Skip to main content

பாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? கென்னடி கிளப் - விமர்சனம் 

Published on 25/08/2019 | Edited on 25/08/2019

தமிழ் சினிமாவில் இது பெண்கள் காலம். ஒரு பக்கம் நயன்தாரா, ஜோதிகா, திரிஷா, அமலாபால் என நாயகிகள் தொடர்ந்து தங்களுக்கு முக்கியத்துவமுள்ள பாத்திரங்களில் நடித்து படங்களும் வெற்றி பெற்று வர, இன்னொரு பக்கம் திரைக்குள்ளும் 'கனா', 'நேர்கொண்ட பார்வை' என பெண்களை மையப்படுத்திய கதைகள் அதிகம் வரத்தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இணையும் 'கென்னடி கிளப்' அந்தப் படங்கள் பெற்ற வெற்றியை பெறுமா?

 

sasikumar and kabadi team



'கில்லி'யில் அதிரடி கபடியைப் பார்த்துப் பழகியிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 'வெண்ணிலா கபடிக் குழு'வில் இயல்பான உண்மையான கபடியையும் கிராமத்துக் கபடி வீரர்களின் பின்னணி, காதல் உள்ளிட்ட வாழ்வியல் விசயங்களையும் மிக நேர்த்தியாகவும் இயல்பாகவும் கூறி முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார் சுசீந்திரன். தொடர்ந்து பல வெற்றிகளையும் சில தோல்விகளையும் தந்த அவர் மீண்டும் தனது மண்ணுக்குத் திரும்பிச் சென்று கபடி விளையாடியுள்ளார், இந்த முறை பெண்கள் டீமை வைத்து.

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சவரிமுத்து (பாரதிராஜா), அந்தப் பகுதியின் எளிய மாணவிகளுக்காக நடத்தும் கபடி பயிற்சி நிலையம் மற்றும் குழுதான் 'கென்னடி கிளப்'. அவர்களது வறுமையை விளையாட்டில் பெறும் வெற்றி, அதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மூலம் துடைக்கலாம் என்னும் லட்சியத்தோடு செயல்படுகிறார். அந்தப் பயணத்தில் எதிர்கொள்ளும் இடர்கள், அரசியல், அதை எப்படி கடக்கிறார்கள், அதற்கு முருகானந்தம் (சசிக்குமார்) எப்படி உதவுகிறார் என்பதே 'கென்னடி கிளப்'.

 

 

kennedy club



வறுமையைத் தாண்டி முன்னேற விளையாட்டு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நடத்தும் கிளப், கிண்டலடிக்கும் ஆண்களை கபடியில் மிரட்டும் பெண்கள் என நேர்மறையான பல விஷயங்களைக் கொண்டு தொடங்கும் படம், பின்னர் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள், அரசியல் என மிக வழக்கமான பாதையில் பயணிக்கிறது. கபடி டீமில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் உண்மையான கபடி வீராங்கனைகள் போல... நிஜமான கபடி போல மிரட்டுகிறார்கள். க்ரூப்புல டூப்பு போல ஓரிருவரும் இருக்கிறார்கள். டீமில் 'முருகா' என சசிகுமாரை அழைக்கும் அந்த 'துரு துரு' பெண்ணும், காதலனை மிரட்டும் அந்தப் பெண்ணும், இரட்டையர்களாக வரும் வீராங்கனைகளும் கவனம் ஈர்க்கிறார்கள். மற்ற யாருக்கும் அழுத்தமான பின்னணியோ, தனிப்பட்ட பாத்திரப்படைப்போ இல்லாதது குறை. வெளியிலும் சரி, களத்திலும் சரி கென்னடி கிளப் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பெரும்பாலும் நாம் ஏற்கனவே பார்த்துப் பழக்கப்பட்ட பிரச்சனைகளாக இருக்கின்றன.

கபடி ஆட்டங்கள், ஆண்டனியின் படத்தொகுப்பால் சுவாரசியமாக உருவாக்கப்பட முயற்சி செய்யப்பட்டிருக்கின்றன. இமானின் இசையில் 'கபடி கபடி' பாடல் அதிரடிக்கிறது. பின்னணி இசை கொஞ்சம் ஓவர்டோஸாகப் போகிறது. இமான் கொஞ்சம் கவனிக்கவேண்டும்.

 

 

kennedy club girl



சசிக்குமார், அமைதியாக, பக்குவமாக நடித்துள்ளார். பாரதிராஜா, உணர்ச்சிப் பிழம்பாகப் பொங்கியுள்ளார், ஆங்காங்கே தேவைக்கு அதிகமாகவும். கபடி வீராங்கனைகள் சிலர் மட்டும் கபடி தவிர்த்த பிற காட்சிகளில் சற்று செயற்கையாகத் தெரிகிறார்கள். படத்தில் நகைச்சுவைக்கான முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்திருக்கின்றன. கபடி வீராங்கனையை திருமணம் செய்யும் அந்த கிராமத்து இளைஞன் சொல்லும் காதல் கவிதைகள் மட்டும் சிரிக்கவைக்கின்றன. சூரியின் 'பரோடா', 'புரோட்டா' காமெடி சற்றும் சிரிக்கவைக்கவில்லை.

இயக்குனர் சுசீந்திரன் உருவாக்கும் படங்களில் நேர்மறையான நல்ல செய்திகள் இருக்கின்றன. ஆனால், முழுமையான சுவாரசியமான திரைப்படங்களாக இருக்கின்றனவா? புதிய விஷயங்களை பேசுகின்றனவா என்றால் அது கேள்விக்குறியாக இருக்கின்றன. மீண்டும் புத்துணர்ச்சியுடன் அவர் வர வேண்டும்.

கென்னடி கிளப் - பழகிய களம், சுமாரான ஆட்டம், ஆனாலும் பார்க்கலாம்.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“நமது காலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்” - சசிகுமார்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
sasikumar about aadujeevitham movie and director blessy

மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடு ஜீவிதம்’ நாவல் அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலி மற்றும் அதிலிருந்து அவர் எப்படி தப்பித்து இந்தியா வந்தார் என்பதை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது.

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் 10 வருடங்கள் கதை உருவாக்கத்திலிருந்து 6 வருடங்கள் படப்பிடிப்பிலிருந்து மொத்தம் 16 வருடங்கள் கழித்து இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக பிரித்விராஜ் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.

சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். முன்னதாகவே இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். அந்த வகையில் தற்போது, இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் இப்படத்தின் இயக்குநர் குறித்தும் ஆடு ஜீவிதம் படம் குறித்தும் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “பிளெஸ்சி சாரும் பின்னே நானும். சுப்ரமணியபுரம் மலையாளத் திரைக்கதை வெளியீட்டு விழாவில் அவருடைய நட்பு கிடைத்தது. திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் எனது ஈசன் திரைப்படத்தில் நட்புக்காக நடித்துக் கொடுத்தார். அப்பொழுதிருந்தே ஆடு ஜீவிதத்தின் கதையை மனதில் சுமந்து கொண்டிருந்தார். 

sasikumar about aadujeevitham movie and director blessy

பெரும் பாரமென அக்கதை அவரது இதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதை அவர் பேச்சில் உணர முடிந்தது. இத்தனை வருடம் கழித்து தனது பாரத்தை நமது இதயத்தில் ஏற்றி வைத்திருக்கிறார். திரைப்படத்தின் ஒற்றை வரியாக பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற குரல் எனக்குள் ஒலிப்பதைப் போல இருந்தது. பிருத்விராஜ் அக்குரலைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். மனதையும் உடலையும் ஒப்புக் கொடுத்திருக்கிறார். பின்னணியில் முன்னணியாக ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்த்தியிருப்பது மாபெரும் பேரிசை. எவரும் மறக்க முடியாத மறுக்க முடியாத பெருவெள்ளம். பிளெஸ்சி சாருக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். கோட் லைப் நமது காலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்” எனப் பதிவிட்டுள்ளார்.