ADVERTISEMENT

அருண்விஜய்க்கு இதுவரை கிடைக்காத ஒரு விசயம்...! மாஃபியா சேப்டர் 1 - விமர்சனம்

12:46 PM Feb 21, 2020 | vasanthbalakrishnan

திரையுலகில் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகளாக இருப்பவர்... அதில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி சமீபமாக வெற்றிகளை ருசித்து வருபவர் அருண் விஜய். முதல் வெற்றியில் இருந்து அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையிலும் மிக கவனமாக இருக்கிறார். 'தடம்' வெற்றிக்குப் பிறகு அருண் விஜய் நடித்து வெளிவந்திருக்கும் படம் 'மாஃபியா - சேப்டர் 1'. மிக இளம் வயதில் தனது முதல் படத்தை இயக்கி, அதன் தரத்தாலும் வெற்றியாலும் தமிழ் திரையுலகின் கவனத்தை ஈர்த்த 'துருவங்கள் 16' கார்த்திக் நரேனின் இரண்டாம் படம். இப்படி எதிர்பார்ப்பு மிக்க ஒரு படமாக வெளிவந்திருக்கும் 'மாஃபியா', எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா?

ADVERTISEMENT



சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (Narcotics Control Bureau) இளம் அதிகாரி ஆர்யன் (அருண் விஜய்). இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை மருந்தை ஒழிப்பதை தனது லட்சியமாகக் கொண்டு சின்சியராக செயலாற்றுபவர். ஆனால், போதை மருந்து கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளிகளை நெருங்க முடிவதில்லை. இவரது டீமில் பிரியா பவானி சங்கர் மற்றும் ஒருவர். போதை மருந்து கடத்தல் மாஃபியா குறித்த முக்கியமான தகவல்களை புலனாய்ந்து வைத்திருக்கும் இவர்களது உயரதிகாரி திடீரென கொல்லப்படுகிறார். அருண்விஜய்க்கு சில முக்கிய தகவல்கள் தர இருந்த இன்னொருவரும் கொல்லப்பட, தேடலை துரிதமாக்குகிறார் அருண்விஜய். போதை மருந்து கடத்தல் மாஃபியாவின் முக்கிய புள்ளியை கண்டறிந்தாரா, போதை மருந்து புழக்கத்தை ஒழித்தாரா என்பதுதான் 'மாஃபியா - சேப்டர் 1'.

ADVERTISEMENT



போதை மருந்து பயன்படுத்துவோரின் தன்மைகள், போதை மருந்துகளின் வகைகள், அந்த நெட்வொர்க்கின் செயல்பாடுகள் என களத்தை நமக்கு அறிமுகம் செய்து மெல்லத் தொடங்குகிறது படம். அருண்விஜய்க்கு இதுவரை கிடைக்காத ஒரு ஸ்டைலான அறிமுகம், அறிமுகப் பாடல் இருக்கின்றன. செம்ம க்ளாஸான அந்த உருவாக்கமும் உடைகளுமே நம்மை கவர்கின்றன. தொடர்ந்து நடக்கும் கொலைகள், அதன் புதிர் பின்னணி, அதை அருண்விஜய் புலனாயும் விதம் என ஆரம்பக் காட்சிகள் நமக்குள் மிகப்பெரிய ஆர்வத்தை உண்டாக்குகின்றன. அந்த ஆர்வம் உருவாவதில் ஜேக்ஸ் பிஜாயின் இசைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. அருண்விஜய்யின் டீம், அடுத்தடுத்த அடிகள் எடுத்து வைக்கும்போது அவர்கள் வில்லன் பிரசன்னாவை சந்திக்கப்போகும் தருணத்தை நாம் மிகவும் எதிர்பார்க்கத் தொடங்குகிறோம். இப்படி, மிக மெதுவாக நகர்ந்து, ஆனாலும் நமக்குள் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது முதல் பாதி. அந்த எதிர்பார்ப்புக்கும் ஆர்வத்திற்கும் தீனி போடும் சுவாரசியமான சந்திப்போ, சண்டைக்காட்சியோ வராமலேயே முதல் பாதி முடிய சற்று அயர்ச்சி ஏற்படுகிறது. இரண்டாம் பாதியில் நடக்கும் எலியும் பூனையும் விளையாட்டு சுவாரசியமாக இருந்தாலும் நமக்குள் உருவாகிய அந்த ஆர்வத்திற்கு இணையாக இல்லை என்பதே உண்மை. உலகளாவிய ஒரு குற்றத்தின் இயக்கம் ஒரு சின்ன வட்டத்துக்குள் நிகழ்வது போல இருக்கிறது. படத்தின் முடிவில் வரும் ட்விஸ்ட், ஆச்சரியத்தை கொடுத்தாலும் படம் முழுவதும் ஏற்பட்ட சிறிய ஏமாற்றம் நீங்கவில்லை.


அருண்விஜய், தன்னை மிகப் பக்குவமாக மெருகேற்றுவது அவரது தோற்றத்திலும் நடிப்பிலும் நன்றாகவே தெரிகிறது. அந்த ஓப்பனிங் காட்சிக்கும் பாடலுக்கும் தகுதியானவராகவே இருக்கிறார். மெல்லிய வில்லத்தனத்தையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். பிரசன்னா, பெரும் பணக்கார வில்லனாக மிக எளிதாகப் பொருந்துகிறார். அவரது மென்மையான பேச்சும் மிடுக்கான வில்லத்தனமும் ரசிக்கவைக்கின்றன. இத்தனை ஸ்டைலான ஹீரோவும் வில்லனும் படமாக்கலும் அமைந்த படத்தில் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் மோதிக்கொள்ளும் காட்சிகள் இன்னும் சுவாரசியமாக இல்லையே என்பதுதான் ஏமாற்றத்தை அளிக்கிறது. பிரியா பவானி சங்கர், மாடர்ன் உடையில் ஸ்டைலாக ஸ்டண்ட் செய்கிறார். குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் பாராட்டத்தக்க வகையில் நடித்திருக்கிறார். அருண்விஜய் டீமில் இருக்கும் இன்னொருவர் அவ்வப்போது புன்னகைக்க வைக்கிறார்.



கோகுல் பினாயின் ஒளிப்பதிவும் ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பும் செம்ம க்ளாஸ். சண்டைக்காட்சிகளிலும் சேஸிங் காட்சிகளிலும் ஒளிப்பதிவு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, படம் முழுவதும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் உணர்வை அளிக்கிறது. ஒரு வகையில் ஆரம்ப காட்சிகளின் பின்னணி இசை மிக சிறப்பாக இருந்து ஏற்படுத்திய 'பெரிதாக ஒன்று நடக்கப்போகிறது' என்ற எதிர்பார்ப்பே படத்தின் பிற்பாதியில் நம்மை ஏமாற்றமடைய செய்கிறது.

நிஜத்திற்கு நெருக்கமான நிதானத்தில் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் கார்த்திக் நரேன். 'நார்க்கோஸ்' வெப் சீரீஸின் தாக்கம் சில இடங்களில் தெரிகிறது. நாயகனின் ரிங்டோனாக 'நார்க்கோஸ்' இசையை வைத்து அதை வெளிப்படுத்தியும் இருக்கிறார். 'மாஃபியா - சேப்டர் 1' இறுதியில் வரும் ட்விஸ்ட் சேப்டர் 2வுக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாம் பாகம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கவேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT