ராயன் படத்திற்கு பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் இட்லி கடை படம் மூலம் இயக்கி நடித்து இருக்கிறார் நடிகர் தனுஷ். ராயனில் கேங்ஸ்டர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கி இருந்த தனுஷ் இந்த முறை இட்லி கடை மூலம் ஏழை நடுத்தர குடும்பத்தில் வசிக்கும் சராசரி எதார்த்த மனிதர்களின் வாழ்வியலை குடும்பங்கள் கொண்டாடும் படமாக கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார். அதில் அவருக்கு வெற்றி கிட்டியதா, இல்லையா? 

Advertisment

மதுரையில் இருக்கும் சங்கரபுரம் என்ற கிராமத்தில் ஒரு சிறிய இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார் ராஜ்கிரண். அவருடைய மகனான தனுஷ் சிறு வயது முதலே அப்பா ராஜ்கிரண் எப்படி எல்லாம் தொழில் பக்தியுடன் அந்த இட்லி கடையை நடத்துகிறார் என்பதை பார்த்து வளர்கிறார். ஒரு கட்டத்தில் அங்கிருந்து கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு பேங்க்காக்கிற்கு செல்லும் அவர் சத்யராஜ் மற்றும் அவருடைய மகன் அருண் விஜய்யின் மிகப்பெரிய ரெஸ்டாரண்டில் மேனேஜராக பணிபுரிகிறார். அவருக்கும் அருண் விஜய் தங்கையான ஷாலினி பாண்டேவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. தனுஷுக்கோ இந்த திருமணத்தில் பெரிதாக நாட்டமில்லை.

Advertisment

104

இந்த சூழலில் அவரது தந்தை ராஜ்கிரண் ஊரில் இறந்துவிட மீண்டும் கிராமத்துக்கு திரும்பும் தனுஷ் சடங்குகளை முடித்துவிட்டு பேங்க்காக்குக்கு செல்ல மறுக்கிறார். கூடவே அவரது தந்தை ராஜ்கிரணின் இட்லி கடையை தனுஷ் எடுத்து நடத்துகிறார். இதனால் கோபமடைந்த அருண் விஜய் வெளிநாட்டில் இருந்து அந்த கிராமத்துக்கே வந்து தனுசுக்கு பல்வேறு இன்னல்களை கொடுக்கிறார். இதைத்தொடர்ந்து அருண் விஜயின் இன்னல்களுக்கு இடையே ராஜ்கிரணை போல் அந்த இட்லி கடையை தனுஷ் வெற்றிகரமாக நடத்தினாரா, இல்லையா? அவர் ஏன் பேங்காக்குக்கு திரும்ப செல்லவில்லை? அருண் விஜய்க்கு தனுஷ் மேல் என்னதான் கோபம்? போன்ற கேள்விகளுக்கு விடையாக இட்லி கடையின் மீதி கதை அமைந்திருக்கிறது. 

ஒரு சிறிய இட்லி கடை பற்றிய கதையை வைத்துக்கொண்டு அதன் மூலம் எமோஷனல் கலந்த ஃபேமிலி டிராமாவாக இந்த படத்தை கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி அமைத்திருக்கிறார் இயக்குநர் மற்றும் நடிகரான தனுஷ். பொதுவாக நாயகர்களே இயக்குநர்களாக இருக்கும் பட்சத்தில் ஹீரோயிஸம் சற்று தூக்கலாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அதை எல்லாம் மாற்றிக் காட்டி முழுக்க முழுக்க அண்டர் பிளே செய்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் அதே சமயம் அனைத்து தரப்பு மக்களும் கனெக்ட் செய்யும்படி அவர்கள் எதார்த்த வாழ்வின் அம்சங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து பார்ப்பவர்களுக்கு ஒரு எமோஷனலான கண் கலங்க வைக்கும் படியான படமாக இந்த இட்லி கடை படத்தை கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார்.

Advertisment

106

நாம் சிறுவயதில் அம்மி கல்லில் மற்றும் ஆட்டுக்கல்லில் மாவாட்டி சட்னி செய்து சாப்பிட்டு அதே சமயம் கடைகளிலும் அதேபோன்ற இட்லிகளை சாப்பிட்ட நினைவுகளை தூண்டும் படியாக இருக்கும் இந்த திரைப்படம் யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக இருப்பது படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அனைத்து வயது உடையவரும் ஏதோ ஒரு வகையில் இந்த படத்தின் மூலம் தன் வாழ்வை கனெக்ட் செய்து கொள்ள முடியும். இது படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. படம் ஆரம்பித்து ஸ்லோ அன் ஸ்டெடியாக நகர்ந்து போகப்போக அதே வேகத்தில் மிகவும் எமோஷனல் கலந்த படமாக அதேசமயம் சற்றே விறுவிறுப்பான குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் இந்த படம் அமைந்து இருக்கிறது. படத்தில் பல்வேறு கிளீ ஷேக் காட்சிகள் இருக்கத்தான் செய்கிறது. அதேபோல் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய ஈகோ கிளாஷ் அம்சம் கொண்ட அதே பழிவாங்கல் கதைதான். இருந்தும் அதனுள் நாஸ்டால்ஜிக் மெமரிகளை தூண்டும் படியாக கதை அம்சம் இருப்பதால் படத்தை விட்டு நம்மை அகலாதபடிக்கு படம் பார்த்துக் கொள்கிறது. அதேபோல் அப்பா மகன் பாசமும், செய்யும் தொழிலே தெய்வம் என இருக்கும் எமோஷனலும் ஒரு சேர கலந்து கட்டி இருப்பது அனைத்து தரப்பு ரசிகர்களிடையே வரவேற்பை இந்த இட்லி கடை பெற்றிருக்கிறது.

