Skip to main content

தாத்தா, அப்பா, பேரன் காம்பினேஷனில் வெளியான 'ஓ மை டாக்' ரசிக்க வைத்ததா ..? - விமர்சனம்

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

arun vijays' oh my dog movie review

 

தெலுங்கில் எப்படி தாத்தா நகேஸ்வர் ராவ், அப்பா நாகார்ஜுனா, மகன் நாகசைதன்யா என மூன்று தலைமுறை நடிகர்கள் 'மனம்' படத்தில் ஒன்றாகத் திரையில் தோன்றி ரசிக்க வைத்தார்களோ, அதேபோல் தற்போது தமிழிலும் முதல் முறையாக தாத்தா விஜயகுமார், அப்பா அருண் விஜய், மகன் ஆர்ணவ் விஜய் மூவரும் இணைந்து திரையில் தோன்றியுள்ள படம் 'ஓ மை டாக்'. அதுவும் குழந்தைகளை மையப்படுத்தி சூர்யா தயாரிப்பில் ஓடிடியில் ரிலீசாகி உள்ள இந்த படம் எப்படி இருக்கிறது..?

 

ஊட்டியில் அப்பா விஜயகுமாருடன் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் அருண் விஜய். அதிக கடன் சுமையில் இருந்தாலும் இவரின் மகன் ஆர்ணவ் விஜய்யை இண்டர்நேஷனல் பள்ளியில் படிக்க வைக்கிறார். இதற்கிடையே மகன் ஆர்ணவ் விஜய் பார்வையற்ற ஒரு நாய்க்குட்டியை எடுத்துக்கொண்டு வந்து வளர்க்கிறார். சிம்பா எனப் பெயரிடப்பட்ட அந்த நாய் வளர்ந்து நாய் கண்காட்சி வரை செல்கிறது. நாய் கண்காட்சியில் தொடர்ந்து கோலோச்சி வரும் நடிகர் வினய்யின் நாயை விட சிம்பா நாய் சிறப்பாகச் செயல்பட, அதை ஜெயிக்க விடாமல் தடுக்கிறார் வில்லன் வினய். இந்தத் தடைகளை ஆர்ணவ் விஜய்யும், சிம்பா நாயும் எப்படித் தகர்த்தெறிந்தார்கள் என்பதே இப்படத்தின் மீதி கதை.

 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் குழந்தைகளையும், விலங்கையும் மையப்படுத்தி ஒரு படம் வெளியாகியுள்ளது. அதுவும் குழந்தைகளுக்கும், செல்ல பிராணி பிரியர்களுக்கும் என்னவெல்லாம் பிடிக்குமோ அதனை அப்படியே மனதில் நிறுத்தி ஒரு ஃபீல் குட் படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் சரோவ் சண்முகம். தடாலடியான திருப்பங்கள், அதிரடியான திரைக்கதை, ஆர்ப்பாட்டமான பஞ்ச் வசனங்கள் என எந்த விதமான கமர்சியல் அம்சங்களையும் படத்தில் உபயோகப்படுத்தாமல் குடும்பங்களுக்கும், சிறுவர்களுக்கும், பிடித்த வகையில் படத்தை ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர். குறிப்பாக சிறுவர்களையும், சிம்பா நாயையும் எந்தக் காட்சிக்கு எப்படிக் காண்பிக்க வேண்டுமோ அப்படி அழகாகக் காட்டி காட்சிகளுக்கு உயிரூட்டியுள்ளார். படம் ஆரம்பத்தில் சற்று சீரியல் போல் நகர்ந்தாலும் போகப்போக வேகமெடுத்து சீராகச் சென்று கரை சேர்ந்துள்ளது. அதேபோல் தகுதியானவர்களாகப் பார்க்கப்படுபவர்கள் மட்டுமே இவ்வுலகில் இருக்க வேண்டும் என்ற விதியை உடைத்து தகுதியற்றவர்களாகப் பார்க்கப்படும் நபர்களும் இவ்வுலகத்தில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் இப்படம் விதைக்கிறது.

