Skip to main content

சின்ன மச்சான் செவத்த மச்சான் மட்டும் போதுமா? சார்லி சாப்ளின் 2 - விமர்சனம்

Published on 26/01/2019 | Edited on 30/01/2019

"உங்க ஃபோன் தர்றீங்களா... ஒரு கால் பண்ணணும்" என்று, தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணிடம் ஃபோனை வாங்கி அந்த மெஸேஜை டெலிட் பண்ணியிருந்தால் எளிதில் முடியும் வேலை. புறாவுக்கு போரா?

 

charlie chaplin 2



2002ஆம் ஆண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் இயக்குனர் சக்தி சிதம்பரத்தின் வெற்றிப் படங்களில் ஒன்று. இது மகத்தான நகைச்சுவைப் படம் என்று பாராட்டப்பட்ட படமில்லையானாலும் வெற்றிகரமான காமெடிப் படமென்பதால் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்பொழுது சார்லி சாப்ளின் 2, இதன் தொடர்ச்சியாக அல்லாமல் பிரபுதேவா - பிரபு காம்போ, கதைக்களத்தில் சில ஒற்றுமைகளுடன் வேறு படமாக வெளிவந்திருக்கிறது சார்லி சாப்ளின் 2.

ஆன்லைன் மேட்ரிமோனி நிறுவனம் நடத்தும் பிரபுதேவாவுக்குத்  திருமணம் செய்ய பெண் தேடுகிறார்கள் பெற்றோர். சமூக சேவகியான நிக்கி கல்ராணிக்கு ஒரு பெரிய நோய் இருப்பதாகவும் அதனால் பதினைந்து நாட்களில் உயிரிழக்கப்போவதாகவும் நினைத்து அவரையே திருமணம் செய்ய விரும்புகிறார் பிரபுதேவா. பிரபுவின் மகளான நிக்கி கல்ராணி நோயாளி இல்லையென்பது தெரிய வருகிறது. ஆனால், பிரச்சனை வேறு விதத்தில் வருகிறது. அந்தப் பிரச்சனையையும் பிரச்சனை தீர்வதையும் காமெடி சரவெடியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம்.

 

charlie chaplin 2 prabhu



அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் குரலில் தொடங்கும் படம் முதலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதில் 'எத்தனை வருஷமானாலும் அதே வயசுதான்' என்று பிரபுதேவா அறிமுகப்படுத்தப்படுகிறார். உண்மைதான், வயதாவதே தெரியவில்லை, முதல் பகுதியில் இருந்த பிரபுதேவாதான் இதிலும் தெரிகிறார். ஒவ்வொரு பாடலிலும் அவரது ஆட்டம்தான் ஹைலைட். பிரபு, தேடித் தேடி உண்ணும் ஃபுட்டியாக, நாயகி நிக்கியின் டேடியாக வருகிறார். தன்னைத் தானே கிண்டல் செய்துகொள்கிறார், மிக அளவாகவே சிரிக்கவைக்கிறார். சார்லி சாப்ளின் என்ற டைட்டிலுக்காக சில காட்சிகளில் சார்லி சாப்ளின் பாணியில் நடித்திருக்கிறார். அவர் நன்றாக நடித்தாலும் காட்சி முழுதாக ஈர்க்கவில்லை.  நிக்கி கல்ரானி, முறைப்பதும், நடனமாடுவதுமென நாயகி வேலையை நல்லபடியாக செய்திருக்கிறார். விவேக் பிரசன்னா, அரவிந்த், சிவா, உள்ளிட்ட பலரும் படத்தில் இருக்கும் காமெடி படமென்றாலும் சிறிதே சிரிக்கவைப்பவர் ரவி மரியா மட்டுமே.

படத்தில் அத்தனை குழப்பங்களையும் உருவாக்கும் அடிப்படை பிரச்சனை மிக பலவீனமாக இருப்பதால் அதன் மேல் நடக்கும் காமெடிகள் எளிதில் ரசிக்கவைக்கவில்லை. அதைத் தாண்டி சிரிக்க சில காட்சிகள் இருப்பது ஆறுதல். திருப்பதியில் HCL கட்டிடம், புது ஹாஃப் கோட் போட்டுகொண்டு ஃபுல் மேக்கப்புடன் செம்மரக்கட்டை வெட்டும் கடத்தல்காரர்கள், சாலையில் செல்பவர்களிடம் 'ஐ லவ் யூ' சொல்லி ரியாக்ஷன் பார்க்கும் சைக்காலஜி மாணவிகள், நம்பவே முடியாத குழப்பங்கள் என படம் முழுவதுமே சமரசங்களுடன் சற்று அலட்சியமாக எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
 

charlie chaplin



செந்தில் - ராஜலக்ஷ்மி உபயத்தால் 'சின்ன மச்சான், செவத்த மச்சான்' செம்ம ஹிட்டாகிவிட்டது. 'ஐ வாண்ட் டு மேரி யூ மாமா' பாடல் ஆட வைக்கும் ரகம். மற்றபடி அமரிஷின் இசை இன்னும் கொஞ்சம் அளவாக இருக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு காட்சியிலும் ஓவரான இசையை கொடுத்திருக்கிறார், கொஞ்சம் பொறுமை காக்கலாம். இசை என்பது அமைதியையும் சேர்த்தது என்பதை அம்ரிஷ் சற்று கருத்தில் கொள்ளவேண்டும். சௌந்தர் ராஜனின் ஒளிப்பதிவு திருவிழா போல வண்ணமயமாக இருக்கிறது. திருப்பதி காட்சிகள் நடப்பது திருப்பதியில்  என நம்பவைக்க முயற்சி செய்திருக்கிறது. படத்தொகுப்பாளர் சசிக்குமார் காட்சிகளை தொகுத்த விதத்திலும் சில எஃபெக்டுகளை பயன்படுத்தியும் படத்திற்கு காமெடி டோன் தந்திருக்கிறார்.

சார்லி சாப்ளின் 2 - சில நகைச்சுவை காட்சிகளும் சின்ன மச்சான் பாடலும். அது மட்டும் போதுமென்றால் ஓகே.                              

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கூட்டணி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
ar rahman prabhu deva movie update

பிரபுதேவா தற்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கேரளாவில் தற்போது படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் புதுப் பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ், பிரவீன் இலக் உள்ளிட்ட மூன்று பேர் இணைந்து தயாரிக்கின்றனர். பிகைண்ட்வுட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. யோகி பாபு, அஜுவர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு இசையமைக்கிறார். 

ar rahman prabhu deva movie update

ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் - பிரபு தேவா இருவரும் காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சாரக் கனவு உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!