Advertisment

உணர்ச்சி ததும்பலா? - ‘பொம்மை’ விமர்சனம்!

Bommai Movie Review

நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் எஸ்.ஜே. சூர்யா தயாரித்து நடித்துள்ள படம். அதுவும் பல்வேறு வெற்றிப் படங்கள் கொடுத்த இயக்குநர் ராதாமோகன் கூட்டணியில் உருவாகி ரிலீஸ் ஆகி இருக்கும் பொம்மை திரைப்படம் எந்த அளவு வரவேற்பைப் பெற்று இருக்கிறது?

Advertisment

நாயகன் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஒரு நோய் இருக்கிறது. என்ன நோய் என்றெல்லாம் கேட்கக்கூடாது!சிறுவயதிலேயே தாய், தந்தையரை இழந்த எஸ்.ஜே. சூர்யா மிகவும் சோகத்தில் இருக்கிறார். அவருக்கு ஆறுதலாய் எதிர் வீட்டுப் பெண் நந்தினி அவருடன் நட்பாக பழகுகிறார். இது காலப்போக்கில் ஒரு நல்ல சொந்தமாக அவர்களுக்குள் மாறும் தருவாயில் நந்தினி திடீரென காணாமல் போகிறார். இதையடுத்து மீண்டும் எஸ்.ஜே. சூர்யா மிகுந்த சோகத்துக்குள்உள்ளாகி மன நோயால் பாதிக்கப்படுகிறார். இதன் காரணமாக அவர் மிகவும் பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் ஒரு பொம்மையுடன் பேசிப் பழக ஆரம்பிக்கிறார். இதையடுத்து நடக்கும் விபரீதங்கள் என்ன? என்பதே பொம்மை படத்தின் மீதி கதை.

எஸ்.ஜே. சூர்யா ஒரு நல்ல நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த கதையே. இருந்தும் அவர் இன்னும் யாருக்குத்தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்க இம்மாதிரியான படங்களைத்தேர்வு செய்கிறார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. ஒரு கதையாக பார்க்கும் பொழுது பெரிதாக ஒன்றும் இல்லாத இப்படத்தில் தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து உலகத்தரம் வாய்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. சின்ன சின்ன காட்சிகளில் கூட வழக்கம் போல் மிக அபாரமாக பர்ஃபாமன்ஸ் செய்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இவருக்கு நிகராக நாயகி பிரியா பவானி சங்கரும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா - பிரியா பவானி சங்கர் கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் ஜஸ்ட் லைக் தட் போல் மிக எதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கின்றனர். இவர்கள் இருவருக்குள்ளும் இருந்த கெமிஸ்ட்ரி படம் முழுவதும் இருந்திருந்தால் இப்படம் நன்றாகப் பேசப்பட்டிருக்கும்.

எஸ்.ஜே. சூர்யா நண்பராக நடித்திருக்கும் டவுட்டு செந்தில் கடமைக்கு வந்து சென்று இருக்கிறார். எஸ்.ஜே. சூர்யாவின் முதலாளியாக நடித்திருக்கும் நடிகர் ஜானகிராமன் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். மலையாளம் கலந்து தமிழ் பேசும் இவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி அவரது வேலையை செவ்வனேசெய்துவிட்டு சென்றிருக்கிறார். இவர்களுடன் நடித்த இன்ன பிற இதர நடிகர்களும் அவரவர் வேலையை செய்திருக்கின்றனர்.

Advertisment

அபியும் நானும், மொழி, உப்பு கருவாடு, பயணம், காற்றின் மொழி போன்ற தரமான படங்களை கொடுத்த இயக்குநர் ராதா மோகன் இப்படத்தை ஏனோ கொஞ்சம் அயர்ச்சியுடன் கொடுத்து இருக்கிறார். ஒரு கதையாக பார்க்கும் பட்சத்தில் பெரிதாக எதுவும் இல்லாத இப்படத்தை தன் திரைக்கதை மூலம் ஒப்பேற்ற முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சியும் கை கொடுத்ததா என்றால் சற்று சந்தேகமே! ஒரு வலு இல்லாத கதையில் நடிப்பு என்ற ஒரு விஷயத்தை ஆழமாக வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் டிராவல் செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் டிராவல் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கூட கவனமாக இருந்திருந்தால் இப்படம் பேசப்பட்டு இருக்கும். படத்தில் நடித்த நாயகன், நாயகி இருவரும் மிகச் சிறப்பாக நடித்து படத்தை இருவரும் தூண் போல் நின்று காத்திருக்கின்றனர். அதுவே படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருந்தாலும் படத்தின் திரைக்கதையும் மற்ற நடிகர்களின் பங்களிப்பும் கதைக்கு சற்று பாதகமாக அமைந்திருப்பது மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. நாயகனும் இயக்குநரும் கதைத்தேர்வில் இன்னும் கூட கவனமாக இருந்திருக்கலாம்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவில் எஸ்.ஜே. சூர்யா பிரியா பவானி சங்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. கதை மற்றும் திரைக்கதை காட்டிலும் எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் கெமிஸ்ட்ரி மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பை மட்டும் ரசிப்பவர்களுக்கு பொம்மை ரசிக்க வைக்கும்.

பொம்மை - உணர்ச்சி குறைவு!

moviereview priya bhavani shankar bommai movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe