Advertisment

விறுவிறு உண்மை கதை வெள்ளித்திரையில் எப்படி வந்திருக்கிறது..? குருப் விமர்சனம்

Kurup

உண்மைக்கு நெருக்கமாக எடுக்கப்படும் படங்கள் எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதுண்டு. அதேபோல், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படங்கள் எந்த அளவுக்கு காம்பிரமைஸ் செய்யப்படாமல் உண்மைக்கு நெருக்கமாகவும் சுவாரஸ்யமாகவோ எடுக்கப்படுகிறதோ அதைப்பொறுத்தே அப்படத்தின் வெற்றி அமையும். அந்தவகையில் கேரளாவில் 1980களில் மிக பெரிய அளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீசாரால் இன்றளவும் தேடப்பட்டு வரும் குற்றவாளியுமான குருப் என்பரின்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள "குருப்" படம் உண்மை சம்பவத்தில் இருந்த அதே சுவாரஸ்யத்தை பிரதிபலித்ததா..?

Advertisment

தான் மட்டுமே வாழ்ந்தால் போதும், பணமே பிரதானம் என்ற சுயநலத்துடன் வாழும் துல்கர் சல்மானை எப்படியாவது வாழ்க்கையில் உருப்பட வைக்க வேண்டும் என்று நினைக்கும் அவரது பெற்றோர் அவரை ராணுவ விமானப் படையில் சேர்த்து விடுகின்றனர். அங்கு சென்ற துல்கர் சல்மான் பயிற்சியை முழுமையாக முடிக்காமல் குற்றச்செயல்களில் ஈடுபட்டு அங்கிருந்து பாதியில் வெளியேறுகிறார். அங்கிருந்து வெளிநாடுக்கு செல்லும் அவர் சில வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்புகிறார். வந்த இடத்தில் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய இன்சூரன்ஸ் கம்பெனி கொடுக்கும் பணத்தை தான் உயிரோடு இருக்கும் போதே சட்டவிரோதமாக பெற கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிடுகிறார். அதற்காக இவர்கள் ஒரு பிணத்தை தேடி அலைகின்ற சமயத்தில் குருப் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிறது. அதில் ஒரு பிணம் எரிந்த நிலையில் இருக்க, இறந்தது குருப் என அறிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இது விபத்தா? கொலையா? என துப்புதுலக்க ஆரம்பிக்கின்றனர். போலீசார் விசாரணையில் இறந்தது குருப் இல்லை என தெரியவர, காரில் இருந்த பிணம் யாருடையது? காணாமல் போன குருப் எங்கே? அவருடைய இன்சூரன்ஸ் பணம் என்னவானது? என்பதே குருப் படத்தின் மீதி கதை.

Advertisment

ஒரு சிம்பிளான லீனியர் கதையை நான் லீனியர் பேட்டர்னில் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். ஆனால், அந்த முயற்சியில் வெற்றியா? தோல்வியா? என்றால் சந்தேகமே! படம் எடுத்த விதம், வசனங்கள், கதாபாத்திர தேர்வு, கேமரா வேலைப்பாடு, கலை, இயக்கம் என பல்வேறு விஷயங்கள் சிறப்பாக அமைந்திருந்தாலும் திரைக்கதையில் ஆங்காங்கே தென்படும் தொய்வு அயர்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நான் லீனியர் திரைக்கதையை கையாண்டவிதத்தில் சற்று தடுமாற்றம் இருப்பதால் பார்ப்பவர்களுக்கு கதையை புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது. இதனாலேயே கதையில் இருந்த சுவாரஸ்யம் படமாக பார்க்கும்போது வர மறுக்கிறது. அதேபோல, படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

குருப் ஆக நடித்திருக்கும் துல்கர் சல்மான் அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார். கதை 1970களின் இறுதியில் நடப்பதால் அந்த காலத்து நடை, உடை, பாவனைகளை அப்படியே நம் கண் முன் நிறுத்தியுள்ளார். இவர் முழு படத்தையும் தன் தோளிலே சுமந்துள்ளார். சம்பிரதாய நாயகியாக வரும் நடிகை சோபிதா, சம்பிரதாய நடிப்பை வெளிப்படுத்தி சென்றுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஷைன் டாம் சாக்கோ படத்தின் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். அந்த அளவு கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். இவரது கதாபாத்திரமே படத்தின் வேகத்தை சற்று கூட்டியுள்ளது. அதேபோல் போலீசாக வரும் நடிகர் இந்திரஜித் திரைக்கதைக்கு பக்கபலமாக இருக்கும்படியாக கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார். அவர் வரும் சீன்களும் படத்தின் வேகத்தை சற்று கூட்டியுள்ளன.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், டொவினோ தாமஸ், பரத் ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாக செய்துள்ளனர். படத்துக்கு மிகப்பெரிய பலம் மேக்கிங். அந்த மேக்கிங்குக்கு சிறப்பான வகையில் ஒளிப்பதிவும், கலை இயக்கமும் பங்களிப்பு அளித்துள்ளன. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி மற்றும் கலை இயக்குனர் மனோஜ் ஆகியோர் படத்தை ஹாலிவுட் தரத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். சுஷின் ஷியாம் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை நன்று. இவரின் இசை படத்துக்கு சுவாரஸ்யத்தை கூட்ட முயற்சி செய்து அதில் ஆங்காங்கே தட்டு தடுமாறியுள்ளது.

பொதுவாக ஒருவருடைய வாழ்க்கை கதையை படமாக்கும் பொழுது அவர் எதிர்கொண்ட விஷயங்களையும், சம்பவங்களையும் அப்படியே உண்மைக்கு நெருக்கமாகவும், அதேசமயம் ரசிக்கும்படியும் எடுக்கும்பட்சத்தில் அது கண்டிப்பாக ரசிக்கப்படும். ஆனால் அதுவே பிரதான கதாபாத்திரத்தை விட்டு சற்றே விலகி மற்ற சம்பவங்களுக்கும் செல்லும்பொழுது படம் பார்ப்பவர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சும். இதில் குருப் இரண்டாவது வகையில் சேர்ந்துள்ளது.

குருப் - குழப்பம்.

dulquer salman Kurup moviereview
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe