சந்தானத்தில் ஆரம்பித்து சிவகார்த்திகேயன், கவின், ரியோ, ராஜூ ஜெயமோகன் வரிசையில் தற்பொழுது விஜய் டிவியிலிருந்து ‘கே.பி.ஒய்’ பாலா வெள்ளி திரையில் நாயகனாக களம் இறங்கி இருக்கிறார். ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பாலா தற்பொழுது சினிமாவிலும் நாயகனாக காலடி எடுத்து வைத்திருக்கிறார். முற்றிலும் அறிமுக இயக்குநர் கொண்ட புதுமையான டீமுடன் இணைந்து பாலா நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் வெள்ளி திரையிலும் பாலாவுக்கு வெற்றியை கொடுத்ததா, இல்லையா?
வயதான பாலாஜி சக்திவேல் செக்யூரிட்டியாக வேலை செய்து கொண்டு தன் மனைவி அர்ச்சனாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு பிள்ளை குட்டிகள் எதுவும் இல்லை. இருந்தும் எந்த ஒரு மன கவலையும் இல்லாமல் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இன்பமான இல்லற வாழ்வில் இருக்கின்றனர். ஒரு நாள் தன் மனைவியின் ஆசை படி அவருக்கு அறுபதாம் கல்யாணம் நடத்தி வைக்க பாலாஜி சக்திவேல் முடிவெடுக்கிறார். இதற்காக ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருக்கும் பாலாவிடம் செல்ல அவரோ திருமணத்திற்கு 50 லட்சத்திற்கு மேல் செலவாகும் எனக் கூறுகிறார்.
தன் ஊரில் இருக்கும் சொந்த நிலத்தை விற்றுவிட்டு பணத்தோடு பாலாவை வந்து பார்க்கும் பாலாஜி சக்திவேல் எப்படியாவது அறுபதாம் திருமணத்தை நடத்தி விட வேண்டும் என முனைப்புடன் இருக்கிறார். அந்த நேரம் பார்த்து அரசாங்கம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்துகிறது. இதனால் இவர்கள் கையில் இருக்கும் லட்சக்கணக்கான பணம் வீணாகி விடுகிறது. குறித்த நேரத்தில் அறுபதாம் கல்யாணத்தை நடத்தி விட வேண்டும். அதேசமயம் இருக்கின்ற லட்சக்கணக்கான ரூபாயை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற வேண்டும். இப்படி பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளும் பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் அந்த பணத்தை மாற்றி அறுபதாம் கல்யாணத்தை நடத்தினார்களா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
60 வயதைக் கடந்த தம்பதிகளாக வரும் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா தம்பதியினரை சுற்றியே படம் முழுவதும் நகர்கிறது. இவர்கள் இருவருமே இந்த படத்தின் நாயகன் நாயகிகளாக தென்படுகின்றனர். கூடவே கே.பி.ஒய் பாலா - நமிதா ஜோடி காதல் கதையும் விரிகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு எப்படியாவது பாலாஜி சக்திவேல் - அர்ச்சனா ஆசையை நிறைவேற்ற போராடுகிறார்கள். இதில் பாலாஜி சக்திவேல் அர்ச்சனா சம்பந்தப்பட்ட காட்சிகளில் உயிர் இருக்கிறது. இவர்கள் வரும் காட்சிகள் மற்றும் அதற்கான திரைக்கதை அமைப்புகள் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு உணர்ச்சிகரமான படமாக இந்த காந்தி கண்ணாடி திரைப்படம் மாறி இருக்கிறது. ஆனால் பாலா சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஏனோ அழுத்தம் இல்லாமல் போறபோக்கில் இருப்பது சற்றே மைனஸ் ஆக தெரிகிறது. இருந்தும் பாலாஜி சக்திவேல் அர்ச்சனா சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் அழுத்தமாகவும் கலங்கடிக்கும் படியும் இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து மற்ற மைனஸ் விஷயங்களை மறக்கடிக்க செய்கிறது.
படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை உணர்ச்சி பொங்கும் படியான காட்சிகள் படம் முழுவதும் நிறைந்து இருப்பது பார்ப்பவர்களை நிறைவான குடும்ப படம் பார்த்த உணர்வை கொடுக்க செய்கிறது. இருந்தும் திரைக்கதையில் இன்னமும் சுவாரசியமும் வேகமும் கூட்டி இருக்கலாம். முதல் முறையாக கே.பி.ஒய் பாலா, நாயகனாக களமிறங்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் புதுமுகம் என்ற உணர்வை தராத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்தின் மூலம் செய்து கவர்ந்திருக்கிறார். நமீதா வழக்கமான நாயகியாக வந்து சென்றாலும் அவ்வப்போது தனக்கு கிடைக்கும் இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாலாஜி சக்திவேல் கதாபாத்திரம். இவர் காட்சிக்கு காட்சி தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து சிறப்பான நடிப்பை கொடுத்து கைதட்டில் பெற்றிருக்கிறார். எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கும் இவருக்கு விருதுகள் நிச்சயம். கூடவே இவரது மனைவியாக வரும் அர்ச்சனா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார். இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மற்றபடி உடன் நடித்த அத்தனை நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கின்றனர்.
பாலாஜி ஒளிப்பதிவில் பாலாஜி சக்திவேல் - அர்ச்சனா சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. விவேக் மெரின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பு.
தன் சொந்த வாழ்வில் உதவி செய்பவராக இருக்கும் பாலா இந்த படத்தில் சற்றே கிரே ஷேடில் இருக்கும்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அது பல இடங்களில் ரசிக்கும்படி இருந்தாலும் நடிப்பில் இன்னமும் இம்ப்ரூவ்மெண்ட் தேவைப்படுகிறது. இருந்தும் பாலாஜி சக்திவேல் அர்ச்சனா ஆகியோரது கதாபாத்திரமும் அவர்களை சுற்றி நடக்கும் கதையும் படத்திற்கு உயிர் கொடுத்து பாசிட்டிவ் எலெமெண்டாக மாறி படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது.
காந்தி கண்ணாடி - புனித ஆத்மா