Advertisment

இந்த முறையும் குழந்தை செண்டிமெண்டா? - அரண்மனை 4 விமர்சனம்

Aranmanai 4 Review

Advertisment

காஞ்சனா புகழ் ராகவா லாரன்ஸ்க்கு பிறகு அதே பேய்க் காமெடி ஃபார்முலாவில் வெற்றி கொடி நாட்டி அவ்வப்போது சறுக்கல்கள் ஏற்படும் சமயங்களில் அதைத்தொடர்ந்து தன் பிரம்மாஸ்திரமாக உபயோகப்படுத்தி அவ்வப்போது கம்பேக் கொடுத்து வரும் இயக்குநர் சுந்தர் சி அரண்மனை 4 படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் கோதாவில் குதித்திருகிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா?

வக்கீலாக இருக்கும் சுந்தர் சி தன் அத்தை கோவை சரளாவுடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதில் இவரது தங்கை தமன்னா சந்தோஷ் பிரதாப்பை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார். இதனால் கோபமடையும் சுந்தர் சி அவரை விட்டுப் பிரிந்து விடுகிறார். ஆண்டுகள் பல செல்ல ஒரு காட்டுக்கு நடுவில் இருக்கும் அரண்மனையில் ஒரு மகன் மகளோடு வாழ்ந்து வரும் தமன்னா சந்தோஷ் தம்பதியினர் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றனர். விஷயத்தை கேள்விப்பட்ட வக்கீல் சுந்தர் சி அந்த அரண்மனைக்கு துப்பு துலக்க வருகிறார். வந்த இடத்தில் அவர்களது இறப்புக்கு பேய் காரணம் எனக் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து தமன்னாவின் குழந்தைகளை அந்தப் பேய்க் கொல்ல துடிக்கிறது. அந்தப் பேயிடம் இருந்து குழந்தைகளை சுந்தர் சி காப்பாற்றினாரா, இல்லையா? அந்தப் பேய் ஏன் தமன்னா சந்தோஷ் தம்பதியினரை கொலை செய்தது? என்பதே இப்படத்தின் மீதி கதை.

எப்போதெல்லாம் சறுக்கல்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அரண்மனை பாகம் படங்கள் மூலம் கம் பேக் கொடுப்பதை சுந்தர் சி வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் அரண்மனை 4 பாகம் திரைப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தி வெற்றிபெற்று மீண்டும் சுந்தர் சிக்கு கம்பேக் கொடுத்து இருக்கிறது. இவரின் முந்தைய அரண்மனை படங்களைக் காட்டிலும் இப்படம் இன்னும் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் உருவாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. காமெடி காட்சிகளைக் காட்டிலும் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாகவும், தரமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் கூடிய அழகான செண்டிமெண்ட் காட்சிகளோடு ரசிக்க வைத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது. அரண்மனை பாகங்களில் வழக்கமாக இருக்கும் பெரும் கூட்டத்தை இப்படத்தில் தவிர்த்து விட்டு தேவையான நடிகர்களை மட்டும் வைத்துக்கொண்டு தேவையில்லாத பாடல்களையும் தவிர்த்து விட்டு படத்தின் கதை மற்றும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதையும் சிறப்பாக அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார். இயக்குநர் சுந்தர் சி. குறிப்பாக கிராபிக்ஸ் காட்சிகளும் பேய் சென்டிமென்ட் காட்சிகளும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தை கரை சேர்த்திருக்கிறது. இருந்தும் காமெடி காட்சிகளில் மட்டும் இன்னும் கூட சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் முதல் பாதியில் இவை ஓரளவு சிரிக்க வைத்தாலும் இரண்டாம் பாதியில் சற்று சோதிக்கவும் வைத்திருக்கிறது. அதேபோல் மொத்தமாக பார்க்கும் பட்சத்தில் முதல் பாதி சிறப்பாகவும் இரண்டாம் பாதி சற்றே மெதுவாக ஆரம்பித்து கிளைமாக்சில்வேகம் எடுத்து சார்ந்தோர் ரசிகர்களுக்கு திருப்திகரமான படமாக அமைந்திருக்கிறது.

Advertisment

படத்தில் நாயகன், நாயகி என ஸ்டீரியோடைப் விஷயங்களை தவிர்த்து விட்டு கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. அண்ணன் தங்கையாக வரும் சுந்தர் சி தமன்னா ஆகியோரது நடிப்பு வழக்கம்போல் சிறப்பாக அமைந்திருக்கிறது. கிளாமர் விஷயங்களை தவிர்த்து விட்டு தாய்ப்பாசம், அண்ணன் பாசம் என நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார் நாயகி தமன்னா. இவரின் பரிதாபமான முக பாவனைகளும் அதற்கு ஏற்றார் போல் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பும் சிறப்பாக அமைந்து பார்ப்பவர்களுக்கு அனுதாபம் ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிறப்பான நடிப்பு மூலம் கண்கலங்க வைத்திருக்கிறார். காமெடி காட்சிகளுக்கு பொறுப்பேற்றிருக்கும் யோகி பாபு, விடிவி கணேஷ், சேசு, டெல்லி கணேஷ், கோவை சரளா ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். இவர்கள் காமெடி பல இடங்களில் சோதிக்க வைத்தாலும் சில இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் மிரட்டலாக மிரட்டி விட்டு சென்றிருக்கிறார் இன்னொரு நாயகன் சந்தோஷ் பிரதாப். அதேபோல் சில காட்சிகள்வந்தாலும் மனதில் பதியும்படி நடித்திருக்கிறார் ராஷி கண்ணா. தமன்னாவின் குழந்தைகளாக நடித்திருக்கும் குட்டீஸ் கியூட்டாக இருக்கின்றனர். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர்.

ஹிப் ஹாப் தமிழன் ஆதி இசையில் தமன்னா குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஜோஜோ பாடல் மனதை வருடுகிறது. அதேபோல் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் இரவு நேரம் சம்பந்தப்பட்ட காட்சிகளும், பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளும், கிராபிக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தனக்கு ஏற்படும் சறுக்கல்களை சரி செய்யும் சமயங்களில் எப்படி தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு வர வைத்து கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற ஃபார்முலாவை கரைத்து குடித்து அதை மற்ற இயக்குநர்களுக்கும் எடுத்துக்காட்டாக இப்ப படம் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. இப்போது இருக்கும் இயக்குநர்கள் இவரைப் பார்த்து எப்படி வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்ற யுக்தியை கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அளவு ரசிகர்கள் பல்ஸ் சை சரியாக பிடித்து ஏற்கெனவே பார்த்து பழகிய கதை அம்சமாக இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்து படத்தை வெற்றி பெற செய்து இருக்கிறார். அதேபோல் ரசிகர்களை எந்த சமயத்திலும் தியேட்டருக்கு வரவைப்பதில் தான் ஒரு வல்லவர் என்பதை இப்படம் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் சுந்தர் சி.

அரண்மனை 4 - சார்ந்தோருக்கு பரவசம் நிச்சயம்!

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe