Skip to main content

எப்படி இருக்கிறது அமலா பாலின் கடாவர்..? - விமர்சனம்

 

cadaver movie review

 

அமலா பால் முதன்முதலில் தயாரித்து நடித்துள்ள படம். பொதுவாக போலீஸ் படங்கள் என்றாலே அடிதடி, துப்பாக்கி, வன்முறை நிறைந்த மசாலா கமர்சியல் படங்கள் ஆகவே பெரும்பாலும் வரும். ஆனால் இந்தப் படத்திலோ தடாலடி வன்முறைகள் எல்லாம் விட்டுவிட்டு பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் செய்யும் போலீஸ் சர்ஜன் ஆக அமலா பால் நடித்திருக்கிறார். புதுமையாக ஏதோ ஒன்று செய்யவேண்டும் என்று முயற்சித்துள்ள அமலா பாலின் கடாவர் படம் வரவேற்பைப் பெற்றதா?

 

நகரத்தில் அடுத்தடுத்துக் கொடூரமான முறையில் கொலைகள் அரங்கேறி வருகின்றன. அந்தப் பிணங்களை இன்வெஸ்டிகேட் செய்து போஸ்ட்மார்ட்டம் செய்யும் போலீஸ் சர்ஜனாக வருகிறார் அமலா பால். இதற்கிடையே ஜெயிலில் இருக்கும் அருண் ஆதி அடுத்தடுத்து தான் யாரை கொலை செய்யப்போவதாக முன் கூட்டியே சுவற்றில் வரைந்து காட்டுகிறார். இவர் உள்ளே இருக்கும் பொழுது எப்படி வெளியே  இருக்கும் ஆட்கள் கொலை செய்யப்படுகிறார்கள்? இந்த கொலைகளுக்கு பின்னணியில் இருக்கும் நபர் யார்? அவருக்கும் இந்த கொலைகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதே கடாவர் படத்தின் மீதி கதை.

 

மருத்துவ மாணவர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்து ஆராய்ந்து தெரிந்து கொள்ள பயன்படுத்தப்படும் உடலுக்கு பெயர்தான் கடாவர். அப்படி இறந்து போன ஒருவரின் உடலில் இருந்து கிடைக்கும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் இறந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்து அதன் மூலம் குற்றவாளிகளை எப்படி ஒரு போலீஸ் சர்ஜன் கண்டுபிடிக்கிறார் என்பதை ஒரு த்ரில்லர் படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் அனூப் எஸ் பணிக்கர். படத்தின் கதையும், காட்சிகளும் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய டெம்ப்ளேட்டில் இருந்தாலும் திரைக்கதையும், காட்சியமைப்புகளும் கிரிப்பிங்க் ஆக அமைந்து கடைசிவரை நம்மை பார்க்க வைக்கிறது.

 

நாயகி அமலா பால், தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை மீண்டும் ஒருமுறை இப்படம் மூலம் நிரூபித்துள்ளார். கதை தேர்ந்தெடுப்பதிலும் சரி, அதில் பர்பாமன்ஸ் செய்வதிலும் சரி மிக புத்திசாலித்தனமான, ஆர்ப்பாட்டமில்லாத நேர்த்தியான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளார். அவர் சொந்த குரலில் டப்பிங் செய்து இருப்பது கூடுதல் பிளஸ் ஆக அமைந்து உள்ளது. நாயகனாக நடித்திருக்கும் இனிது இனிது புகழ் அருண் ஆதி தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்திற்கு நன்றாக நியாயம் செய்துள்ளார். காதல் காட்சிகளில் இன்னும் கூட சிறப்பாக செய்திருக்கலாம்.

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதுல்யா ரவி தனக்கு என்ன வருமோ அதை சிறப்பாக செய்து கவனம் பெற்றுள்ளார். எப்போதும் நெகட்டிவ் கேரக்டரில் வரும் ஹரிஷ் உத்தமன் இப்படத்தில் நல்ல போலீஸாக நடித்திருக்கிறார். அவரே பல காட்சிகளிலும் நாயகனாகவும் தெரிகிறார்.  இன்வெஸ்ட்டிகேட் செய்யும் காட்சிகளில் நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ரித்விகா, முனிஸ்காந்த், ராட்சசன் வினோத் ஆகியோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளனர். 

 

அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் பிணவறை சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் அருண் ஆதி சம்பந்தப்பட்ட ஆக்ஸிடென்ட் காட்சியும் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ரஞ்சன் ராஜ் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை பெட்டர். குறிப்பாக அமலாபால் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிறப்பான பின்னணி இசை மூலம் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளார்.

 

சில பல லாஜிக் ஓட்டைகள், நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய அரதப்பழசான கதை களம் என அயர்ச்சி ஏற்படக்கூடிய வகையில் பல விஷயங்கள் படத்தில் இருந்தாலும் நேர்த்தியான திரைக்கதைக்காகவும் ட்விஸ்ட்டுகளுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.


கடாவர் - டீசண்ட்