Advertisment

திரில்லர் படம் மூலம் சிரிக்க வைத்தார்களா? இல்லையா? - ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ விமர்சனம்

Chennai City Gangster review

Advertisment

மீண்டும் ஒரு கலகலப்பான படம் மூலம் களத்தில் இறங்கி இருக்கிறார் வைபவ். இந்த முறை சுந்தர் சி பட பாணியில் நகைச்சுவை கலந்த திரில்லர் படமான இந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர் படம் மூலம் களத்தில் குதித்திருக்கும் அவர், அதை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறாரா, இல்லையா?

வைபவ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி மணிகண்டா ராஜேஷ் ஆகியோர் லிவிங்ஸ்டனின் பிட்சா கடையில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் பிட்சா கடையில் வேலை செய்து கொண்டே அவ்வப்போது திருட்டு வேலையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கராத்தே புகழ் உசைனி, இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக தனது வீட்டில் இருக்கும் நகை பணத்தை லிவிங்ஸ்டன் ஆட்களை வைத்து கொள்ளையடித்துவிட்டு பின்பு சிறிது காலம் கழித்து அந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறி கொள்ளை சம்பவத்தை அரங்கேற செய்கிறார். வைபவம் மற்றும் மணிகண்டா ஆகியோர் அந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு செல்லும் வழியில் அந்த பணப்பையை தொலைத்து விடுகின்றனர். பிறகு இந்த தவறை, சரி கட்ட ஒரு மிகப்பெரிய வங்கியை கொள்ளையடிக்க ஆனந்தராஜ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் குரூப்பிடம் உதவி கேட்கின்றனர். அவர்களும் இவர்களுக்கு உதவி செய்ய மொத்த கும்பலும் சேர்ந்து பேங்கை கொள்ளை அடிக்க திட்டம் போடுகின்றனர். இதையடுத்து இவர்கள் வங்கியை கொள்ளையடித்து பணத்தை திருடினார்களா, இல்லையா? உசைனி திட்டம் என்ன ஆனது? வங்கி கொள்ளைக்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன? என்பதை இந்த படத்தின் மீதி கதை.

Chennai City Gangster review

Advertisment

வெறும் நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு சுந்தர் சி பட பாணியில் பல்வேறு விதமான நகைச்சுவை நடிகர்களை உள்ளடக்கி ஒரு ஹைஸ்ட் காமெடி படத்தை கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கின்றனர் விளம்பரப்பட இயக்குனர்கள் விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேசவ் ஆகியோர். இரண்டு கொள்ளை சம்பவங்களை கையில் எடுத்து அதன் மூலம் திரைக்கதை அமைத்து அதனுள் காமெடி காட்சிகளை உட்பகுத்தி ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குனர்கள், அதை இன்னமும் சிறப்பாக செய்து நன்றாக சிரிக்கும்படி காட்சிகளை அமைத்திருந்தால் இந்த படம் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். என்னதான் நகைச்சுவை நடிகர்கள் மாறி மாறி காமெடி செய்தாலும் ஏனோ பார்ப்பவர்களுக்கு சிரிப்பு வர மறுக்கிறது. அதுவே இந்த படத்திற்கு சற்றே மைனஸ் ஆக அமைந்து பார்ப்பவர்களுக்கு அயற்சி ஏற்படுகிறது. சமீப காலங்களாக நல்ல நல்ல கதை தேர்வில் ஈடுபட்டு கிரிப்பிங் காமெடி படங்களை கொடுத்த வைபவ், இந்த படத்தில் ஏனோ கதை தேர்வில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் கதையையும் கதாபாத்திரத் தேர்வு செய்யும் சிறப்பாக செய்த இயக்குனர்கள் திரைக்கதையில் கோட்டை விட்டிருப்பது படத்திற்கு பாதகமாக அமைந்திருக்கிறது. இவர்களது பலவீனமான திரைக்கதையால் படத்துடன் நம்மால் அதிக நேரம் ஒட்ட முடியவில்லை. படத்தின் ஆறுதலாக ஆங்காங்கே சில காமெடி காட்சிகள் மட்டும் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.

வைபவ் தனக்கு என்ன வருமோ வழக்கம் போல அதையே இந்த படத்திலும் செய்து காமெடி செய்திருக்கிறார். இவருடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி மணிகண்டா ராஜேஷ் நன்றாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இவர்களுக்கு முதலாளியாக வரும் லிவிங்ஸ்டன் தனக்கு என்ன வருமோ அதை தன் அனுபவ நடிப்பால் சிறப்பாக கொடுத்து இருக்கிறார். படத்தின் நாயகியாக வரும் அதுல்யா வழக்கமான நாயகியாகவே வந்து செல்கிறார். இவருக்கு படத்தில் பெரிய வேலை இல்லை. வழக்கமான நாயகிகள் என்ன செய்வார்களோ அந்த வழக்கமான வேலையே இவரும் செய்து விட்டு சென்று இருக்கிறார். கொள்ளை கும்பல் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சுனில் ரெட்டி ஆகியோர் பல காட்சிகளில் சிரிப்பு மூட்டி ஓரளவு ஆறுதல் கொடுத்து இருக்கின்றனர். இவர்கள் வரும் காட்சிகள் ஓரளவு நன்றாகவே அமைந்து அதற்கு ஏற்றவாறு அவர்களது நடிப்பையும் சிறப்பாக கொடுத்து இருக்கின்றனர். போலீசாக வரும் பிப்பின் அண்ட் சாம்ஸ் ஆகியோர் தனக்கு என்ன வருமோ அதையே செய்திருக்கின்றனர். மற்றபடி உடனடித்த அனைவருக்கும் அவரவர் வேலையை நிறைவாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.

Chennai City Gangster review

டி.இமான் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை ஓரளவுக்கு நிறைவாக அமைந்திருக்கிறது. டோமி ஒளிப்பதிவில் துளையிட்டு கொள்ளை எடுக்கும் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பாடல் காட்சிகளும் கலர்ஃபுல்லாக இருக்கிறது.என்னதான் கதை தேர்வு பழையதாக இருந்தாலும் திரைக்கதை புதிதாக இல்லாமல் அடுத்தடுத்து என்ன நடக்க போகும் என்று யூகிக்கும்படி காட்சிகள் இருப்பதும், இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு காமெடி என்ற பெயரில் பார்ப்பவர்களை சோதித்து இருப்பதும் படத்திற்கு சற்றே மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. கதைக்கும் கதாபாத்திர தேர்வுக்கும் ஓரளவு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர்கள், திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் - ஃபன்னி கைஸ்!

moviereview vaibhav
இதையும் படியுங்கள்
Subscribe