முன்பு கூறியது போல் அதிக ஹீரோயிஸம் இல்லாத கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்றார் போல் அண்டர் பிளே செய்து சிறப்பான நடிப்பை வழக்கம்போல் வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் தனுஷ். அவரே இந்த படத்திற்கு இயக்குநராக இருக்கும் நேரத்திலும் எந்த ஒரு இடத்திலும் பில்டப் இல்லாமல் குடும்பங்களாக ரசிக்கும்படியாக இருக்கும் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்றார் போல் தன் நடிப்பையும் சிறப்பான முறையில் கொடுத்திருக்கிறார். இவருக்கு வழக்கம் போல் ஈக்குவலாக டப் கொடுத்து நடித்து கைதட்டல் பெற்று இருக்கிறார் நித்யா மேனன். இவருக்கு படத்தில் அதிக வசனங்கள் இல்லை, இருந்தாலும் தனக்கு கிடைத்த சின்ன சின்ன வசனங்களில் கூட முகபாவனைகள் எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் சிறப்பான நடிப்பை ஜஸ்ட் லைக் தட் போல் வெளிப்படுத்தி பல இடங்களில் தனுஷையே தூக்கி சாப்பிட்டு இருக்கிறார். அப்படியே கிராமத்து இன்னசென்ட் பெண்ணாக மாறியிருக்கும் நித்திய மேனன் பல இடங்களில் நெகிழவும் வைத்திருக்கிறார். தனுஷின் கூடவே வரும் நண்பராக இருக்கும் இளவரசு சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

105

வில்லனாக வரும் அருண் விஜய் வழக்கமான வில்லத்தனத்தை காட்டிவிட்டு சென்று இருக்கிறார். இன்னொரு நாயகியாக வரும் ஷாலினி பாண்டே சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். வழக்கமாக வில்லத்தனம் காட்டும் சத்யராஜ் இந்த படத்தில் பாசமிகு அப்பாவாக வந்து பல இடங்களில் மனதை கவர்கிறார். சில இடங்களில் எரிச்சலும் ஏற்படுத்துகிறார். தன் அனுபவம் நடிப்பின் மூலம் எந்தெந்த காட்சிக்கு எந்த அளவு எமோஷனல் தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்திருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் பார்த்திபன் நச் என அடித்து கைதட்டல் பெற்று இருக்கிறார். பொறாமைக் கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரகனி அந்த கதாபாத்திரமாகவே மாறி சிறப்பான முறையில் கவனம் பெற்று இருக்கிறார். வழக்கமாக லந்து செய்யும் கதாபாத்திரத்தில் வரும் அவர் அதை நிறைவாக செய்திருக்கிறார். அப்பா ராஜ்கிரண் சிறிது நேரமே வந்தாலும் கண்கலங்க வைத்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் கீதா கைலாசமும் கூடுதல் சிறப்பு. சிறப்பு தோற்றத்தில் வரும் பிரிகிடா வசனம் பேசாமலேயே கவனம் பெற்று இருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். 

ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் மண்மனம் மாறாமல் கிராமிய அம்சத்துடன் வந்திருக்கிறது. அதேபோல் பின்னணி இசையும் படத்திற்கு ஏற்றார் போல் சிறப்பான முறையில் கொடுத்திருக்கிறார். கிரண் கவுசிக் ஒளிப்பதிவில் இட்லி கடை சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கிராமம் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் காட்சிகளுக்குள் பிரம்மாண்டத்தை சிறப்பான முறையில் போதிய அளவு கொடுத்திருக்கிறார். 

ஒரு இட்லி கடையை வைத்துக் கொண்டு அதன் மூலம் ஒரு பாசப்பிணைப்பை சிறப்பான முறையில் கொடுத்திருக்கும் நடிகர் - இயக்குநர் தனுஷ் அகிம்சை சம்பந்தப்பட்ட விஷயத்தையும் அதனுள் நன்றாகவே புகுத்தி குடும்பங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்து கண்கலங்கி ரசித்து திரும்பும் படியாக சிறப்பான எமோஷனல் டிராமாவாக இட்லி கடையை கொடுத்து இருக்கிறார். அகிம்சை சம்பந்தப்பட்டு அடங்கிப் போகும் காட்சிகள் மட்டும் சிறிது ஓவர் டோஸ் ஆக சில இடங்களில் இருக்கிற்து. அதை மட்டும் சற்றே தவிர்த்து இருக்கலாம். 

இட்லி கடை - பூ போன்ற இட்லி!