில விஷயங்களை படத்தில் வைக்காமல் விட்டதும் படத்திற்கு சற்று பின்னடைவாக அமைந்தாலும் குடும்பமாக சென்று படம் பார்க்கும் ரசிகர்களை இப்படம் சேட்டிஸ்ஃபை செய்து படத்தை பத்திரமாக கரை சேர்த்திருக்கிறது.

கட்டா குஸ்தி - காமெடி குஸ்தி!

actor vishnu vishal moviereview
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe