Advertisment

வேகமாக ஓடுகிறதா? மெதுவாக ஓடுகிறதா? - ‘டிரைவர் ஜமுனா’ விமர்சனம்

Driver jamuna Movie Review

கனா,பூமிகா படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் டிரைவர் ஜமுனா. மற்ற நாயகிகளுக்கு மத்தியில் வேறுபட்ட கதாபாத்திரமான பெண் டிரைவர் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின்படத்துக்கு வரவேற்பு கிடைத்ததா?

Advertisment

அரசியல்வாதியான ஆடுகளம் நரேனை கொலை செய்ய ஒரு கூலிப்படை திட்டமிடுகிறது. அவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து ஒரு குழு ஆடுகளம் நரேன் வீட்டுக்குள் புகுந்து வேவு பார்க்கின்றனர். இன்னொரு குழு கால் டாக்ஸி டிரைவராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வண்டியில் ஏறி விடுகின்றனர். இவர்களிடம் சிக்கித்தவிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதேசமயம் இவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீஸ் முயற்சி செய்கிறது. இதையடுத்து கூலிப்படையினர் ஆடுகளம் நரேனை கொலை செய்தார்களா, இல்லையா? கூலிப்படையிடம் சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் நிலை என்னவானது? என்பதே டிரைவர் ஜமுனா படத்தின் மீதி கதை.

Advertisment

ஒருவரைக் கொலை செய்ய கூலிப்படையினர் போடும் ஸ்கெட்ச்சை, ஒரு கார் பயணத்தின் மூலம் சொல்லி அதை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் கிங்ஸிலின். இப்படியான ஒரு வித்தியாசமான சின்ன கதையை எடுத்துக்கொண்ட இயக்குநர் அதை வித்தியாசமாகச் சொல்லாமல் மிகவும் தட்டையாகச் சொல்லி பார்ப்பவர்களுக்கு அயர்ச்சி கொடுத்துள்ளார். படம் முழுவதும் ஒரு காருக்குள்ளேயே வைத்து நகர்த்தியுள்ள இயக்குநர், அதை இன்னமும் சுவாரசியமான திரைக்கதை மூலம் கூறி இருக்கலாம். ஒரு பெண் கால்டாக்சி டிரைவராக இருக்கும் பொழுது ஏற்படும் சவால்களை இன்னமும் அழுத்தமாகக் காட்டியிருந்தால் இந்தப் படம் கரை சேர்ந்திருக்கும்.

மிக எளிமையான ஒரு கதையை வித்தியாசமாக தேர்வு செய்த இயக்குநர், அதே வித்தியாசத்தை திரைக்கதையிலும் காட்டி இருந்தால் கண்டிப்பாக இந்தப் படம் பேசப்பட்டிருக்கும். குறிப்பாக, படம் முழுவதும் பகலிலேயே பயணிப்பது பார்ப்பவர்களுக்கு பதட்டத்தைக் கொடுக்க மறுக்கிறது. அதுவே ஒரு பெண் டிரைவர் கூலிப்படையிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளை லாஜிக்கோடு சேர்ந்த இரவு நேரக் காட்சிகளாகக் கொடுத்திருந்தால், ஒருவேளை அந்தப் பதட்டம் நம்மை வந்து சேர நிறைய வாய்ப்பு இருந்திருக்கும். அதுவே படத்துக்கு பக்கபலமாக மாற வாய்ப்பு இருந்திருக்கும்.

மற்ற கதாநாயகிகளைக் காட்டிலும் வித்தியாசமான கதைகளைத்தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்திலும் அப்படியான ஒரு கதாபாத்திரத்தைத்தேர்வு செய்து நடித்திருக்கிறார். தனக்கு என்ன வருமோ அதைச் சிறப்பாகச் செய்து அந்தக் கதாபாத்திரத்துக்கு எவ்வளவு முடியுமோ, அந்த அளவு உயிரூட்டி உள்ளார். காருக்குள்ளேயே படம் நடப்பதால் அதில் நடிப்பதற்குச் சவாலாக இருக்கும் காட்சிகளைக் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். காரினுள் கூலிப்படையின் தலைவனாக அமர்ந்து கொண்டு மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஸ்ரீனி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு இது முதல் படம் என்ற உணர்வைத்தர மறுத்துள்ளார். போதை ஆசாமியாக நடித்திருக்கும் இவரது கதாபாத்திரம் படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. இவரின் எதார்த்த நடிப்பு, காட்சிகளின் வேகத்தைக் கூட்ட முயற்சி செய்துள்ளது. சிறிய வேடமாக இருந்தாலும் மனதில் பதியும்படி நடித்திருக்கிறார் ஆடுகளம் நரேன். அதேபோல் இவர்களுடன் நடித்திருக்கும் புதுமுக நடிகர்களும் அவரவர் வேலையைச் சிறப்பாகச் செய்து உள்ளனர்.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை படத்தின் கதை ஓட்டத்திற்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. படம் பார்ப்பவர்களுக்கு ஓரளவு பதட்டம் ஏற்படுகிறது என்றால் அதற்கு ஜிப்ரானின் பின்னணி இசை பெரும் பங்காற்றி இருக்கிறது. கோகுல் பினாய் ஒளிப்பதிவில் காரினுள் எடுக்கப்பட்ட காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. அதேபோல் கார் ஸ்டண்ட் காட்சிகளும் சிறப்பு.

ஒரு வித்தியாசமான சின்ன கதையைத்தேர்ந்தெடுத்த இயக்குநர், அதை இரண்டு மணி நேரப் படமாக கன்வெர்ட் செய்ய அமைத்திருக்கும் திரைக்கதையை இன்னமும் வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் செய்திருக்கலாம். அதேபோல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் திருப்பங்களைப் போல் படத்தின் பெரும்பகுதி காட்சிகளையும் திருப்பங்களுடன் கொடுத்திருந்தால் டிரைவர் ஜமுனா கண்டிப்பாகப் பேசப்பட்டிருப்பாள்.

டிரைவர் ஜமுனா - வேகம் தேவை!

aiswaryarajesh Driver jamuna moviereview
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe