காலம் தொட்டு தமிழ் சினிமாவில் ஜாதி ஒழிப்பு திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் சில படங்கள் தாக்கத்தையும் பல படங்கள் காணாமலும் போயிருக்கின்றன. தற்பொழுது அந்த வரிசையில் வித்தியாசமான ஒரு கதைக்களத்தை வைத்துக்கொண்டு ஒரு ஜாதி ஒழிப்பு திரைப்படமாக இந்த பாம் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்த்தது?
ஜாதி மத பிரச்சனை காரணமாக காளகம்மாய்பட்டி என்ற கிராமம் கம்மாய்ப்பட்டியாகவும், காளப்பட்டியாகவும் இரண்டாகப் பிரிந்து விடுகிறது. அதில் கம்மாய் பட்டி உயர்ந்த ஜாதி ஆகவும், காளப்பட்டி தாழ்ந்த ஜாதியாகவும் மக்களிடையே கருதப்படுகிறது. இரண்டு கிராமங்களில் இருக்கும் மக்களும் அவரவருக்கு தனித்தனி குலதெய்வத்தை வழிபடுகின்றனர். இதனால் இரண்டு கிராமங்களுக்கு இடையே அடிக்கடி கலவரங்கள் ஏற்படுகிறது. இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகள் பலரும் முயன்று அவை தோல்வியில் முடிகின்றன. இதற்கிடையே ஊர் எதிர்ப்பை மீறி இரண்டு கிராமங்களை சேர்ந்த காளி வெங்கட்டும், அர்ஜுன் தாசும் நண்பர்களாக இருக்கின்றனர். ஒரு நாள் காளி வெங்கட் இறந்து விடுகிறார். அவரது பிணத்திலிருந்து அவ்வப்போது வாயு பாம் போல் வெளியேறுகிறது. இதனால் அவரது பிணத்தை வைத்துக்கொண்டு அந்த இரண்டு கிராம மக்களும் சேர்ந்து கொண்டு அவரை தெய்வமாக வழிபடுகின்றனர். அதில் காளி வெங்கட் உடம்பில் இருப்பது தங்கள் குலதெய்வம் தான் என இரு தரப்பும் மாறி மாறி சண்டையிட்டு கொள்கின்றனர். இந்த பிரச்சினையைக் கையில் வைத்துக்கொண்ட அர்ஜுன் தாஸ் காளி வெங்கட் ஆசைப்படி இரு கிராமத்தையும் பழையபடி ஒரு கிராமமாக ஒன்று சேர்க்கத் திட்டம் தீட்டுகிறார். அந்தத் திட்டம் நிறைவேறியதா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
ஒரு சிறுகதை போல் இருக்கும் இந்த வித்தியாசமான கதையை வைத்துக் கொண்டு காமெடி கலந்த விழிப்புணர்வு ஜாதி ஒழிப்பு படமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் விஷால் வெங்கட். கதை என்னவோ மிகவும் சிறியதாக இருப்பதால் அதை இரண்டரை மணி நேர படமாக மாற்ற இயக்குநர் மிகுந்த சிரமம் அடைந்திருக்கிறார். படம் ஆரம்பித்து காட்சிகள் வேகமாக நகர்ந்து பின் ஆங்காங்கே பல இடங்களில் ஸ்பீடு பிரேக்கர் போட்டு அப்படியே சில இடங்களில் ஜவ்வு போல் இழுத்து பின் மீண்டும் வேகம் எடுத்து முடிகிறது. இதை காமெடி படமாக எடுத்துக் கொள்வதா? அல்லது சீரியஸ் படமாக எடுத்துக் கொள்வதா என பார்ப்பவர்களுக்கு சற்றே குழப்பம் ஏற்படுவது போல் இருக்கிறது. இருந்தும் தான் சொல்ல வந்த விஷயம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயமாக இருப்பது படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இன்னமும் பல கிராமங்களில் குலதெய்வ வழிபாடு அதனால் நிகழ்த்தப்படும் ஜாதிய வன்கொடுமை தீண்டாமை ஆகியவர்களை ஒரு வித்தியாசமான கதையின் மூலம் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட். சில பல லாஜிக் மீறல்களை தாண்டி படம் விறுவிறுப்பாக நகர்ந்து அயர்ச்சி இல்லாத படி பார்ப்பவர்களுக்கு ரசிக்கும் படியான படமாக இந்த பாம் திரைப்படம் அமைந்திருக்கிறது.
வழக்கமாக வில்லத்தனம் காட்டி மிரட்டும் அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் சற்றே அண்டர் பிளே செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது கம்பீரமான வாய்ஸ் எங்கு தேவைப்படுமோ அந்த இடத்தில் மட்டும் சரியாக பயன்படுத்தி மற்ற இடங்களில் அந்த கதாபாத்திரமாகவே மாறி மிகவும் எதார்த்தம் நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் சிறப்பாக செய்து அந்த கதாபாத்திரமாகவே மாறி கைத்தட்டல் பெற்று இருக்கிறார் அர்ஜுன் தாஸ். படத்தின் இன்னொரு நாயகன் காளி வெங்கட் அவரே பிரதான நாயகனாகவும் ஒரு கட்டத்தில் மாறி கிட்டத்தட்ட பாதி படம் முழுவதும் பிணமாக நடித்து அவ்வப்போது பாம் போட்டு சிரிக்க வைக்கிறார் சிந்திக்கவும் வைத்திருக்கிறார். இவரின் வழக்கமான எதார்த்தம் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. வழக்கமான நாயகியாக வரும் சிவாத்மிகா வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார். ஊர் பெரியவர்களாக வரும் சிங்கம்புலி மற்றும் விலங்கு ரவி ஆகியோர் பல இடங்களில் எரிச்சல் ஊட்டும் படியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கின்றனர். சில காட்சிகளிலேயே வந்தாலும் நாசரும் அபிராமியும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து கவனிக்க வைத்திருக்கின்றனர். காமெடிக்கு பொறுப்பேற்று இருக்கும் பால சரவணன் ஆரம்பத்தில் காணாமல் போய்விட்டு கடைசி நேரத்தில் வந்து தனது இருப்பை சிறப்பாக காட்டியிருக்கிறார். படத்தின் பின்பகுதி காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். சிறுவனாக வரும் பூவை யார் கலங்க வைக்கிறார். மற்றபடி படத்தில் புதுமுகம் உட்பட பல நட்சத்திர பட்டாள்கள் நடித்திருக்கின்றனர். அவர்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார்கள்.
ராஜ்குமார் ஒளிப்பதிவில் பூஜை பிணம் கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பு. இந்தப் படத்திற்கு இமான் தான் இசையமைத்து இருக்கிறார் என்றால் நம்ப முடியவில்லை. பாடல்கள் சுமார் ரகம் பின்னணி இசை ஓகே.
ஒரு கதையாக பார்த்தால் மிகவும் சிறிய கதையாக இருப்பது படத்திற்கு சற்றே மைனஸ் ஆக அமைந்திருந்தாலும் ஒரு வித்தியாசமான கதையை வைத்துக்கொண்டு அதன் மூலம் சாதிய வன்கொடுமை தீண்டாமை போன்ற விஷயங்களை தைரியமாக வேறு ஒரு கோணத்தில் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி மக்களிடையே இருக்கும் ஒற்றுமை மட்டுமே இதற்கான தீர்வு என்ற மெசேஜை இந்த படம் மூலம் கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட். படம் முழுவதும் வாயு வெடிப்பு ஆங்காங்கே சிரிப்பை வர வைத்திருந்தாலும் சில இடங்களில் முகசுழிக்கவும் வைத்திருக்கிறது. அதற்காகவே இதற்கு பாம் என பெயரிட்டு இருக்கின்றனர். அது சில இடங்களில் ஒர்க் அவுட்டும் ஆகி இருக்கிறது.
பாம் - வெடி வீரியம் குறைவு!