ஒட்டகத்தை மையமாக வைத்து உலகத்தில் எடுக்கப்பட்ட 3வது மற்றும் ஆசியாவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம், பக்ரீத்! நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த நிலத்தை விற்காமல் அதில் விவசாயம் செய்துதான் பிழைக்கவேண்டும் என்ற கொள்கையோடு இருக்கும் விக்ராந்த் விவசாயம் செய்ய கடன் கேட்டு பாய் வீட்டுக்குச் செல்கிறார். போன இடத்தில் அவருக்கு கடனோடு சேர்த்து இலவசமாக ஒரு ஒட்டகக்குட்டியும் கிடைக்கிறது. அந்த ஒட்டகத்தை தன் வீட்டிற்குக் கூட்டிவந்து வளர்க்கிறார். அந்த ஒட்டகமும் இவர் குடும்பத்தோடு ஒன்றிவிடுகிறது. பிறகு சில மாதங்கள் கழித்து ஒட்டகத்திற்கு உடல்நலம் குறைய, அதை அதன் பிறப்பிடமான ராஜஸ்தானில் விட்டால்தான் சரியாகிவிடும் என்று விக்ராந்திற்கு தெரியவர, மனதை கல்லாக்கிக்கொண்டு சாராவோடு (ஒட்டகம்) ராஜாஸ்தானுக்கு பயணப்படுகிறார். பிறகு விக்ராந்த் ஒட்டகத்தை ராஜஸ்தானில் விட்டாரா, பயணத்தின்போது ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்தாரா என்பதே 'பக்ரீத்' படத்தின் பாசப்போராட்ட கதை.
விவசாயத்தைத் தொடர விவசாயிகள் படும் கஷ்டங்களை சுட்டிக் காட்டி ஆரம்பிக்கும் படம் போகப் போக கால்நடைகள் மேல் அவர்கள் காட்டும் அன்பையும், அக்கறையையும் மையப்படுத்தி நகர்கிறது. கால்நடைகளை கால்நடைகளாக பார்க்காமல் தன் குடும்பத்தில் ஒருத்தராக கருதும் விவசாயி அதன் மேல் காட்டும் பாசத்தையும், மனிதாபிமானத்தையும் விவரித்துள்ளது இப்படம். முதல்பாதி முழுவதும் கிராமம் மற்றும் அதை சார்ந்த வாழ்வியலில் ஒட்டகத்தின் வருகை, அதை அரவணைக்கும் மக்கள், என சந்தோஷமாக நகரும் படம் இரண்டாம் பாதி முழுவதும் ஒட்டகத்திற்கும், விவசாயிக்குமான பாசப்போராட்டம், ஒட்டகத்தை வைத்துக்கொண்டு வெகுதூரம் பயணப்படும்போது ஏற்படும் இன்னல்கள் என உணர்ச்சிப்பூர்வமாக நகர்ந்து முடிந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கதை வேகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நடிகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மட்டும் இயக்குனர் ஜெகதீசன் சுபு முக்கியத்துவம் அளித்து காட்சிப்படுத்தியுள்ளது அங்கங்கே அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் பயண காட்சிகளின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். இயக்குனரே ஒளிப்பதிவாளராக இருப்பதால் காட்சிகளின் தன்மைக்கேற்ப ஒளிப்பதிவை சிறப்பாகக் கையாண்டு, படத்தில் வரும் அந்தந்த ஊருக்கே நம்மை அழைத்துச் சென்றுள்ளார்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு நடிகர் விக்ராந்திற்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமைய வாய்ப்புள்ளது. மனைவி, குழந்தை, விவசாயம், கால்நடை என ஈர மனம் கொண்ட விவசாயியாகவே மாறியுள்ளார். கூடவே இவர் மனைவியாக நடித்திருக்கும் வசுந்தரா பாத்திரம் அறிந்து சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக இவர்களது மகளாக வரும் பேபி ஷ்ருத்திகா மிக இயல்பாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர், மோக்லி திவாரி, ரோகித் பதக், வீரேந்தர் ஆகியோர் படத்திற்கு தங்கள் நடிப்பால் உயிர் கொடுத்துள்ளனர்.
டி.இமான் இசையில் 'ஆலங்குருவிகளா' பாடல், மணிஅமுதவன் வரிகளில் மனதில் தங்குகிறது. 'லாரி லக்கி லாரி' பாடல் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்தோடு ஒன்றவைத்து ஜீவனை கூட்டியுள்ளது. ரூபனின் கத்திரி இன்னும்கொஞ்சம் கூட நீளத்தை வெட்டி குறைத்திருக்கலாம்
தேவர் பிலிம்ஸ் காலத்திலிருந்து எத்தனையோ விலங்குகள் சார்ந்த படங்களை பார்த்துப் பழகிய நமக்கு இந்த ஒட்டகப்படம் நிச்சயம் சில புது அனுபவங்களையும் நல்ல உணர்வையும் கொடுக்கும்.
பக்ரீத் - ஒட்டகத்தின் பாசப்போராட்டம்!