Skip to main content

கால்பந்து கனவு நனவானதா? - ‘ஃபைட் கிளப்’ விமர்சனம்

Published on 15/12/2023 | Edited on 16/12/2023
fight club tamil movie review

உறியடி படங்கள் மூலம் பிரபலமான விஜயகுமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஃபைட் கிளப். எல்சியு புகழ் லோகேஷ் கனகராஜ் தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை வழங்குகிறார் என்ற செய்தி வெளியான உடனே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியது. அந்த எதிர்பார்ப்புகளை இந்த படம் பூர்த்தி செய்ததா, இல்லையா?

கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் விஜயகுமார் சிறு வயது முதலே தனது குருவாக கார்த்திகேயன் சந்தானத்தை ஏற்று அவர் வழியில் நடக்கிறார். கார்த்திகேயன் சந்தானம் தான் ஒரு மிகப்பெரிய புட்பால் பிளேயராக மாற வேண்டும் என எண்ணி அதற்காக முயற்சி செய்து அதில் தோற்றுப் போகிறார். தான் தான் இப்படி மாறிவிட்டோம் இனிவரும் இளைஞர்கள் இப்படி ஆகக் கூடாது என்ற நல் எண்ணத்தில் அந்த ஊரில் உள்ள ரவுடியிசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களைத் தன் பக்கம் திருப்பி அனைவரையும் விளையாட்டில் ஆர்வமுரச் செய்து அவர்களுக்காக கோச்சிங் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்துகிறார். அவர் நல்வழிப்படுத்தும் சிறுவர்களில் விஜயகுமாரும் ஒருவர். இதற்கிடையே கார்த்திகேயன் சந்தானத்தின் தம்பி அவிநாஷ் ரகுதேவன் ஊரில் உள்ள சிறுவர்களை இளைஞர்களை மீண்டும் கஞ்சா ரவுடியிசம் என திசை திருப்பப் பார்க்கிறார். இது பிடிக்காத கார்த்திகேயன் சந்தானம் அவரைக் கண்டிக்கிறார்.

இதனால் கடுப்பான அவிநாஷ் ரகுதேவன் மற்றும் அவரது கூட்டாளி சங்கர் தாஸ் இருவரும் சேர்ந்து கார்த்திகேயன் சந்தானத்தை கொலை செய்து விடுகின்றனர். கொலைப் பழியை ஏற்றுக்கொண்டு கார்த்திகேயன் சந்தானத்தின் தம்பி அவிநாஷ் ரகுதேவன் ஜெயிலுக்கு சென்று விடுகிறார். இந்த கேப்பை பயன்படுத்திக் கொண்ட அவிநாஷ் கூட்டாளி சங்கர் தாஸ் கஞ்சா ரவுடியிசம் என கல்லாகட்டி அரசியலிலும் கவுன்சிலர் ஆகிவிடுகிறார். ஜெயிலில் இருந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வரும் அவிநாஷ் ரகுதேவன் தன் கூட்டாளியை பழிவாங்க வளர்ந்து பெரியவனான விஜயகுமாரை ஏவி விடுகிறார். இதை அடுத்து விஜயகுமாரின் நிலை என்னவானது? அவர் தனது கெரியரை நோக்கிச் சென்றாரா? அல்லது திசை திருப்பப்பட்டாரா? கவுன்சிலர் சங்கரதாஸ் நிலை என்னவானது? என்பதே ஃபைட் கிளப் படத்தின் மீதி கதை.

வடசென்னை படத்திற்குப் பிறகு மீண்டும் அதே பாணியில் உருவாகி இருக்கும் மற்றொரு திரைப்படம். வடசென்னையில் கதையும் திரைக்கதையும் தெளிவாகவும், எதார்த்தமாகவும் அதேசமயம் புரியும்படி அமைந்து மக்களை ரசிக்க வைத்தது. ஆனால் இந்தப் படத்திலோ மாறுபட்ட திரைக்கதையும் அதன் வேகமும் சற்று வித்தியாசப்படுகிறது. முழுக்க முழுக்க வன்முறைக்  காட்சிகள் மட்டுமே அதிகம் நிறைந்திருக்கிறது.  இதில் கதையும், கதாபாத்திரங்களும் ரசிகர்களுக்கு புரிந்து கொள்வதற்குள் சண்டைக் காட்சிகள் வந்து விடுகிறது. சண்டைக்காட்சிகளை மட்டுமே வைத்து படத்தை ரசிக்க வைக்க முடியாதல்லவா?  எல்லாம் கலந்த கலவை தானே சினிமாவை ரசிக்க வைக்க முடியும்.

மாண்டேஜ் ஷாட்களால் கதை சொல்கிற யுக்தியை கையில் எடுத்து இந்த சண்டை படத்தை  ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹமத். சண்டைக்காட்சிகளை மட்டுமே விரும்புகிற ரசிகர்களுக்கு ஓக்கேவாக இருந்தாலும், குடும்பத்தோடு வருகிற ரசிகர்களையும் கவனத்தில் கொண்டிருக்கலாம். குறிப்பாக இப்படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் நமக்கு புரிவதற்குள் அதற்கு இடையே வரும் சண்டைக் காட்சிகள் கதையை விட அதிகம் டாமினேசனாக இருந்து விடுகிறது. கதையைக் காட்டிலும் மேக்கிங்கில் மட்டும் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார் இயக்குநர் அப்பாஸ். அது படத்திற்கு பெரிதாக உதவியதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

fight club tamil movie review

உறியடி நாயகன் விஜயகுமார் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றிருக்கிறார். இவரது உடல் மொழியும் வசன உச்சரிப்பும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. அதேபோல் சண்டைக் காட்சிகளிலும் சிறப்பான உடல் மொழியைக் காட்டி ரசிக்க வைத்துள்ளார். அதற்கு ஏற்றார்போல் தன் உடல் அமைப்பையும் மாற்றி ரசிக்க வைத்துள்ளார். இவரைத் தாண்டி படத்தில் அதிகம் பரிச்சயமான முகங்கள் எதுவும் இல்லை. கார்த்திகேயன் சந்தானம் மட்டும் அதில் கொஞ்சம் தெரிந்த முகம். அவரும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரின் தம்பி அவிநாஷ் தன் பங்குக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் அவருடைய கூட்டாளியான சங்கரதாசும் சிறப்பாக நடித்திருக்கிறார். விஜயகுமாரின் காதலியாக வரும் பெண் அழகாக இருக்கிறார் அளவாக நடித்து ரசிகர்களை ஈர்த்துள்ளார். மற்றபடி படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர்க்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. படம் முழுவதும் இவரது பின்னணி இசையைக் காட்டிலும் பழைய கமல் - இளையராஜா பாடலின் பின்னணி இசையை பயன்படுத்தி இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இவரது இசை படத்திற்கு முழுக்க முழுக்க ரெட்ரோ எஃபெக்டை கொடுத்திருக்கிறது. லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவில் படம் ஹாலிவுட் தரம். இவரது ஒளிப்பதிவில் காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு படத்தை சிறப்பான மேக்கிங்காக மாற்றி இருக்கிறது. குறிப்பாக சண்டை காட்சிகளை மிக சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

கதையும், கதாபாத்திரங்களையும் தாண்டி படத்தின் மேக்கிங் இப்படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. நல்ல மேக்கிங் இருக்கும் படங்களை மட்டும் பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு இது கண்டிப்பாக டிஸ்அப்பாயிண்ட் செய்யாது.


ஃபைட் கிளப் - அடிதடி!
 

சார்ந்த செய்திகள்