 

தான் ஒரு கலை வாரிசு என்பதைத் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் நிரூபித்துள்ளார் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய். பாசமான காட்சிகளிலும், விளையாட்டு மிகுந்த குறும்புத்தனமான காட்சிகளிலும், நாயுடன் கொஞ்சி குலாவும் காட்சிகளிலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். இவருக்கு அப்பாவாக நடித்திருக்கும் அருண் விஜய் சற்று அடக்கி வாசித்தே நடித்துள்ளார். சரியான இடங்களில் அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி தன் மகனுக்கு நிறைய ஸ்பேஸ் கொடுத்துள்ளார். 

 

arun vijays' oh my dog movie review

 

தாத்தாவாக நடித்திருக்கும் விஜயகுமார், ஒரு நடுத்தர குடும்ப உறுப்பினராக தன் அனுபவ நடிப்பால் இயல்பாகத் தோன்றியுள்ளார். அருண் விஜய்யின் மனைவியாக வரும் மகிமா நம்பியார்க்கு அதிக வேலை இல்லை. இருந்தும் தனக்கு கிடைத்த ஸ்பேசில் போதுமான அளவு ஸ்கோர் செய்துள்ளார். பணக்கார வில்லனாக வரும் நடிகர் வினய் தமிழை தப்புத்தப்பாக பேசினாலும் அதிலும் வில்லத்தனம் காட்டுகிறார். இவரின் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அது கதையை நகர்த்திச் செல்ல உதவியுள்ளது. சிறிய கதாபாத்திரங்களில் வரும் சிறுவர்களும் நடிகர் சுவாமிநாதனும் அவர்களுக்குக் கொடுத்த வேலையை அழகாகச் செய்துள்ளனர்.

 

ஊட்டியையும் அதன் சுற்று வட்டாரத்தையும், அந்த பசுமை பாய்விரிப்பில் நாய்கள் கொஞ்சி விளையாடும் காட்சிகளையும் திறம்படக் கையாண்டு சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் கோபிநாத். நிவாஸ் கே பிரசன்னா இசையில் குழந்தைகளைக் கவரும்படியான பாடல்களும், நேர்த்தியான பின்னணி இசையும் படத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளது.

 

இந்தக் கோடை விடுமுறையில் சிறுவர்களும், செல்லப்பிராணி பிரியர்களும் விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு படமாக 'ஓ மை டாக்' அமைந்திருக்கிறது.

 

ஓ மை டாக் - சம்மர் ஸ்பெஷல்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Suriya  Jyothika to act together in movie after 18 years

சூர்யா - ஜோதிகா, கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான இவர்கள், இதுவரை 'பூவெல்லாம் கேட்டுப்பார்', உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி என 6 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

2006ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சில ஆண்டுகள் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். பின்பு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே  பாண்டிராஜ் இயக்கத்தில் 2015ல் வெளியான பசங்க 2 படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்தது. அப்போது 36 வயதினிலே படத்திற்காக கமிட்டாகியிருந்த நிலையில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் 18 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா - ஜோதிகாவே தங்களது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயிண்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இருவரும் இணைந்து ஒர்க்கவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஜோதிகா,  இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story

மகனின் திறமையைக் கண்டு ரசித்த சூர்யா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
suriya son dev got black belt in karate

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களை தவிர்த்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சூர்யாவின் மகன் தேவ், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். சென்னை அஷோக் நகரில், கராத்தே பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அகில இந்திய ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் சான்றிதழ் மற்றும் பிளாக் பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சூர்யாவின் மகன் தேவ் பங்கேற்று பிளாக் பெல்ட் பெற்றுள்ள நிலையில் நிகழ்ச்சிக்கு சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 61 மாணவர்களுக்கு பிளால் பெல்ட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

suriya son dev got black belt in karate

அப்போது தேவ் போட்டியில் கலந்து கொண்டு சண்டையிட்டதை சூர்யா ஆர்வமுடன் கண்டு ரசித்தார். மேலும் தனது போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சூர்யாவின் மகன் தேவிற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.