படத்தின் டைட்டில் கேட்ச்சியாக இருப்பதும், இன்றைய 2கே இளைய தலைமுறை காதல், பாசம், நேசம், குடும்பம் உறவுகளை மையப்படுத்தி எடுத்து இருப்பதாலும், பிக் பாஸில் வெற்றியாளராக இருந்த ராஜு அறிமுகமாகும் முதல் படம் என்பதாலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்புகளை இந்த பன் பட்டர் ஜாம் இனிப்பான முறையில் பூர்த்தி செய்ததா, இல்லையா?
இன்ஜினியரிங் கல்லூரி மாணவரான பிக் பாஸ் ராஜு தன் வீட்டிற்கு நல்ல பையனாகவும் கல்லூரிக்குச் சென்ற பின் அட்ராசிட்டி செய்யும் மாணவராகவும் இருக்கிறார். இவரும் சக மாணவியமான பவ்யாவும் காதலிக்கின்றனர். சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சராக இருக்கும் பவ்யாவை ராஜுவின் நண்பர் மைக்கேல் காதலிக்கிறார். ஆனால் பவ்யாவோ ராஜுவை காதலிக்கிறார். இதற்கிடையே ராஜுவின் அம்மா சரண்யா பொன்வண்ணனும் ராஜுவின் பக்கத்து வீட்டுப் பெண் ஆதியாவின் அம்மா தேவதர்ஷினியும் இணைந்து எப்படியாவது ராஜிவுக்கு தேவதர்ஷினியின் மகள் இன்னொரு நாயகியான ஆதியாவை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றனர். ஆதியாவோ வேறு ஒருவரை காதலிக்கிறார். இதைத்தொடர்ந்து ராஜுவுக்கும் ஆதியாவுக்கும் திருமணம் நடந்ததா, இல்லையா? ராஜு பவ்யா காதல் கைகூடியதா, இல்லையா? ராஜுவின் நண்பர் மைக்கேல் காதல் என்ன ஆனது? என்பதே இந்த பன் பட்டர் ஜாம் படத்தின் மீதி கதை.
கிட்டத்தட்ட நான்கு கதைகளை லேயர் பை லேயராக வைத்துக் கொண்டு பேரலலாக ஒவ்வொரு கதையையும் ஒரே நேரத்தில் திரைக்கதையில் மாற்றி மாற்றி வருவது போல் புத்திசாலித்தனமாக அமைத்து எந்த ஒரு காட்சியிலும் போர் அடிக்காத படி சிறப்பான முறையில் கலகலப்பான காமெடி நிறைந்த இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற ஒரு யூத் ஃபுல்லான குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்த பன் பட்டர் ஜாம் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராகவ் மிருதத்.
படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை மிகவும் பிரெஷ்ஷான காட்சிகள் மூலம் அதே சமயம் கலகலப்பான ஜனரஞ்சகம் நிறைந்த காமெடி காட்சிகள் உடன் கலந்து விறுவிறுப்பான படமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார். அதுவே இந்த படத்தை வெற்றி பெற செய்து கரை சேர்த்திருக்கிறது. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு விறுவிறுப்பான கதை அமைப்பை கொடுத்திருக்கும் இயக்குநர் மிகவும் புத்திசாலித்தனமாக படத்தில் நான்கு லேயர் கொண்ட கதைகளை ஒன்றன்பின் ஒன்றாக அழகாக திரைக்கதைக்குள் உட்பகுத்தி அதையும் சிறப்பான முறையில் ரசிக்கும்படி கொடுத்து இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப காதல் கதையை அனைவரும் ரசிக்கும்படியான படமாக கொடுத்து வெற்றி பெற்று வரவேற்பையும் இருக்கிறார்.
பிக் பாஸ் ராஜூவின் முதல் படமாக இந்த படம் அமைந்திருந்தாலும் ஏதோ பல படங்களில் நடித்த நாயகன் போல் மிகவும் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி குறிப்பாக காமெடி காட்சிகளில் ஆன்லைன் காமெடிகளை சிறப்பாக பஞ்சு வசனம் மூலம் கொடுத்து சிரிக்கவும் வைத்து பல இடங்களில் கலங்கவும் வைத்து கைத்தட்டல் பெற்று இருக்கிறார். இவரது நேர்த்தியான நடிப்பு படம் முழுவதும் சிறப்பான முறையில் அமைந்து படத்தையும் தாங்கி பிடித்து வெற்றி பெற உதவி இருக்கிறது.
இவருடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன் அடிக்கும் லூட்டி ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் தேவதர்ஷினி உடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன் சிறப்பான முறையில் லூட்டி அடிக்கும் காட்சிகள் படத்தில் கலகலப்பின் உச்சம். இவருக்கும் தேவதர்ஷினிக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருக்கிறது. வழக்கமான அப்பாவாக வரும் சார்லி வழக்கமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார்.
படத்தின் நாயகியாக வரும் பவ்யா சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். குறிப்பாக இன்னொரு நாயகியாக வரும் ஆதியா சிறப்பான தேர்வு. இவரது துருதுறு நடிப்பு கலகலப்பான பேச்சு ஆகியவை கதாபாத்திரத்துடன் நம்மை இணைக்க செய்து படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் மெயின் நாயகியாக இவரே தென்படுகிறார். இவருக்கும் ராஜுவுக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாகவே அமைந்திருக்கிறது. ராஜுவின் நண்பராக ஒரு மைக்கேல் வழக்கமான நடிப்பை காட்டி சென்று இருக்கிறார். ஆதியாவின் காதலனாக வரும் விஜய் டிவி புகழ் பப்பு சில காட்சிகளே வந்தாலும் வயிறு வலிக்க சிரிக்க செய்துவிட்டு சென்றிருக்கிறார். குறிப்பாக இவர் ஆதியா வீட்டுக்கு வரும் காட்சி தியேட்டரே அதிர்கிறது. அந்த அளவு காமெடி செய்து பார்ப்பவர்களை பரவசப்படுத்தி இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் விக்ராந்த் சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவர் ஒரு வேலையை சிறப்பாக செய்து படத்தையும் வெற்றி பெற செய்து இருக்கின்றனர்.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் காஜுமா பாடல் ஆட்டம் போட வைக்கிறது. அதேபோல் தன் பின்னணி இசை மூலம் காமெடி காட்சிகளை சிறப்பாக எலிவேட் செய்து பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறார். பாபு குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல். ஒரு காதல் கடந்த காமெடி படத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்திருக்கிறார்.
இன்றைய காலகட்ட 2கே காதலில் வரும் காதல், பெஸ்டி, பிரிவு, துக்கம், சோகம் அழுகை, சந்தோஷம் ஆகியவை அப்படியே எதார்த்தமான முறையில் காட்சிப்படுத்தி இருப்பதும் அதை பெரியவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையும், நம் வீட்டில் இருக்கும் தாய் தந்தை இதை புரிந்து கொள்ள எந்த அளவு முயற்சி செய்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு எந்த அளவு இந்த படம் பலன் அளித்திருக்கிறது போன்ற விஷயங்களை வைத்துக் கொண்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்படி ஒரு காமெடி கலந்த காதல் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக கொடுத்திருப்பது படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது.
பன் பட்டர் ஜாம் - காதல் கலகலப்பு!